சுந்தரர் (வட திருமுல்லைவாயிலில் துயர் களையுமாறு விண்ணப்பித்தல்):

(1)
ஒற்றியூர் தல எல்லையில் சுந்தரனாருக்கு இரு கண் பார்வையும் மறைகின்றது, ஆங்காங்கே இருப்போரிடம் வழிகேட்டவாறு திருவாரூர் நோக்கி பயணித்துச் செல்கின்றார்.  இப்பயண மார்க்கத்தில் முதற்கண் வட திருமுல்லைவாயிலைச் சென்று சேர்கின்றார். அங்கு எழுந்தருளியுள்ள மாசிலாமணீஸ்வரப் பரம்பொருளைப் 'திருவும் மெய்ப்பொருளும்' எனும் திருப்பதிகத்தால் பணிந்தேத்தி, 'அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே' என்று உளமுருகி விண்ணப்பிக்கின்றார், 
-
(சுந்தரர் தேவாரம் - வட திருமுல்லைவாயில் - திருப்பாடல் 1)
திருவும்மெய்ப் பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள் என்றெண்ணி
ஒருவரை மதியா(து) உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ் திருமுல்லை வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

(2)
3ஆம் திருப்பாடலில் 'சங்கிலிக்காக என்கண் கொண்ட பண்ப' என்று நயம்படக் குறிக்கின்றார், 
-
தண்பொழில் ஒற்றி மாநகருடையாய் சங்கிலிக்கா என்கண் கொண்ட
பண்பநின் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

(3)
4ஆம் திருப்பாடலில் 'திருப்புகழ்' எனும் சொல்லாடலை முதன்முதலாய்த் திருமுறைகளில் கைக்கொள்கின்றார், 
-
செந்நெலங்கழனி சூழ் திருமுல்லைவாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலம் தமிழால் பாடுவேற்(கு) அருளாய் பாசுபதா பரஞ்சுடரே

(4)
6ஆம் திருப்பாடலில், 'ஐயனே குற்றங்களைக் குணமாகக் கொண்டருளும் நின் கொள்கையால் அடியனேன் மிகைபட சில செயல்களைப் புரிந்து விட்டேன்! உன் திருவடிச் சார்பன்றி மற்றொன்றில் சிறிதும் பற்று வையாத எளியேனின் செயலை இவ்வொருமுறை பொறுத்தருள மாட்டாயோ?' என்று உளமுருகி முறையிட்டுப் பணிகின்றார், 
-
மற்றுநான் பெற்றதார் பெறவல்லார் வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும்  கொள்கையால் மிகைபல செய்தேன்
செற்று மீதோடும் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

(5)
7ஆம் திருப்பாடலில், 'முல்லைவாயில் முதல்வனே, இரவும் பகலும் உன் திருவடிக்கே தொண்டு புரிபவனாகிய எளியேனுக்கு இரங்காயோ?' என்று கல்லும் கசிந்துருகும் தண்மையில் பாடுகின்றார், 
-
திணிபொழில் தழுவு திருமுல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

(6)
8ஆம் திருப்பாடலில், 'முல்லைவாயில்உறை ஆதியே, அன்று வெண்ணைநல்லூரில் நாயினேனை வலிந்து வந்த ஆட்கொண்டருளிய வள்ளலே, சற்றேனும் திருக்கண் பாராயோ?' என்று பலப்பல உரைத்து மன்றாடித் தொழுகின்றார் நம் வன்தொண்டப் பெருந்தகையார், 
-
நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே உம்பரார் தொழுதேத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன் மாளிகைசூழ் திருமுல்லைவாயில் தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

No comments:

Post a Comment