சுந்தரர் கூடலையாற்றூரைத் தரிசித்துப் போற்றிய பின் திருமுதுகுன்றத்தினைச் சென்றடைகின்றார், ஆலயத்தினை வலமாக வந்து வணங்கி உட்புகுந்துத் திருச்சன்னிதியில் விருத்தகிரீஸ்வரப் பரம்பொருளைக் கண்களாரத் தரிசித்து, நிலமிசை வீழ்ந்துப் பணிந்துப் பின் பொன் வேண்டும் குறிப்புடன் 'நஞ்சியிடை' எனும் திருப்பதிகத்தினால், 'முதுகுன்றுறைப் பெருமானே, உம்மை மன வாக்கு காயங்களினால் வணங்கும் மெய்யடியார், தங்களது விண்ணப்பங்கள் உம்முடைய திருவருளால் இன்று கைகூடும்; நாளை சித்திக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்துப் பின் அந்நிலையிலேயே இறந்தும் விட்டால் அதன் பின்னர் நீர் அவர்களுக்கு அருள்வதற்கு யாது உளது? ஆதலின் விரைந்து அருள் புரிவீர்' என்று நயம்பட விண்ணப்பித்துப் போற்றுகின்றார்.
(திருமுதுகுன்றம் - சுந்தரர் தேவாரம்: திருப்பாடல் 1)
நஞ்சி இடைஇன்று நாளையென்று உம்மை நச்சுவார்
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வதென் அடிகேள்சொலீர்
பஞ்சியிடப் புட்டில் கீறுமோ பணியீர் அருள்
முஞ்சியிடைச்சங்கம் ஆர்க்கும் சீர்முதுகுன்றரே
முதுகுன்ற இறைவர் பொருளை அருளவிருக்கிறார் என்பதனைத் திருவருட் குறிப்பினால் உணரப் பெறும் தம்பிரான் தோழர் அகம் குளிர்ந்து, 'மெய்யை முற்றப் பொடிப் பூசியோர் நம்பி' எனும் மற்றுமொரு திருப்பதிகத்தினால் 'எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே' என்று போற்றுகின்றார்,
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 106):
நாதர்பால் பொருள்தாம் வேண்டி நண்ணிய வண்ணமெல்லாம்
கோதறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார் தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண்பொடியும் பாட
(திருமுதுகுன்றம் - சுந்தரர் தேவாரம்: திருப்பாடல் 1)
மெய்யை முற்றப்பொடிப் பூசியொர் நம்பி வேதம் நான்கும் விரித்தோதியொர் நம்பி
கையில் ஓர் வெண்மழு ஏந்தியொர் நம்பி கண்ணும் மூன்றுடையான் ஒரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரம் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
குளிர்பிறை அணிந்தருளும் செஞ்சடைக் கடவுள் வன்தொண்டரின் தீந்தமிழ்ப் பனுவல்களால் திருவுள்ளம் மிக மகிழ்ந்துப் பன்னீராயிரம் பொன்னினை அளித்தருள் புரிகின்றார். பெரிதும் மகிழும் சுந்தரனார் மீண்டுமொரு முறை நிலமிசை வீழ்ந்துப் பணிந்தெழுந்து, சிவலிங்கத் திருமேனிக்கு இன்னமும் அருகாகச் சென்று 'பெருமானே, தாம் அருளியுள்ள இப்பொற்குவியல்களைத் திருவாரூரிலுள்ளோர் யாவரும் அதிசயிக்குமாறு அவ்விடத்தில் வருவித்துத் தருதல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றார். முதுகுன்றம் மேவும் மணிகண்டரும் விண்ணொலியாய் 'ஆரூரனே! இப்பொருளை இங்குள்ள மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் பெற்றுக் கொள்வாய்' என்று அருள் புரிகின்றார்.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 108):
அருளும் இக்கனகமெல்லாம் அடியனேற்கு ஆரூருள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்னத்
தெருளுற எழுந்த வாக்கால் செழுமணி முத்தாற்றிட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்திற்போய்க் கொள்க என்றார்
No comments:
Post a Comment