சுந்தரர் (ஒற்றியூரிலிருந்து திருவாரூரை நினைந்துருகிப் பாடுதல்):

(1)
சுந்தரர் ஒற்றியூர் இறைவரின் அருளாசியோடு சங்கிலியாரை மணந்து, அவர்தம் தூய குணநலன்களில் ஈடுபட்டு இனிது எழுந்தருளி இருக்கின்றார் ('தூ நலத்தைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றமர்ந்திருந்தார் காதலினால்' என்பார் தெய்வச் சேக்கிழார்). அனுதினமும் ஒற்றியூர் திருக்கோயிலில் படம்பக்கப் பரம்பொருளையும் தரிசித்துப் போற்றி மகிழ்ந்திருக்க, இந்நிலையிலேயே பருவக் காலங்கள் சில கடந்து செல்கின்றன, 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 269)
இந்நிலையில் பேரின்பம் இனிதமர்வார் இறையுறையும்
மன்னுபுகழ் ஒற்றியூர் அதனில்மகிழ் சிறப்பினால்
சென்னிமதி புனைவார்தம் திருப்பாதம் தொழுதிருந்தார்
முன்னிய காலங்கள்பல முறைமையினால் வந்தகல

(குறிப்பு: 'கார் காலத்தில் சங்கிலியாரை மணந்து, குளிர்; முன்பனி; பின்பனியாகிய மூன்று காலங்கள் நிறைவுற்று, வேனிற்கால துவக்கம் வரையிலும் வன்தொண்டர் ஒற்றியூரில் எழுந்தருளி இருந்தார்' என்பார் பெரியபுராண உரையாசிரியரான சிவக்கவிமணியார்).

(2)
இந்நிலையில் வசந்த காலமும் வந்தெய்த, திருவாரூரில் அதுசமயம் திருவீதியுலா கண்டருளும் வீதிவிடங்கப் பெருமானை நினைந்துருகுகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 270)
பொங்குதமிழ்ப் பொதியமலைப் பிறந்துபூஞ் சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்சாரல் இடைவளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூர் அணிவீதி அழகர்அவர்
மங்கலநாள் வசந்தம் எதிர்கொண்டருளும் வகைநினைந்தார்

(3)
பிறைமதி சூடியருளும் தியாகேசப் பரம்பொருளின் திருமுன்னர்; கடந்த வருடங்களில் நிகழ்ந்தேறிய பரவையாரின் ஆடல் பாடல்களை இச்சமயத்தில் நேரிலேயே கண்டு கேட்டாற்போலும் உணர்ந்து நெகிழ்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 271)
வெண்மதியின் கொழுந்தணிந்த வீதிவிடங்கப் பெருமான்
ஒண்ணுதலார் புடைபரந்த ஓலக்கம் அதனிடையே
பண்ணமரும் மொழிப் பரவையார் பாடல்ஆடல் தனைக்
கண்ணுறமுன் கண்டு கேட்டார் போலக் கருதினார்

(4)
தம்மைக் காதலோடு நினைவாரைத் தாமும் நினைந்தருளும் திருவாரூர் தேவதேவரை, முன்னர் பணிந்தேத்திய தன்மையினையும் அதனால் பெற்று மகிழ்ந்த சிவனாந்தப் பேற்றினையும் நினைவு கூர்ந்து பதைபதைக்கின்றார். இதுநாள் வரையிலும் 'ஆரூர் இறைவரை மறந்திருந்தேனே' என்று பிரிவுத் துயர் தாளாது திருப்பதிகம் பாடுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 272)
பூங்கோயில் அமர்ந்தாரைப் புற்றிடம் கொண்டிருந்தாரை
நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரைப்
பாங்காகத் தாமுன்பு பணியவரும் பயன்உணர்வார்
ஈங்குநான் மறந்தேன் என்(று) ஏசறவால் மிகஅழிவார்

(சுந்தரர் தேவாரம் - திருவாரூர் - திருப்பாடல் 1)
பத்திமையும் அடிமையையும்  கைவிடுவான் பாவியேன்
பொத்தின நோயது இதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே!!!

No comments:

Post a Comment