சுந்தரர் (திருவாரூரில் நெல்மலைகளைக் குவித்த சிவ பூத கணங்கள்):

வேளாண் மரபினரான 'குண்டையூர் கிழார்' என்பார் சுந்தரரின் மீது அதீத அன்பும் பக்தியும் பூண்டொழுகி வரும் பண்பினர். தம்பிரான் தோழருக்கு நாள்தோறும் திருவமுது அமைக்கும் பொருட்டு, செந்நெல்; பருப்பு வகைகள்; சர்க்கரை முதலிய பல்வேறு வளங்களை பன்னெடு நாட்களாய் இடையறாது பரவையாரின் திருமாளிகைக்கு அனுப்புவிக்கும் திருத்தொண்டினைப் புரிந்து வருகின்றார்.  

ஒரு சமயம் மழையின்மையால் விளைச்சல் பெரிதும் குன்ற, போதுமான உணவுப் பொருட்களை அனுப்ப இயலாது போகின்றது. திருத்தொண்டு தடையுற்றதால் பெரிதும் வருந்தி, உணவும் உட்கொள்ளாது தாங்கொணாத் துயருடன் துயில் கொள்ளும் கிழாரின் கனவினில் தோன்றும் சிவபெருமான் 'சுந்தரனுக்கு அளிக்கும் பொருட்டு உனக்கு நெல் தந்தோம்' என்றருளிச் செய்கின்றார். சிவமூர்த்தியின் ஏவலால், குபேரன் குண்டையூர் முழுவதும் நெல்மலைகளைக் கொணர்ந்துக் குவிக்கின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 14):
ஆரூரன் தனக்குஉன்பால் நெல்தந்தோம் என்றருளி
நீரூரும் சடைமுடியார் நிதிக்கோமான் தனைஏவப்
பேரூர் மற்றதன்எல்லை அடங்கவும்நெல் மலைப்பிறங்கல்
காரூரும் நெடுவிசும்பும் கரக்க நிறைந்தோங்கியதால்.

பொழுது புலர்ந்ததும் நெற்குவியல்களைக் கண்டுப் பெரிதும் வியக்கும் கிழார் சுந்தரருக்கு இதனைத் தெரிவிக்கத் திருவாரூருக்கு விரைகின்றார். கிழார் வருமுன்பே தியாகேச மூர்த்தி அறிவிக்க நடந்தவையறியும் சுந்தரரும் குண்டையூரை நோக்கிப் பயணித்துச் செல்கின்றார். தம்பிரான் தோழரை எதிர்கொண்டு வணங்கும் கிழார் 'அடியவன் உமக்கு புரிந்து வந்த திருத்தொண்டின் பொருட்டு அண்டர் நாயகர் அருளியுள்ள நெல்மலைகள் மனிதரால் எடுக்கவொண்ணாதது' என்று விண்ணப்பிக்கின்றார். 
சுந்தரனார் 'குளிர்பிறை சூடும் நம் இறைவர் இவ்விதம் அருளியுள்ளது உங்கள் பாலுள்ள கருணையினால் அன்றோ' என்று கிழாரை இனிய மொழிகளால் சிறப்பித்து அவருடன் குண்டையூர் சென்று நெல்மலைகளைக் கண்ணுற்று வியக்கின்றார். அருகிலுள்ள கோளிலி ஆலயம் சென்று 'பெருமானே, வாள் போலும் கண்களையுடைய பரவை வாடி வருந்தாத வண்ணம் குண்டையூரில் சில நெற்கதிர்களைப் பெற்றேன், அதனைத் திருவாரூரில் சேர்ப்பிக்கக் கட்டளையிட்டு அருள்வாய். அனுதினமும் உன் திருவடிகளையே இடையறாது வணங்கிப் போற்றும் தொழிலையுடைய அடியவனுக்கு உனையன்றிப் பிறிதொரு புகலிடமும் உண்டோ ஐயனே!' என்று திருப்பதிகத்தால் போற்றுகின்றார்.

நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவைஅட்டித் தரப்பணியே.
கோளிலி மேவும் கண்ணுதற் கடவுள் அசரீரியாய் 'இன்றிரவு நமது பூதங்கள் இந்நெல் மலைகளைத் திருவாரூர் முழுவதும் நிறையுமாறு குவிக்கும்' என்றருளிச் செய்கின்றார். மறு நாள் திருவாரூர் முழுவதிலும் குவிந்துள்ள நெல் மலைகளைக் கண்டு வியக்கும் பரவையார் திருவருட் திறத்தினை வியந்துப் போற்றி, அவரவர் இல்லத்தின் எல்லையிலுள்ள நெற்கதிர்களை அவரவர்களே கொள்ளுமாறு பறையறிவிக்கின்றார். பின் மாளிகையுள் சென்று, இவ்வற்புதங்கள் யாவிற்கும் மூல காரணமான, கணவனாரான தம்பிரான் தோழரின் திருவடிகளைப் பணிந்துப் போற்றுகின்றார், 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 29):
அணியாரூர் மறுகதனில் ஆள்இயங்கப் பறையறைந்த
பணியாலே மனைநிறைத்துப் பாங்கெங்கும் நெற்கூடு
கணியாமல் கட்டிநகர் களிகூரப் பரவையார்
மணியாரம் புனைமார்பின் வன்தொண்டர் தமைப்பணிந்தார்.

No comments:

Post a Comment