சுந்தரர் (விறன்மிண்ட நாயனாரின் கோபமும், அதனால் வெளிப்பட்ட பிரகடனமும்):

(1)
சுந்தரர் ஆரூர் மேவும் ஆதிமூர்த்தியை வழிபடும் பெருவிருப்புடன் தியாகேசர் திருக்கோயிலுக்குச் செல்கின்றார். எண்ணிறந்த அடியவர் பெருமக்கள் குழுமியிருந்த தேவாசிரியன் மண்டபத்தைக் கடந்து செல்லுகையில், 'இத்தொண்டர்களுக்கு அடியவனாகும் பெரும்பேறு என்று கிட்டுமோ? என்று பெருநெகிழ்ச்சியுடன் உளத்துள் தொழுதவாறே பூங்கோயில் கருவறை நோக்கி முன்னேறிச் செல்கின்றார். 

(2)
அச்சமயம் அம்மண்டபத்தில் அடியவர்களின் நடுவே கொலு வீற்றிருந்த, 'அடியவர்களைத் தொழுத பின்னரே சிவமூர்த்தியை வணங்குதல் வேண்டும்' எனும் கொள்கை உறைப்புடைய விறன்மிண்ட நாயனார் 'ஆ! இச்சுந்தரர் இங்குள்ள அடியவர் திருக்கூட்டத்தினரை அருகாமையில் வந்து வணங்காமல், ஒருவாறு ஒதுங்கி செல்வதோ? இங்கனமாயின் வன்தொண்டரெனும் இவர் இக்கணமுதல் அடியவர் திருக்கூட்டத்தினின்றும் நீங்கியிருக்கட்டும்' என்று உறுதிபடப் புகல்கின்றார், 
-
(விறன்மிண்ட நாயனார் புராணம் - திருப்பாடல் 7):
திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியனிடைப் பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்தணையா(து)
ஒருவா(று) ஒதுங்கும் வன்தொண்டன் புறகென்(று) உரைப்பச் சிவனருளால் 
பெருகா நின்ற பெரும்பேறு பெற்றார் மற்றும் பெறநின்றார்
-
(குறிப்பு: 'அடியார்கள் மீது கொண்ட அதீத பக்தியால், வன்தொண்டர் இத்திருக்கூட்டத்திற்குப் புற(கு) என்றுரைத்து, திருவருளால் பெருகும் பெரும் பேற்றினை விறன்மிண்ட நாயனார் பெற்றார்' என்று தெய்வச் சேக்கிழார் போற்றியிருப்பது நெகிழ்விக்கும் தனித்துவச் சொல்லாடலாகும்)

(3)
மேன்மைமிகு அடியவர்கள் மேல் பூண்டிருந்த பக்திநெறியால் விறன்மிண்டரின் கோபம் அடுத்ததாக ஆரூர் மேவும் இறைவரின்பால் திரும்புகின்றது. 'இத்தன்மையரான வன்தொண்டரை ஆட்கொண்டு; ஆதரித்து; தோழமை பேணும் தகைமையினால் பிறைசூடும் அச்சிவ பரம்பொருளாரும் இச்சமயத்தினின்று இனி விலகியிருக்கட்டும்' என்று சிவஞான நிலையில் அரியதொரு பிரகடனம் செய்கின்றார்,  
-
(விறன்மிண்ட நாயனார் புராணம் - திருப்பாடல் 8):
சேணார் மேருச் சிலைவளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணா(து) ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறைசூடிப்
பூணார்அரவம் புனைந்தார்க்கும் புறகென்(று) உரைக்க மற்றவர்பால் 
கோணா அருளைப் பெற்றார் மற்றினியார் பெருமை கூறுவார்
-
(குறிப்பு: இத்திருப்பாடலிலும், 'சிவபெருமானும் இத்திருக்கூட்டத்திற்குப் புறகு' என்றுரைத்த தன்மையினால் சிவபரம்பொருளின் திருவருளைப் பரிபூரணமாய்ப் பெற்றார் விறன்மிண்டனார்' என்று தெய்வச் சேக்கிழார் போற்றியிருப்பது நம் உள்ளத்தைக் கசிவிக்க வல்லது)

(4)
பின்வரும் திருப்பாடலில், 'தம்பிரான் தோழரான நம் சுந்தரனார் ஒப்புவமையில்லா திருத்தொண்டர் தொகையினை அருளிச் செய்வதற்குக் காரணர் விறன்மிண்ட நாயனாரே' என்று சேக்கிழார் பெருமானார் போற்றுகின்றார்.
-
(விறன்மிண்ட நாயனார் புராணம் - திருப்பாடல் 11):
வேறு பிறிதென் திருத்தொண்டத் தொகையால் உலகு விளங்கவரும்
பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை
கூறும் அளவெம் அளவிற்றே அவர்தாள் சென்னி மேற்கொண்டே
ஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்(டு) அறைகுவாம்

(5)
11 திருப்பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் விறன்மிண்ட நாயனார் புராணத்தில், விறன்மிண்டப் பெருந்தகையாரை 'எல்லை தெரிய ஒண்ணாதார்' என்று 4ஆம் திருப்பாடலிலும், 'நிகர்ஒன்றில்லாதார்' என்று 6ஆம் திருப்பாடலிலும் போற்றி மகிழ்கின்றார் தெய்வச் சேக்கிழார்.

No comments:

Post a Comment