சுந்தரர் (திருவாரூர் இறைவர் 'உனக்கொரு தூதனாய்ச் செல்வோம்' என்று அருள் புரிதல்):

(1)
சுந்தரர், பரவையார் தன்பால் கொண்டுள்ள கடும் சீற்றத்தினால் மிகவும் வருந்தித் திருவாரூர் இறைவரின் திருவடிகளை நினைந்துருக, அந்நள்ளிரவு வேளையில் தியாகேசப் பெருமான் நேரில் எழுந்தருளித் தோன்றுகின்றார். பரவையாரின் கோபத்தினைப் போக்கியருளுமாறு வன்தொண்டனார் இறைவரிடம் விண்ணப்பித்துப் பணிகின்றார். 

(2)
மெய்யடியார்களின் அன்பினை மிக விரும்பும் தியாகேசப் பரம்பொருள், தோழரின் விண்ணப்பத்தினை முற்றுவிக்கத் திருவுள்ளம் பற்றுகின்றார். முன்னின்று விண்ணப்பிக்கும் வன்தொண்டரிடம், 'நம்பி, துன்பத்தினை ஒழிப்பாய். நாம் இக்கணமே உனக்கொரு தூதனாகிப் பரவையின் பால் செல்கின்றோம்' என்றொரு அமுத மொழியினை அருளிச் செய்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 329)
அன்பு வேண்டும் தம்பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி
முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம்நோக்கித்
துன்பம் ஒழிநீ யாம் உனக்கோர் தூதனாகி இப்பொழுதே
பொன்செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம் என்றருள் செய்தார்

(3)
நாவலூர் மன்னவனார் ஆரூர் முதல்வரின் அருள்மொழிகளால் விவரிக்கவொண்ணா மகிழ்ச்சி அடைகின்றார். பெருவாழ்வு பெற்றவராய் இறைவரின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்தெழுந்து, அளவிலாத் துதிகளால் போற்றி செய்து, 'ஐயனே, இனிமேலும் இங்கு நின்று காலம் தாழ்த்தாது, விரைந்து எழுந்தருளிச் சென்று பரவையின் கோபத்தினைத் தணித்து அருள்வீர்' என்று தொழுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 330)
எல்லையில்லாக் களிப்பினராய் இறைவர் தாளில் வீழ்ந்தெழுந்து
வல்ல பரிசெல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன்தொண்டர்
முல்லை முகை வெண்ணகைப் பரவை முகில்சேர் மாடத்திடைச் செல்ல
நில்லா(து) ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி எனத் தொழுதார்!!

(குறிப்பு: அடிமைத் திறத்தோடு கூடிய தோழமை உரிமையால், 'இங்கேயே நில்லாது விரைந்து செல்வீர்' என்று ஆதிப்பரம்பொருளையே விரைவுபடுத்தும் நம்பிகளின் தவ மேன்மையினை என்னென்று போற்றுவது?) 

No comments:

Post a Comment