சுந்தரர் (திருவாரூர் இறைவரைக் கடிந்துரைத்தல், 'உயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று கூறுதல்):

(1)
இறைவர் பரவையாரின் இல்லத்திற்குத் தூதராய்ச் சென்றிருக்க, சுந்தரர் தேவாசிரியன் மண்டபத்தில் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றார். 'நிச்சயம் தியாகேசப் பெருமான் பரவையின் சீற்றத்தினை மாற்றியருள்வார்' என்றெண்ணியவாறு தவிப்புடன் உலவிக் கொண்டிருக்கின்றார். 

(2)
சிறிது நேரத்தில் இறைவர் மீண்டும் அவ்விடத்திற்கு எழுந்தருளி வந்து, தோழரிடம் திருவிளையாடல் புரிந்தருள எண்ணி, 'நம்பி, நாமே நேரில் சென்றுரைத்தும் அப்பரவையானவள் மறுத்துக் கூறினாள்' என்றருளிச் செய்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 352)
அம்மொழி விளம்பு நம்பிக்(கு) ஐயர்தாம் அருளிச் செய்வார்
நம்மைநீ சொல்ல நாம்போய்ப் பரவைதன் இல்லம் நண்ணிக்
கொம்மைவெம் முலையினாட்(கு) உன் திறமெலாம் கூறக் கொள்ளாள்
வெம்மைதான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார்

(3)
சுந்தரர் உளம் நடுக்கமுற்று 'ஆ! நீரே எழுந்தருளிச் சென்ற பின்னரும் உம் அடியவளான பரவை மறுத்தனளா? ஒருக்காலும் அவள் அத்திருவடிப் பிழையினைச் செய்திருக்க மாட்டாள். உம்மால் ஆட்கொள்ளப் பெறுதற்கு, எங்கள் இருவரையும் தகுதியுடையவர் அல்லர், என்று கருதி விட்டீர் போலும்' என்று உளம் வெதும்பி முறையிடுகின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 353)
அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும்
துண்ணென நடுக்கமுற்றே தொழுதுநீர் அருளிச் செய்த
வண்ணமும் அடியாளான பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ணஆர் அடிமைக்கென்ப(து) இன்றறிவித்தீர் என்று

(4)
முன்பு தேவர்களைக் காத்தருள ஆலகால விடத்தினை அமுது செய்தருளினீர்; திரிபுரங்களை எரித்தருளினீர், அந்தணச் சிறுவனின் பொருட்டுக் காலனைக் காலால் கடிந்தீர். இவ்விதம் எண்ணிலா அடியவர்களை ஆண்டு கொண்ட காரணத்தால் எமை ஆட்கொண்டது மிகையாகத் தோன்றுகின்றது போலும், அதனாலன்றோ அடியவனின் இன்னலைப் போக்காது மீண்டு வந்தீர்' என்று வெகுண்டுரைக்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 354)
வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர்
தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்(து) ஆட்கொண்டீர்
நான்மறைச் சிறுவர்க்காகக் காலனைக் காய்ந்து நட்டீர்
யான்மிகை உமக்கின்றானால் என்செய்வீர் போதாதென்றார்

(5)
'நன்று உமது செய்கை, என் அடிமை மிகையாகில் எதற்கு அன்று வெண்ணெய்நல்லூரில் வலிந்து வந்து ஆட்கொண்டீர்? என் நிலைமையைக் கண்டும் இரங்காது இருக்கின்றீர்! பரவையுடன் என்னைச் சேர்த்து வைக்காவிடில் இக்கணமே உம்முடைய திருவடிகளிலேயே என் உயிர் பிரியட்டும்' என்று புற்றிடம் கொண்ட புராதனரின் திருவடிகளில் வீழ்கின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 355)
ஆவதே செய்தீர் இன்றென் அடிமைநீர் வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்று வலிய ஆட்கொண்ட பற்றென்
நோவும்என் அழிவும் கண்டீர் நுடங்கிடை அவள்பால் இன்று
மேவுதல் செய்யீராகில் விடுமுயிர் என்று வீழ்ந்தார்

(6)
மூலட்டான முதல்வர் தோழரின் துக்கத்தினை இனியொருக் கணமும் தரிக்க இயலாதவராய், 'நம்பி, நாம் மீண்டுமொரு முறை பரவையிடம் சென்று உன்னோடு கொண்டுள்ள ஊடல் நீங்குமாறு கூறுவோம். கவலையை ஒழிப்பாய்' என்றருள் புரிகின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 356)
தம்பிரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி நாம்இன்னம் அவள்பால் போய்அக்
கொம்பினை இப்போதே நீ குறுகுமா கூறுகின்றோம்
வெம்புறு துயர் நீங்கென்றார் வினையெலாம் விளைக்க வல்லார்

No comments:

Post a Comment