சுந்தரர் (முதல் தில்லை தரிசன அனுபவம்; திருவாரூக்கு அழைப்பு):

தம்பிரான் தோழர் மூன்று வெவ்வேறு சமயங்களில் தில்லைப் பரம்பொருளைத் தரிசித்துப் பரவியுள்ளதாக தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார். இனி இப்பதிவில் முதல் தரிசன அனுபவ நிகழ்வினைச் சிந்தித்து மகிழ்வோம்.

(1)
சுந்தரர் தில்லைத் திருத்தலத்தின் எல்லையை வணங்கியவாறே நகருக்குள் செல்கின்றார், வழிதோறுமுள்ள திருநந்தவனங்களை வணங்கியவாறு வடக்குத் திருவாயிலை அடைகின்றார். அங்கு அடியவர்கள் மகிழ்ந்து எதிர்கொள்ள, 'எவர் எவரை முதலில் வணங்கினர் என்றறிய இயலாத தன்மையில் இரு பாலாரும் எதிர் வணங்கி மகிழ்கின்றனர்' என்று இனிமையாய்ப் பதிவு செய்கின்றார் தெய்வச் சேக்கிழார். 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  244)
அன்பின் வந்தெதிர் கொண்ட சீரடியார்
    அவர்களோ நம்பியாரூரர்  தாமோ
முன்(பு) இறைஞ்சினர் யாவரென்(று) அறியா
    முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பினில் நிறைந்து
    பெருகு  நாவல் நகரார் பெருமானும்
பொன்பிறங்கு மணி மாளிகை நீடும்
    பொருவிறந்த திருவீதி புகுந்தார்

(2)
கூத்தர் பிரானைத் தரிசிக்கும் பெருவிருப்புடன் வேதஒலியும்; வேள்விப் புகையும் நிறைந்து விளங்கும் திருவீதியினை வணங்கிப் போற்றியவாறு மேலும் முன்னேறிச் செல்கின்றார். அதீத அன்பினால் முற்றிலும் நெகிழ்ந்துருகிய உள்ளமும்; உச்சி கூப்பிய கரங்களுமாய் அணுக்கன் வாயிலுள் புகுந்து, அம்பலவாணரின் திருமுன்புள்ள திருக்களிற்றுப்படிகளின் அருகே வீழ்ந்து வணங்கியெழுகின்றார்.

(3)
'மெய்; வாய்; கண்; மூக்கு; செவி' எனும் ஐம்புலன்களின் ஞானம் முழுவதையும் கண்களே கொள்ள, 'மனம்; புத்தி; சித்தம்; அகங்காரம்' எனும் நான்கு கரணங்களும் சித்தம் ஒன்றிலேயே ஒடுங்கி நிற்க, 'சத்வ; ரஜோ; தமோ' எனும் முக்குணங்களும் சாத்வீகத்தில் நிலைத்து நிற்க, ஒருமையுற்றுத் தில்லைப் பரம்பொருளின் பேரானந்தத் திருக்கூத்தினைத் தரிசித்து, அதனால் விளைந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்துச் சிவானந்தம் எய்துகின்றார் (சேக்கிழார் பெருமானார் அல்லாது பிறிதொருவரால் இந்நிலையை விவரித்து விடவும் இயலுமோ?)

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  252)
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள; அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையேஆகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேஆக
இந்துவாழ் சடையான் ஆடும்ஆனந்த எல்லையில் தனிப்பெரும் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்

(4)
'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்பது அப்பர் சுவாமிகளின் தில்லை அனுபவம், அதே நிலை நம் வன்தொண்டருக்கும் இங்கு எய்துகின்றது. 'ஐயனே! உன் அற்புதத் திருநடத்தினை இவ்வகையில் தரிசித்து வழிபாடு செய்தற்குப் பேருபகாரம் புரிந்த இம்மானிடப் பிறவியே அடியேனுக்கு பெருநிறைவையும்; மேலான இன்பத்தையும் அளிப்பதாக இருக்கின்றது' என்று நெகிழ்ந்து பாமாலையொன்றினால் கூத்தர் பிரானைப் போற்றி செய்கின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 253)
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உந்தன் திருநடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணில்ஆனந்த அருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்
-
(குறிப்பு: சுந்தரனார் இச்சமயத்தில் அருளிச் செய்த திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)

(5)
நெகிழ்வான அத்தருணத்தில் சிற்சபேசப் பரம்பொருள் விண்ணொலியாய் 'அன்பனே, நமது திருவாரூருக்கு வருக' என்றருளிச் செய்கின்றார்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல்  254)
தடுத்துமுன் ஆண்ட தொண்டனார் முன்பு
    தனிப்பெரும் தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் தரளம்
    எறிபுனல் மறிதிரைப் பொன்னி
மடுத்தநீள் வண்ணப் பண்ணை ஆரூரில்
    வருகநம் பாலென வானில்
அடுத்த போதினில் வந்தெழுந்ததோர் நாதம்
    கேட்டலும் அதுஉணர்ந்(து) எழுந்தார்.


No comments:

Post a Comment