சுந்தரர் (மலைநாட்டிற்கு மீண்டுமொரு யாத்திரை):

சுந்தரர் திருவாரூரில் பரவையாருடன் தியாகேசப் பரம்பொருளைப் போற்றியிருக்கும் நாட்களில், 'தோழரான சேரமான் பெருமாள் நாயனாரை நினைந்து மீண்டுமொரு முறை மலைநாட்டிற்கு யாத்திரை மேற்கொள்ள விழைகின்றார்' என்பதிலிருந்து 'வெள்ளானைச் சருக்கம்' எனும் பகுதியினை விவரிக்கத் துவங்குகின்றார் தெய்வச் சேக்கிழார்.  

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 3):
ஆரம் உரகம் அணிந்தபிரான் அன்பர் அணுக்க வன்தொண்டர்
ஈர மதுவார் மலர்ச்சோலை எழிலாரூரில் இருக்குநாள்
சேரர் பெருமாள் தனைநினைந்து தெய்வப் பெருமான் கழல்வணங்கிச்
சாரல் மலைநாடணைவதற்குத் தவிரா விருப்பினுடன் போந்தார்

சுந்தரர், கடந்த யாத்திரையிலிருந்து மீள வந்து சுமார் மூன்று மாதங்களாவது கடந்திருக்கக் கூடும் எனும் நிலையில், தற்பொழுது மீண்டுமொரு முறை ஆரூர் இறைவரிடத்து வணங்கி விடைபெற்று, பரிசனங்கள் சிலரும் உடன்வர, மலைநாட்டினை நோக்கிய தம்முடைய 2ஆம் யாத்திரையைத் துவங்குகின்றார். 

திருவாரூருக்கும் சேரனாரின் பகுதியான கொடுங்களூருக்கும் இடையேயுள்ள பயணத் தொலைவோ சுமார் 450 கிமீ, பொதுவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையின் 14 கி.மீ சுற்றளவுப் பாதையைக் கடக்கும் 4 மணி நேர நடைப் பயணத்திற்கே நமக்கேற்படும் உடல் அயர்ச்சியோடு ஒப்பு நோக்கின் நம் நம்பிகளும் உடன் சென்றோரும் எத்தனை நாட்கள் எவ்விதம் பயணித்திருப்பர் என்றெண்ணுகையில் பெருவியப்பு மேலிடுகின்றது. அதுவும் இவ்வகையிலான கடும் யாத்திரையை 2ஆம் முறையாக மேற்கொள்கின்றார் எனில் சேரமான் நாயனாரிடத்து நம் சுந்தரனார் கொண்டிருந்த தோழமையின் திறம் நன்கு விளங்குமன்றோ!

No comments:

Post a Comment