திருவாசகம் - அச்சோப் பதிகம்:

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் 
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன் எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தை!எனக்
கறியும் வண்ணம் அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே

பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடம் கொண்ட பிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன் எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே

மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட்டென்னை உந்தன்
சுண்ண வெண்ணீறணிவித்துத் தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல் எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல் என்றருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே

வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத்தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து 
அந்தம் எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.

தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனும் தாழுருவி
உய்யுநெறி காட்டுவித்திட்டு ஒங்காரத்துட்பொருளை
ஐயன் எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே

சாதல் பிறப்பென்னும் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின் மிக்கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொரு கூறுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதி எனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே

செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை
மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன் தான்
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே!

திருவாசகச் சிறப்பு (மணிவாசகர் குருபூஜை: ஆனி மகம்):

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்!!!



மணிவாசகர் (திருவாசகம் எழுதி அருள் செய்த ஆடல்வல்லான்)

மணிவாசகப் பெருமான் பல்வேறு திருத்தலங்களைத் தரிசித்துப் பரவி இறுதியாய்த் தில்லைப் பதியில் சிறிது காலம் எழுந்தருளி இருக்கின்றார். தன்வயமற்று எந்நேரமும் சிவயோகப் பெருநிலையில் வீற்றிருப்பார்; திருப்பெருந்துறை இறைவரும், சொக்கநாதப் பரம்பொருளும்; அம்பலவாணரும் தமை ஆட்கொண்டு அருள் செய்த நிகழ்வுகளை நினைந்து நினைந்து உருகுவார்; கண்ணீர் பெருக்கிச் சிவானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைத்திருப்பார்.

சிற்றம்பலம் மேவும் கண்ணுதற் கடவுள் வேதியரின் திருவடிவில் அடிகளின் வசிப்பிடம் நாடிச் செல்கின்றார். எழுந்தருளியிருப்பது சிற்சபேசர் என்றறியாத அடிகளும் 'அந்தணரே, எதன் பொருட்டு எழுந்தருளினீர்?' என்று வினவ, மறை நாயகரும் 'அடிகளே! சிவமூர்த்தி உமை ஆட்கொண்டு அருளிய நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சியாய்த் தாம் பாடியருளியுள்ள பனுவல்களும் அற்புதத் தன்மை வாய்ந்தவை, எம் பொருட்டு அவற்றினை மீண்டுமொரு ஓதினால் யாம் இச்சுவடிகளில் பதிவு செய்து கொள்வோம்' என்று கூறி அருள் புரிகின்றார். 

சிவஞானப்பிழம்பாய் வீற்றிருந்த அடிகளும் 'திருவருள் இது போலும்' என்று திருவாசகத் திருப்பாடல்களை மீண்டுமொரு முறை முழுவதுமாய்க் காதலுடன் ஓதியருள்கின்றார். கூத்தர் பிரானும் திருவுள்ளம் மகிழ்ந்துத் தன் திருக்கரங்களால் அப்பாமாலைகளைச் சுவடிகளில் பதிவு செய்து கொண்டே வருகின்றார். பின் அடிகளிடம் 'பாவை பாடிய பான்மையால் கோவையும் பாடுவீர்' என்று கேட்டருளி அவைகளையும் எழுதிக் கொண்டு விடை பெற்றுச் செல்கின்றார். 

'மணிவாசகன் சொல்ல சிற்றம்பலமுடையான் எழுதியது' என்று கையொப்பமிட்டுச் தில்லைத் திருக்கோயிலின் பஞ்சாட்சரப் படிகளில் அச்சுவடிகளை வைத்துப் பின் சிற்றம்பலம் மேவுகின்றார். பொழுது புலர்ந்ததும் தில்லை அந்தணர்கள் திருச்சன்னிதியில் சுவடிகளையும் அவற்றுள் அம்பலவாணரின் கையொப்பத்தினையும் கண்டு வியக்கின்றனர். சிவசிந்தையில் அமிழ்ந்திருந்த அடிகளிடம் சென்று 'இப்பாடல்களின் பொருள் யாது?' என்று விண்ணப்பிக்க, வாதவூரடிகளும் அம்பலத்தாடுகின்ற பரம்பொருளைச் சுட்டி 'இம்மூர்த்தியே இதன் சாரமும் பொருளும்' என்றுரைத்து, ஆனி மாதமும் மக நட்சத்திரமும் கூடிய அத்திருநாளில் ஆடல்வல்லானின் திருச்சன்னிதியில் கலந்துச் சிவமாம் பேற்றினைப் பெற்று மகிழ்கின்றார். 

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரையார் கழற்குஎன்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே!!!