சுந்தரர் (மண்ணுலக வாழ்வினை நிறைவுறச் செய்யுமாறு விண்ணப்பித்தல்):

சுந்தரர் கொடுங்களூரில் சேரமான் நாயனாருடன் நட்பால் கூடி மகிழ்ந்திருக்கும் நாட்களில், ஒரு காலைப் பொழுதில், சேரமான் நாயனார் நித்ய சிவ பூஜையின் பொருட்டு, அரண்மனையில் எழுந்தருளச் செய்துள்ள தம்முடைய வழிபடு மூர்த்தியின் திருமேனிக்குத் திருமஞ்சன கைங்கர்யம் புரிவதில் ஈடுபட்டிருக்க, சுந்தரனார் தனித்து திருஅஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்கின்றார். 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 28):
ஆய செய்கையின் நாள்பல கழிந்தபின் அரசர்கள் முதற்சேரர்
தூய மஞ்சனத் தொழிலினில் தொடங்கிடத் துணைவராம் வன்தொண்டர்
பாய கங்கைசூழ் நெடுஞ்சடைப் பரமரைப் பண்டுதாம் பிரிந்தெய்தும்
சேய நன்னெறி குறுகிடக் குறுகினார் திருஅஞ்சைக்களம் தன்னில். 

ஆலயத்தினை வலம் வந்து, பெரும்காதலுடன் உட்சென்று அஞ்சைக்களத்துப் பரம்பொருளின் திருமுன்பாக வீழ்ந்தெழுந்து, துன்பம் பொருந்திய இவ்வுலக வாழ்வினின்றும் நீக்கித் தம்முடைய அவதாரத்தினை நிறைவுறச் செய்தருளுமாறு விண்ணப்பித்து, 'தலைக்குத் தலைமாலை' எனும் திருப்பதிகத்தினால் போற்றுகின்றார், 

(சுந்தரர் தேவாரம் - திருஅஞ்சைக்களம் - திருப்பாடல் 1)
தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
    சடைமேற்கங்கை வெள்ளம் தரித்ததென்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டசைத்ததென்னே
    அதன்மேல் கத நாகம் கச்சார்த்ததென்னே
மலைக்கும் நிகரொப்பன வன்திரைகள்
    வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு 
அலைக்கும் கடலம் கரைமேல் மகோதை
    அணியார்பொழில் அஞ்சைக்களத்தப்பனே

சுந்தரனாரின் இவ்விண்ணப்பத்திற்கான குறிப்பினை, 8ஆம் திருப்பாடலின் 'வெறுத்தேன் மனைவாழ்க்கையை விட்டொழிந்தேன்' எனும் முதல் வரி மூலம் உணரப் பெறலாம். கருணைக் கடலான சிவமூர்த்தியும், முன்னர் திருக்கயிலையிலிருந்து நீங்கி மண்ணுலகில் தோன்றுமாறு ஆணையிட்டு அருளிய கால அளவும் நிறைவுற, அணுக்கத் தொண்டரான நம் சுந்தரனாருக்கு மீளவும் தம்முடைய திருவடிப் பேற்றினைத் தந்தருளத் திருவுள்ளம் பற்றுகின்றார். 

(வெள்ளானைச் சருக்கம் - திருப்பாடல் 30):
எடுத்த அத்திருப்பதிகத்தின் உட்குறிப்பு இவ்வுலகினில் பாசம்
அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டுமென்று அன்பர் அன்பினில் பாடக்
கடுத் ததும்பிய கண்டர் தம் கயிலையில் கணத்தவருடன் கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத் தம்கழல் சார்பு தந்தளிக்கின்றார்

No comments:

Post a Comment