சுந்தரர் (திருவாலங்காட்டு எல்லையில் சிவவழிபாடு):

(1)
சுந்தரர், இரு கண் பார்வையும் மறைந்த நிலையிலேயே திருவொற்றியூரிலிருந்து புறப்பட்டு, திருமுல்லைவாயில்; திருவெண்பாக்கம் முதலிய தலங்களைப் போற்றியவாறு திருவாலங்காட்டின் எல்லையிலுள்ள பழையனூரைச் சென்றடைகின்றார். காரைக்கால் அம்மையார் தலையால் வலம் வந்து பேறு பெற்றுள்ள தலமாதலின் அதனுள் கால் பதிக்கவும் அஞ்சி, அங்கிருந்தவாறே ஆலங்காட்டுறைப் பரம்பொருளை வணங்குகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 282)
அங்கணர்தம் பதியதனை அகன்றுபோய் அன்பருடன்
பங்கயப் பூந்தடம்பணை சூழ் பழையனுர் உழையெய்தித்
தங்குவார் அம்மை திருத்தலையாலே வலம்கொள்ளும்
திங்கள் முடியாராடும் திருவாலங்காட்டின் அயல்

(2)
'அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே' எனும் அற்புதப் பனுவலொன்றினால் வடாரண்யேஸ்வரப் பெருமானைப் போற்றி செய்கின்றார், 

(சுந்தரர் தேவாரம் - திருவாலங்காடு - திருப்பாடல் 1)
முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டும் சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழையனூர் மேய
அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே!!!

No comments:

Post a Comment