சுந்தரர் (திருவாரூர் திருக்கோயிலுள் காதலியாரைத் தேடிச் செல்லுதல்):

சுந்தரர் ஆரூர் ஆலயத்தினின்றும் வெளிவருகையில், திருக்கோயிலுள் செல்லும் பரவையாரைக் கண்டு காதல் கொள்கின்றார். மீண்டுமொரு முறை ஆலயத்துள் சென்று தியாகேசப் பரம்பொருளிடம் பரவையாரைத் தந்தருளுமாறு விண்ணப்பிக்கின்றார்.

(1)
பின் கருவறையினின்றும் நீங்கி 'என் இன்னுயிரோடு கலந்த அன்னமாகிய பரவை எவ்வழியே சென்றாள்' என்று ஆலய வளாகத்துள் தேட முனைகின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 297) 
அவ்வாறு பணிந்தேத்தி அணியாரூர் மணிப்புற்றின்
மைவாழும் திருமிடற்று வானவர்பால் நின்றும்போந்து
எவ்வாறு சென்றாள்என் இன்னுயிராம் அன்னமெனச்
செவ்வாய்வெண் நகைக்கொடியைத் தேடுவாராயினார்

(2)
வன்தொண்டனார் காதலியாரைத் தேடிச் சென்ற அரியதோர் நிகழ்வினைப் பின்வரும் 3 திருப்பாடல்களில் விவரித்துப் போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார், 

வினைகளை வேரறுத்தருளும் சிவபெருமானின் மீது மட்டுமே அன்பு பூண்டிருந்த என் உள்ளத்தில், அதற்கு இணையானதோர் பெருவிருப்பினைத் தோன்றுமாறு செய்து; என் சிந்தையையும் தன்வயமாக்கிய, திருவருள் வடிவினளாகிய அப்பரவை எவ்வழியே சென்றாள்?  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 298) 
பாசமாம் வினைப் பற்றறுப்பான் மிகும்
ஆசை மேலுமொர்ஆசை அளிப்பதோர்
தேசின் மன்னிஎன் சிந்தை மயக்கிய
ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே

(3)
விண்ணோர் நாயகரான ஆரூர் முதல்வரின் திருவடிகளையன்றிப் பிறிதொன்றினை விரும்பியறியாத என் உள்ளத்தில், நிலையிலாத விருப்பமொன்றினைத் தோற்றுவித்து வாட்டமுறச் செய்து, கற்பகக் கோடிபோலும் கடந்து சென்ற, திருவருள் வடிவினளாகிய அப்பரவை எவ்வழியே சென்றாள்?  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 299) 
உம்பர் நாயகர் தம்கழல் அல்லது
நம்புமா(று) அறியேனை நடுக்குற
வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கிஇன்று
ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே

(4)
வினைத்தொடர்பினால் பிறவியையும், பின்னர் முத்தியையும் நல்கியருளும் ஆரூர் அண்ணலாரின் திருவடிகளை மட்டுமே காதலுடன் போற்றிவந்த என் சிந்தையில் மயக்கத்தைத் தோற்றுவித்து, மானைப் போலும் விழித்துக் காதலுணர்வைப் பன்மடங்கு பெருகுவித்த, திருவருள் வடிவினளாகிய அப்பரவை எவ்வழியே சென்றாள்?      

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 300) 
பந்தம் வீடு தரும் பரமன் கழல்
சிந்தை ஆர்வுற உன்னுமென் சிந்தையை
வந்து மால்செய்து மானெனவே விழித்து
எந்தையார் அருள் எந்நெறிச் சென்றதே

(5)
இவ்வாறு மாதவச் செல்வியான பரவையாரைத் தேடியவாறே தேவாசிரியன் மண்டபத்தைச் சென்று சேர்கின்றார் தம்பிரான் தோழனார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 301) 
என்று சாலவும் ஆற்றலர் என்னுயிர்
நின்ற(து) எங்கென நித்திலப் பூண்முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவாசிரியனைச் சேர்ந்தபின்

No comments:

Post a Comment