சுந்தரர் (ஒற்றியூர் திருக்கோயிலில் சங்கிலிப் பிராட்டியாருடன் ஒரு காதல் திருக்காட்சி):

(1)
சுந்தரர் திருவொற்றியூர் ஆலயத்தில் ஆதிபுரீஸ்வரப் பரம்பொருளைத் தரிசித்துப் பணிகின்றார். பின்னர் ஆலய வளாகத்துள் பல்வேறு திருப்பணிகள் புரிந்திருப்போரை ஆங்காங்கே தொழுதவாறே மலர் மண்டபத்துள் செல்கின்றார். அங்கு இறைவர்; இறைவிக்கான திருமாலைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கும் அடியவர் பெருமக்களைப் பணிந்து செல்லுகையில், பண்டைய விதிப்பயன் கூட்டுவிக்க, திரையினைக் கணநேரம் விலக்கி; அது வரையில் தொடுத்திருந்த மாலைகளைக் கொடுத்துப் பின் மின்னலென மறையும் சங்கிலிப் பிராட்டியாரைக் காணப் பெறுகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 226):
அன்பு நாரா அஞ்செழுத்து நெஞ்சு தொடுக்க அலர்தொடுத்தே
என்புள் உருகும் அடியாரைத் தொழுது நீங்கி வேறிடத்து
முன்பு போலத் திரைநீக்கி முதல்வர் சாத்தும் பணிகொடுத்து
மின்போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண்ணுற்றார்

(2)
மன்மதனாரின் அம்புகள் ஒருங்கே பாய்ந்தது போன்றதொரு காதலுணர்வு மேலிட, அதனைத் தரிக்க ஒண்ணாதவராய் அங்கிருந்து நீங்கிச் செல்கின்றார். அருகிருப்போரிடம் 'இம்மங்கை யார்?' என்று வினவ, அவர்களும் 'சங்கிலியார் எனும் இக்கன்னிகையார் பெருகும் தவச்சிறப்பினால் முக்கண் முதல்வரின் திருவடிப் பணியினைப் பேணி நிற்பவர்' என்றுரைக்கின்றனர். உடன் தம்பிரான் தோழரும் 'முன்னர் திருக்கயிலையில் இரு மாதரை நோக்கிய தன்மையால் எய்தியுள்ள இப்பிறப்பில், திருவாரூர்ப் பரவை ஒருத்தியெனில் இவள் மற்றொருவள் போலும்' என்றெண்ணித் தளர்வுறுகின்றார் (குறிப்பு: சங்கிலியார் வன்தொண்டனாரைக் கண்ணுற்றதாக சேக்கிழார் பெருமானார் குறிக்கவில்லை),  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 229):
அருகு நின்றார் விளம்புவார் அவர்தாம் நங்கை சங்கிலியார்
பெருகு தவத்தால் ஈசர்பணி பேணும் கன்னியார்என்ன
இருவரால் இப்பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பரவை ஒருத்திஇவள் மற்றையவளாம் என மருண்டார்

(3)
'மலர்களோடு என் உயிரையும் சேர்த்துப் பிணைத்து வருத்தும் இவளைக் கொன்றை சூடும் அண்ணலாரிடம் விண்ணப்பித்துப் பெறுவேன்' என்றெண்ணியவாறு, மீண்டுமொரு முறை திருக்கருவறையை நோக்கிச் செல்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 230):
மின்னார் சடையார் தமக்காளாம் விதியால் வாழும் எனைவருத்தித்
தன்னார் அருளால் வரும்பேறு தவத்தால் அணையா வகைதடுத்தே
என்னாருயிரும் எழில்மலரும் கூடப் பிணைக்கும் இவள்தன்னைப்
பொன்னார் இதழி முடியார்பால் பெறுவேன் என்று போய்ப் புக்கார்

No comments:

Post a Comment