சுந்தரர் திருவாரூருக்குப் பயணித்துச் செல்லுகையில், அடியவர்களை வரிசைப்படுத்தித் தொகுக்கும் ஒப்புமையில்லா 'திருத்தொண்டர் தொகையினை' நம் சுந்தரனார் பாடவிருக்கும திருத்தலமாதலால், தியாகேசப் பரம்பொருள் ஆரூர் அன்பர்களின் கனவில் தோன்றி 'ஆராத காதலால் நாமழைக்க வரும் ஆரூரனை மகிழ்வுடன் சென்று எதிர்கொள்வீர்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார்.
(திருமலைச் சருக்கம் - பாடல் 264):
தேராரும் நெடுவீதித் திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின்நம் ஆரூரன் நாமழைக்க
வாராநின்றான்அவனை மகிழ்ந்தெதிர் கொள்வீரென்று
நீராரும் சடைமுடிமேல் நிலவணிந்தார் அருள்செய்தார்
துயிலெழும் அன்பர்கள், தனிப்பெரும் தெய்வமான ஆரூர் இறைவரே இவ்விதம் எழுந்தருளி வந்து திருத்தொண்டர் ஒருவரை எதிர்கொள்ளுமாறு அருளுவாராயின் இனி அச்சுந்தரனாரே நாம் போற்றித் தொழுதற்குரிய தலைவராவார் என்று வியந்து போற்றி, விண்ணுலகமே இறங்கி வந்ததென்று எண்ணுமாற் போல் அந்நகரினை அலங்கரிக்கத் துவங்குகின்றனர்.
(திருமலைச் சருக்கம் - பாடல் 265):
தம்பிரான்அருள்செய்யத் திருத்தொண்டர்அது சாற்றி
எம்பிரானார் அருள்தான் இருந்த பரிசிதுவானால்
நம்பிரானார்ஆவார் அவரன்றே எனு(ம்) நலத்தால்
உம்பர் நாடிழிந்ததென எதிர்கொள்ள உடனெழுந்தார்.
திருவீதிகள் தோறும் நீண்ட பெரிய கொடிகளோடு கூடிய மாவிலைத் தோரணங்களை அமைத்து, பாக்கு; வாழை மரங்களை நாட்டி, நிறைகுடங்களையும்; நெடிய அழகிய திருவிளக்குகளையும் வாயில்கள் தோறும் வரிசையாய் விளங்கச் செய்து, திண்ணைகளை சந்தனக் குழம்பால் மெழுகி, நறுமணம் மிக்க நன்னீரினை எங்கும் தெளித்துக் கோலமிட்டு, நீண்ட மலர்ப் பந்தல்களை ஆங்காங்கே அழகுற அமைத்து, பேரிகை முதலிய வாத்தியங்கள் முழங்க, மங்கல இசைப் பாடல்களைப் பாடியவாறும், மகளிர் மேடைகள் தோறும் நடனம் புரியும் நிலையிலும் சென்று வன்தொண்டரை எதிர் கொண்டு வணங்குகின்றனர்.
சுந்தரரும் அத்திருக்கூட்டத்தினரை வணங்கி மகிழ, அந்நிலையிலேயே 'எம்மையும் ஆள்வரோ கேளீர்?' எனும் வினாக்குறிப்புடன் கூடிய திருப்பதிகத்தால் ஆரூர் மேவும் ஆதி மூர்த்தியைப் போற்றியவாறே திருவீதிகளில் முன்னேறிச் செல்கின்றார்,
(திருமலைச் சருக்கம் - பாடல் 269):
வந்தெதிர் கொண்டு வணங்குவார்முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்து
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி
எந்தைஇருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும்
சந்த இசைப்பதிகங்கள் பாடித் தம்பெருமான் திருவாயில் சார்ந்தார்
(சுந்தரர் தேவாரம்: திருவாரூர்: முதல் திருப்பாடல்)
கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன்,
வரையின் மடமகள் கேள்வன், வானவர் தானவர்க்கெல்லாம்
அரையன், இருப்பதும் ஆரூர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
No comments:
Post a Comment