சுந்தரர் (காஞ்சிவாய்ப் பேரூரில் தில்லைத் திருக்காட்சி):

சுந்தரனார் கொங்கு தேசத்திலுள்ள காஞ்சிவாய்ப் பேரூரைச் சென்றடைகின்றார். ஆலயத்துள் புகுந்து, எதிர்கொள்ளும் அடியவர்களோடு திருச்சன்னிதியை வலமாய்ச் சென்று வணங்கியவாறு இறைவரின் திருமுன்பு செல்ல, பட்டீஸ்வரப் பரம்பொருள் தில்லைத் திருக்கோலம் காட்டிப் பேரருள் புரிகின்றார். தம்பிரான் தோழர் உச்சி கூப்பிய கையினராய்க் கண்ணருவி பாய, அம்பலவாணரின் பேரானந்தத் திருக்காட்சியினைக் கண்களாரத் தரிசிக்கின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 89):
அத்திருப்பதியை அணைந்து; முன்தம்மை ஆண்டவர் கோயிலுள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலம்கொண்டு திருமுன் மேவுவார்; தம்மெதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள் நின்றாடல் நீடியகோலம் நேர்காட்டக்
கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழிநீர் பொழிதரக் கண்டார்

நிலமிசை வீழ்ந்துப் பணிந்து சிற்சபேச மூர்த்தியின் திவ்ய தரிசனத்தைக் கணநேரமும் பிரிய மாட்டாதவராய் உடனெழுந்து தொழுகின்றார். ஆடல் வல்லானின் மீதுள்ள காதலோ கரைகாணாது; என்பும் உருகுமாறு பல்கிப் பெருகிய வண்ணமிருக்கின்றது. புலன்களுக்கு எட்டாத சிவானந்தப் பெருவெள்ளத்தில் அமிழ்ந்துத் திளைக்கின்றார். 'சைவமுதல் தொண்டரான நம் நம்பிகள் பெருமானார் பெற்றுள்ள இவ்வரிய அனுபவத்தை யாரே விளக்கவல்லார்' என்று தெய்வச் சேக்கிழார் வியந்து போற்றுகின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 90):
காண்டலும் தொழுது வீழ்ந்து உடனெழுந்து; கரையில்அன்பு என்பினை உருக்கப்
பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து; மெய்யுணர்வினில் பொங்கத்
தாண்டவம் புரியும் தம்பிரானாரைத் தலைப்படக் கிடைத்தபின்; சைவ
ஆண்டகையாருக்கு அடுத்த அந்நிலைமை விளைவை யார் அளவறிந்து உரைப்பார்

ஒருவாறு தன்னிலை பெற்றவராய்ப் பேரூருறை முதல்வரின் தில்லைத் திருக்காட்சியைப் பாமாலையால் போற்றிப் பரவுகின்றார். விளக்கவொண்ணா அனுபவ நெகிழ்ச்சியில் மிகவும் தன்னிறைவு பெற்றவராய் 'பொற்சபை நாயகரின் அற்புதத் திருக்கோலத்தினை இந்நிலையில் தரிசிக்கப் பெற்ற பின்னர் இனிப்புறத்தே அடைவதற்குப் பிறிதொன்றும் உளதோ' என்று நெகிழ்ந்துருகுகின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 91):
அந்நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற அன்பனார்; இன்ப வெள்ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்துடன் பரவி; வளம்பதி அதனிடை மருவிப்
பொன்மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரிநடம் கும்பிடப் பெற்றால்
என்னினிப் புறம்போய் எய்துவதென்று, மீண்டெழுந்தருளுதற்கு எழுவார்.

(குறிப்பு: சுந்தரனார் அருளிச் செய்துள்ள இப்பேரூர் திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)

No comments:

Post a Comment