சுந்தரர், பாச்சிலாச்சிரமத்தில் இறைவரின் அருள் பெற்றுப் புறப்பட்டு காவிரிக்கு இருமருங்கிலுமுள்ள திருத்தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே, திருச்சி மாவட்டத்திலுள்ள காவிரியின் வடகரைத் தலமான திருப்பைஞ்ஞீலியைச் சென்றடைகின்றார் (நாவுக்கரசு சுவாமிகளுக்கு இத்தலத்துறை இறைவர் வேதியரின் வடிவில் பொதி சோறும் நீரும் அளித்து அருள் புரிந்துள்ளார்). வன்தொண்டர் ஆலயத்துள் புகுந்து, திருச்சுற்றினை வலமாய்ச் சென்று வணங்கி நிற்க, திருக்கருவறையில ஞீலிவனேஸ்வரப் பரம்பொருள் கங்காளத் திருவடிவம் காட்டிப் பேரருள் புரிகின்றார்.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 83):
அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின்அஞ்சாடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியும் இருமருங்கிறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப்
பைப்பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கமர் புடைவலம் கொண்டு
துப்புறழ் வேணியார்கழல் தொழுவார் தோன்று கங்காளரைக் கண்டார்!!!
சிவபெருமானின் 64 திருவடிவங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது இக்கங்காளத் திருக்கோலம், இம்மூர்த்தி பிஷாடன வடிவத்தினின்றும் வேறுபட்டு விளங்கும் தன்மையர். வாமன மூர்த்தியின் முதுகெலும்பினைத் திருக்கரமொன்றில் தண்டமாக ஏந்தி, இடது திருப்பாதம் நன்கு ஊன்றியிருக்க, வலது திருப்பாதம் சற்றே வளைந்து நடப்பது போன்றிருக்க, புலியாடையொடும், திருமேனியெங்கிலும் பாம்பினை அணிந்தவாறும், நான்கு திருக்கரங்களொடும், பிக்ஷை பெறும் திருக்கோலத்திலும், எண்ணிறந்த பூதகணங்களும்; பெண்டிரும் சூழ்ந்திருந்துப் போற்றும் ஆச்சரியமான திருமேனி வடிவினர்.
தம்பிரான் தோழர் கங்காள மூர்த்தியைக் கண்ணருவி பெருகியோடத் தொழுதிறைஞ்சி, கங்காளருக்குப் பிக்ஷையிட வரும் மகளிர் அம்மூர்த்தியின் திருவடிவ காரணங்களை ஒவ்வொன்றாக வினவியவாறு போற்றும் தொனியில் 'காருலாவிய' எனும் பனுவலொன்றினை அமைத்துப் போற்றுகின்றார்,
(திருப்பைஞ்ஞீலி: சுந்தரர் தேவாரம்: திருப்பாடல் 1):
காருலாவிய நஞ்சையுண்டிருள் கண்டர் வெண்தலையோடுகொண்டு
ஊரெலாம் திரிந்தென் செய் ர்பலி ஓரிடத்திலே கொள்ளும் நீர்
பாரெலாம் பணிந்தும்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்
ஆரமாவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே.
No comments:
Post a Comment