சுந்தரர் (திருவாரூரில் தோன்றும் முதற்காதல் - பரவையாருடன் ஓர் அற்புதச் சந்திப்பு):

(1)
சுந்தரர் தியாகேசர் திருக்கோயிலில் புற்றிடம் கொண்ட புராதனரைத் தரிசித்துப் போற்றி ஆலயத்தினின்றும் வெளிப்பட்டு வருகையில், திருக்கயிலையில் முன்னர் எய்தியிருந்த வினைத்தொடர்பு கூட்டுவிக்க, அழகே ஒரு திருவடிவென ஆலயத்துள் செல்லும் பரவையாரைக் காண்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 285)
புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடைய நம்பி
நற்பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்திலங்கு செவ்வாய்
விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை அவரைக் கண்டார்

(2)
'இவள் கற்பக மரத்தின் பூங்கொம்போ, காமன்தன் பெருவாழ்வோ, புண்ணியங்களின் உறைவிடமோ' என்று பலவாறு எண்ணி ஆரூரர் அதிசயிக்கின்றார்,

(குறிப்பு: உலகியலில் எவரொருவர்க்கும் பொதுவில் தோன்றும் காதலுணர்வோடு இந்நிகழ்வினைப் பொருத்திப் பார்ப்பது ஏற்புடையதன்று. தம்பிரான் தோழனார் இறுதியாய் 'இவள் சிவன்அருளோ' என்று வியப்பது அவர்தம் உள்ளத்தெழுந்த காதலின் தெய்வீகத் தன்மையைப் பறைசாற்றுகின்றது),

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 286) 
கற்பகத்தின் பூம்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார்

(3)
ஆரூர் மேவும் அற்புதக் கடவுளின் திருவருளால், திருவருள் சார்பன்றிப் பிறிதொன்றினைச் சிந்தித்தறியாத பரவையாரும், முந்தைய ஊழானது கூட்டுவிக்க, காண்போர் வியந்து போற்றும் தோற்றப் பொலிவினையுடைய நாவலூர் வேந்தரைக் கண்டு உளம் விரும்புகின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 288) 
தண்தரள மணித்தோடும் தகைத்தோடும் கடைபிறழும்
கெண்டைநெடும் கண்வியப்பக் கிளரொளிப் பூணுரவோனை
அண்டர்பிரான் திருவருளால் அயலறியா மனம்விரும்பப்
பண்டைவிதி கடைகூட்டப் பரவையாரும் கண்டார்

(4)
'முன்தோன்றி நிற்கும் இவர் அழகிற்கொரு இலக்கணமாய் விளங்கும் அறுமுகக் கடவுளோ?, மன்மதனாரோ? அல்லது செஞ்சடை அண்ணலான தியாகேசப் பரம்பொருளின் திருவருளைப் பூரணமாய்ப் பெற்றவரோ?, என் மனதினை இவ்விதமாய்க் கலங்கச் செய்யும் இவர் யாரோ? என்று பரவையார் நெகிழ்ந்துருகுகின்றார்,   

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 290) 
முன்னே வந்தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ
என்னேஎன் மனம்திரித்த இவன்யாரோ எனநினைந்தார்

(5)
நம்பியாரூரர் அருகிருந்த அன்பர்களிடம் 'கொடி போலும் இடையுடைய இப்பெண்ணின் நல்லாள் யார்? என்று வினவ, அவர்களும், 'இந்நங்கையின் நாமம் பரவையார், விண்ணவர்களும் நெருங்கிச் சேர்தற்கு அரிதான தன்மையர்' என்று புகல்கின்றனர்,

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 290) 
வன்தொண்டர் அதுகண்டுஎன் மனம்கொண்ட மயிலியலின்
இன்தொண்டைச் செங்கனிவாய் இளங்கொடிதான் யார்என்ன
அன்றங்கு முன்நின்றார் அவர்நங்கை பரவையார்
சென்(று) உம்பர் தரத்தார்க்கும் சேர்வரியார் எனச் செப்ப

No comments:

Post a Comment