திருஞானசம்பந்தரின் அவதார இரகசியம்:

சீகாழித் தோன்றலான நம் ஞான சம்பந்த வள்ளலைப் பொதுவில் முருகப் பெருமானின் அவதாரமாகவே போற்றும் சைவ சமய மரபு குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

(1)
முதற்கண் சம்பந்த மூர்த்தியின் அவதார இரகசியத்தை அவர்தம் திருப்பாடல் வரிகளைக் கொண்டே அறிந்துணர முற்படுவோம். பின்வரும் திருப்பாடலில் 'மறக்குமாறிலாத என்னை மையல் செய்(து) இம்மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டினாய்' என்றருளிச் செய்கின்றார் காழி வேந்தர்,  

('வரைத்தலைப் பசும்பொனோடு' என்று துவங்கும் திருத்துருத்தி தேவாரம் - திருப்பாடல் 5)
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்; திருந்தடி
மறக்குமாறிலாத என்னை மையல் செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்(டு)
இறக்குமாறு காட்டினாய்க்(கு) இழுக்குகின்ற(து) என்னையே

சிவபரம்பொருளின் குமார வடிவமே அறுமுகக் கடவுளெனும் சத்தியத்தைக் (கச்சியப்ப சிவாச்சாரியார் அருளியுள்ள) கந்தபுராணத்தின் பல்வேறு திருப்பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன. ஆதலின் மேற்குறித்துள்ள காழிப் பிள்ளையாரின் அற்புதப் பிரகடனத்தை ஒருபொழுதும் அறுமுகக் கடவுளின் திருவாக்காகக் கொள்ளுதல் ஏற்புடையதன்று. சிவஞானப் பெருநிலையில் விளங்கியிருந்த ஒரு ஜீவான்மா இறைவரிடம் உரிமையோடு 'என்னை ஏன் இப்பிறவியில் ஆழ்த்தினாய்' என்று வினவுமுகமாகவே சிவஞானச் செல்வரின் இக்கூற்று அமைந்துள்ளது.

(2)
இனி நம் தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கும் சீகாழி அண்ணலின் அருளிச் செயலோடு ஓத்திருத்தலைக் காண்போம். 'திருவடி மறவாத் தன்மையில் விளங்கியிருந்த ஆன்மா ஒன்றினைச் சிவமூர்த்தி ஞானசம்பந்த மூர்த்தியாக அவதரிக்கச் செய்தருளினார்' என்ற பின்வரும் திருப்பாடலில் சேக்கிழார் பெருமானார் பதிவு செய்து போற்றுகின்றார்,

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 55)
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார் தொடர்ந்த பிரிவுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற் போல்அழுவார் குறிப்பயலாய்

'திருவடி மறவாத தன்மை' எனும் சொற்பிரயோகமும் உயிர் வர்க்கத்துக்கு மட்டுமே பொருந்தக் கூடியவொன்று, பரம்பொருள் வடிவினரான குமாரக் கடவுளுக்கு அன்று. 

(3)
எனில் மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய நம் அருணகிரிப் பெருமான் எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில், ஞானசம்பந்த மூர்த்தியின் திருஅவதார நிகழ்வுகளை முருகப் பெருமானின் திருச்செயல்களாகவே போற்றியுள்ளாரே?' எனும் கேள்வியும் உடனெழுவது இயல்பே. 

இதற்கான விளக்கத்தினை நாம் ஆய்ந்தறிய முனைகையில், அவ்விளக்கமானது ஞானசம்பந்தரின் திருவாக்கு; தெய்வச் சேக்கிழாரின் திருவாக்கு; அருணகிரியாரின் திருவாக்கு ஆகிய மூன்றிற்கும் முரணின்றி அமைந்திருத்தல் மிகமிக அவசியம். 

பரம குருநாதரான நம் வாரியார் சுவாமிகள் 'அறுமுகக் கடவுளின் சாரூப முத்தி பெற்றுத் திருக்கயிலையில் திருத்தொண்டாற்றி வரும் முத்தான்மா ஒருவரையே சிவபெருமான் ஞானசம்பந்தராக இப்புவிமிசை அவதரிக்கச் செய்கின்றார்' என்றும், 'இதன் பொருட்டே அருணகிரிநாதர் உள்ளிட்ட அருளாளர்கள், உபச்சார மார்க்கமாகச் சம்பந்தச் செல்வரின் செயல்களை முருகப் பெருமானின் மீது ஏற்றிப் பாடியுள்ளனர்' என்றும் இதன் நுட்பத்தினைத் தெளிவுறுத்துகின்றார். 

(4)
மற்றொரு கோணம், பூரண சிவஞானம் சித்திக்கப் பெறாத ஆன்மாக்களிடம் பாலில்படுநெய் போலும் எழுந்தருளியுள்ள இறைவன், மலபரிபாகம்; சத்தினிபாதம் நிகழ்ந்தேறப் பெற்றுள்ள உத்தம ஆன்மாக்களிடம் மிக விளக்கமாய் எழுந்தருளி இருக்கின்றான். ஆதலின் சிவஞானப் பெருநிலையிலுள்ள நம் அருணகிரிப் பெருமான் ஒவ்வொருமுறை ஞானசம்பந்த மூர்த்தியை அகக் கண்களில் தரிசிக்கையிலும், அம்மூர்த்தியின் திருவுள்ளத்தில் மிக விளக்கமாய் எழுந்தருளியுள்ள அறுமுகக் கடவுளின் தரிசனமும் ஒருசேர அனுபவமாகின்றது. 

(5)
'ஞானசம்பந்தப் பெருமான் பசு வர்க்கமாகிய நம்முள் ஒருவர்' என்று அறிந்தும் உணர்ந்தும் அனுபவிப்பதே ரசமான; சுவையான; அற்புதமான அனுபவம். சீர்காழிச் செல்வர் திருத்தொண்டர்களின் தனிப்பெரும் தலைவர், பதியாகிய சிவபரம்பொருளோடு நம்மை இணைப்பிக்கும் தெய்வீகப் பாலமாய்த் திகழ்பவர் (சிவ சிவ)!!!.

திருஞானசம்பந்தர் (சைவச் செல்வரின் திருஅவதாரம்):

சமணமும் பௌத்தமும் ஆதிக்கம் பெற்று எங்கும் புறச்சமய இருள் சூழ்ந்திருந்த 7ஆம் நூற்றாண்டு கால கட்டம். சமணர்கள் அந்தந்த பகுதிகளில் கோலோச்சும் அரசர்களைச் சமண நெறிக்கு உட்படுத்தி, அதன் வாயிலாக வைதீக மரபிற்கும், சைவ சமயத்திற்கும் எண்ணற்ற இடையூறுகளை விளைவித்து வருகின்றனர். சைவச் சின்னங்களும், வழிபாட்டு முறைகளும் பரிகசிக்கப் படுகின்றன, சமண பௌத்தக் கொள்கைகள் திணிக்கப் படுகின்றன, திருக்கோயில்களிலும் எவ்விதத் திருப்பணிகளும் நடந்தேறாத நிலை நிலவி வருகின்றது. 

சீர்காழியில் வாழ்ந்து வரும் 'சிவபாத இருதயர்' என்பார் இச்சூழலைக் கண்டு உளம் வெதும்புகின்றார், அனுதினமும் நியமத்துடன் தவமியற்றி 'பரசமய இடர் நீக்கித் திருநீற்று நெறியினைப் பரவச் செய்யும் ஒரு தவப் புதல்வனைத் தந்து அருள் புரிவாய் ஐயனே!' என்று சிவபெருமானிடம் விண்ணப்பித்து வருகின்றார்.

சீர்காழி மேவும் திருத்தோணியப்பரின் திருவருளால் 'சிவபாதர் - பகவதியார்' தம்பதியருக்கு, ஒரு ஆதிரைத் திருநாளில், வைதீகமும் சைவமும் எண்திசைகளிலும் தழைத்தோங்கவும், பரசமய இடர் நீங்கவும், அடியவர்கள் வாழ்வு செழிக்கவும், தமிழ் வழக்கம் ஏற்றம் பெற்றுச் சிறக்கவும், குருநாதர்களுக்கெல்லாம் குருநாதராக, சைவச் செம்மலென சிவம் பெருக்கும் சம்பந்தப் பிள்ளையார் திருக்குமாரராய் அவதரிக்கின்றார்.

(பெரிய புராணம்: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்: திருப்பாடல் 1)
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்கப்
பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

திருஞானசம்பந்தர் (சிவஞானப் பாலினை அருந்திய அற்புத நிகழ்வு):

அப்பொழுது சம்பந்த மூர்த்திக்கு 2 ஆண்டுகள் நிறைவுற்று 3ஆம் வயது துவங்கியிருந்தது. அன்று அதிகாலை வழக்கம் போல் சிவபாதர் தோணியப்பர் ஆலயத்திற்குப் புறப்பட முனைகின்றார். சம்பந்தர் தானும் உடன் வருவதாகத் தன் பிஞ்சுப் பொற்பாதங்களை மண்ணில் உதைத்து அடம் பிடிக்க, சிவபாதரும் சிவச்செல்வரைத் தோளில் சுமந்தவாறு ஆலயம் நோக்கிச் செல்கின்றார். பிரம்ம தீர்த்தப் படித்துறையில் பிள்ளையை அமர வைத்து, கோபுர சிகரத்தை நோக்கி 'ஆலமுண்ட பரம்பொருளே! நீயே இப்பிள்ளைக்குக் காவல்' என்று விண்ணப்பித்துப் பின் மந்திர உச்சாடனம் புரிய நீரில் மூழ்குகின்றார்.

சிறிது நேரம் செல்கின்றது, தந்தையைக் காணாத நிலையில் சம்பந்தர் சில கணங்களுக்குப் பிற இடங்களைப் பார்த்து அழுகின்றார். பின் இறுதியாய்த் தோணிபுர கோபுர உச்சியினை நோக்கி 'அம்மே! அப்பா!' என்று அழைத்தவாறே, கண்மலர்களில் நீர் ததும்ப, கை மலர்களால் பிசைந்துப் பொருமி அழத் துவங்குகின்றார். 
-
(பெரிய புராணம்: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்: திருப்பாடல் 63)
மெய்ம்மேல்கண் துளிபனிப்ப வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோ
செம்மேனி வெண்ணீற்றார் திருத்தோணிச் சிகரம்பார்த்து
அம்மே அப்பா என்றென்று அழைத்தருளி அழுதருள!!!

திருவருள் கூடும் வேளையும் நெருங்க, சீர்காழி மேவும் செம்மேனிப் பரம்பொருளும் அம்பிகையும், கருவறையினின்றும் நீங்கி, இடபவாகனத்தில், பிரம்மதீர்த்தக் கரையருகில் எழுந்தருளி வருகின்றனர். உலகீன்ற உமையவள் சிவஞானப் பாலினை ஓர் பொற்கிண்ணத்தில் இட்டு 'குழந்தாய் இதனை அருந்துவாய்' என்று சம்பந்தப் பிள்ளையாரின் பிஞ்சுக் கரங்களில் அளித்துப் பேரருள் புரிகின்றாள்.

அதனை அருந்தும் சம்பந்தருக்கு அக்கணமே அருந்தவ முனிவர்களுக்கும்; தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய சிவஞானம் சித்திக்கப் பெறுகின்றது. நடந்தேறிய நிகழ்வுகள் எவையும் அறியாத நிலையில் சிவபாதர் நியமம் முடித்துக் கரைக்கு வருகின்றார். பேரருள் பெற்று நிற்கும் சிவமழலையின் திருவாயில் ஞானப் பாலின் மிச்சத்தினைக் கண்டு கோபம் கொள்வார் போல் 'யார் தந்த பால் இது' என்று கையில் சிறிய கோலொன்றினை அடிப்பது போல் ஓங்குகின்றார்.

சிவானந்த வெள்ளத்தில் அமிழ்ந்திருக்கும் ஞானக் குழந்தையோ, கண்ணீர் பெருக்கியவாறு, புளகமுற்று, மற்றெவரும் அறியாவண்ணம் விண்மிசை விடைமீது பவளக் குன்றென எழுந்தருளி இருக்கும் உமையொரு பாகனை, வேதங்களாலும் இன்னதென்று சுட்டஇயலாத தேவாதி தேவனை, தெய்வங்களும் தொழுதேத்தும் தனிப்பெரும் தெய்வத்தை, பிறைமதிப் பரம்பொருளை 'இதோ இப்பெருமானே எனை ஆட்கொண்டு அருளியது' என்று அண்மைப் பொருளில் சுட்டுகின்றார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளம்கவர் கள்வன்
ஏடுடைய மலரால் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே!

திருஞானசம்பந்தர் (திருக்கோலக்காவில் தாளம் பெற்ற அற்புத நிகழ்வு):

அம்மையப்பரிடமிருந்து ஞானப்பாலுண்ட நிகழ்வினையடுத்து சம்பந்த மூர்த்தி சீர்காழி ஆலயத்துள் சென்று "நறவ நிறை வண்டறை' எனும் மற்றொரு திருப்பதிகத்தால் சிவமூர்த்தியைத் தொழுதுப் பின் தந்தையாருடன் இல்லம் வந்தடைகின்றார். அன்றிரவு சிவபெருமானின் திருவருளினை இடையறாது நினைந்தவாறே துயில்கின்றார். பொழுது புலர்ந்ததும், கணநேரமும் தாமதிக்காது, நியமங்களை முடித்துப் பின்னர் தொண்டர் குழாமும் உடன்வர, தந்தையாருடன் சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்கா எனும் தலத்திற்குச் செல்கின்றார். ஆலயத்தை வலம் வந்துக் கருவறையில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கும் சப்தபுரீஸ்வரரைப் பணிகின்றார்.

'மடையில் வாளைபாய' எனும் முதல் திருப்பாடலைத் தம்முடைய கரங்களால் தாளமிட்டவாறே பாடுகின்றார், சிவஞானக் குழந்தையின் பிஞ்சுப் பொற்கரங்கள் நோக, சிவபெருமானும் அம்பிகையும் பொறுப்பரோ! சம்பந்த மூர்த்தியின் கரங்களில் திருஐந்தெழுத்து பொறிக்கப் பெற்ற பொன்னாலாகிய தாளமொன்று வந்து சேர்கின்றது. திருவருளை வியந்து போற்றியவாறே சிவப்பிரசாதமான அத்தாளத்தை முழக்கித் திருப்பதிகத்தின் மற்ற திருப்பாடல்களையும் நிறைவு செய்கின்றார்.

முக்கண் முதல்வர் அருளிய தாளத்தில் எழும் சிவநாதத்தினைக் கேட்டு விண்ணவரும், நாரதரும், தும்புருவும் வியந்து போற்றிப் பணிகின்றனர். சீகாழிக்கு மீண்டும் திருப்பாதங்கள் நோக நடந்து செல்ல முனையும் சம்பந்தச் செல்வரைத் தந்தையார் தம்முடைய தோள்மீது சுமந்துச் செல்கின்றார்.

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்காஉளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவம்என்கொலோ!!!

திருஞானசம்பந்தர் (திருநனிபள்ளி யாத்திரை):

திருநனிபள்ளி எனும் தலத்தில் வாழும் அன்பர்கள் பலரும் ஒன்று கூடிச் சீர்காழி சென்று ஞானசம்பந்த மூர்த்தியை வணங்கி 'தாம் எங்கள் தலத்திற்கு வருகை புரிந்து அங்கு எழுந்தருளியுள்ள நற்றுணையப்பரை வணங்குதல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றனர். ஞானசம்பந்தரை ஈன்ற பகவதி அம்மையாரின் அவதாரத் தலம் 'நனிபள்ளி', சீர்காழியிலிருந்து 17 கி.மீ பயணத் தொலைவில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரும் அதற்கு இசைந்துத் தந்தையாரின் தோள்களில் அமர்ந்தவாறே, தொண்டர்களும் உடன்வர நனிபள்ளி நோக்கிப் பயணிக்கின்றார். 

நனிபள்ளியின் எல்லையை நெருங்கிய நிலையில், 'இரு மருங்கிலும் விண்ணுயர் மலர்ச்சோலைகளோடு அழகுற அமைந்துள்ள இத்தலத்தின் பெயர் என்ன?' என்று 3 வயது ஞானக் குழந்தையான சம்பந்தச் செல்வர் வினவ, தந்தையாரான சிவபாதரும் பெருமகிழ்வுடன் 'இதுவே நனிபள்ளி' என்று சுட்டுகின்றார். உடன் அந்நிலையிலேயே, தந்தையாரின் தோள் மீது அமர்ந்த வண்ணம் 'காரைகள் கூகை' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் நனிபள்ளி இறைவரைப் போற்றுகின்றார், 
-
காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மும் சுடுகாடமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைகள்ஆரல் வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.

'ஆணை நமதே' என்று ஞானசம்பந்தர் நிறைவு செய்தருளிய நான்கு திருப்பதிகங்களுள் நனிபள்ளியும் ஒன்றாகும் (மற்றவை கோளறு பதிகம், திருவேதிகுடி மற்றும் திருக்கழுமலத் திருப்பதிகங்கள்).

பின்னர் ஆலயத்தினை அடைந்து, உட்சென்று, நனிபள்ளி நாதரைக் காதலுடன் தொழுதுப் போற்றி செய்துப் பின் அத்தலத்திலேயே சிறிது காலம் தங்கி இருக்கின்றார். 

திருஞானசம்பந்தரைப் போற்றும் தேனினும் இனிய பெரியபுராணப் பாடல்கள்:

ஞானப்பாலுண்ட நிகழ்விற்குப் பின் இல்லம் திரும்பும் வழியில், 3ஆம் வயதிற்குள் அடியெடுத்து வைத்திருந்த சிவஞானக் குழந்தையினைச் சீர்காழி வாழ் திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு வணங்கிப் போற்றும் திருக்காட்சியினைச் சேக்கிழார் பெருமான் பின்வரும் திருப்பாடல்களால் பதிவு செய்கின்றார்,

காழியர் தவமே, கவுணியர் தனமே, கலைஞானத்து
ஆழிய கடலே, அதனிடைஅமுதே, அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திருவருள் பெற்றனை என்பார்.
-
மறைவளர் திருவே, வைதிக நிலையே, வளர்ஞானப்
பொறையணி முகிலே, புகலியர் புகலே, பொருபொன்னித்
துறைபெறு மணியே, சுருதியின்ஒளியே, வெளியேவந்து
இறையவன் உமையாளுடன் அருள்தர எய்தினை என்பார்.
-
புண்ணிய முதலே, புனைமணி அரைஞாணொடு போதும்
கண்ணிறை கதிரே, கலைவளர் மதியே, கவின்மேவும்
பண்ணியல் கதியே, பருவமதொரு மூவருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்அருள் பெற்றனை என்பார்.

திருஞானசம்பந்தர் (திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடன் ஒரு நெகிழ்வான சந்திப்பு):

ஞானசம்பந்த மூர்த்தியைத் தரிசித்து வணங்கும் பொருட்டு திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் அவர்தம் திருத்துணைவியார் மதங்க சூளாமணியாரும் சீர்காழியை வந்தடைகின்றனர். சீர்காழி வேந்தர் அவர்களை எதிர்கொண்டு வரவேற்க, தம்பதியர் இருவரும் சிவஞானக் குழந்தையின் திருவடிகளில் வீழ்ந்துப் பணிகின்றனர். ஞானப் பாலுண்ட வள்ளலும் 'பாணரே! தாம் இங்கு வருகை புரியும் பெரும் பேற்றினை யாம் பெற்றோம்' என்றொரு அமுத மொழி பகர்கின்றார். 

பாணருக்குத் தோணியப்பரைத் தரிசனம் செய்வித்து 'உங்கள் பெருமானைப் பாடுவீர்' என்று கூற, பாணரும் மதங்க சூளாமணியாரும் மிக இனிமையாக யாழினில் இசை மீட்டிப் பிறைமதிப் பரம்பொருளைப் போற்றி செய்கின்றனர். அச்சிவ கானத்தைக் கேட்டுச் சம்பந்தச் செல்வர் பெரிதும் மகிழ்கின்றார். பின்னர் பாணரை நன்முறையில் உபசரித்துத் திருமடம் ஒன்றில் தங்குவித்து அமுது செய்விக்கின்றார். பாணர் ஞானப் பிள்ளையாரின் தேவாரப் பனுவல்களைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து அதனை இனிமையாய் யாழினில் மீட்டிப் பாடுகின்றார்.

நெகிழ்வான அத்தருணத்தில் பாணர் 'சம்பந்தப் பெருமானே! தாம் தலங்கள் தோறும் சென்றுத் திருப்பதிகங்கள் பாடும் பொழுது அப்பண்ணினை யாழினில் மீட்டி இசைக்கும் திருத்தொண்டினையும், தம்மை விட்டு என்றுமே பிரியாது சேவித்திருக்கும் பேற்றினையும் தந்து அருள வேண்டும்' என்று உளமுருகி விண்ணப்பிக்கின்றார். கருணைக் கடலான சம்பந்தச் செல்வரும் 'அவ்வண்ணமே ஆகுக' என்று அருள் புரிகின்றார்.
-
(பெரிய புராணம்: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்: திருப்பாடல் 140)
சிறியமறைக் களிறளித்த திருப்பதிக இசையாழின்
நெறியிலிடும் பெரும்பாணர் பின்னுநீர் அருள்செய்யும்
அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டடியேன்
பிறிவின்றிச் சேவிக்கப் பெறவேண்டும் எனத்தொழுதார்.
-
(பெரிய புராணம்: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்: திருப்பாடல் 141)
மற்றதற்குப் பிள்ளையார் மனமகிழ்வுற்று இசைந்தருளப்
பெற்றவர்தாம் தம்பிரான் அருளிதுவே எனப்பேணிச்
சொற்றமிழ் மாலையின் இசைகள் சுருதியாழ் முறைதொடுத்தே
அற்றைநாள் போலென்றும் அகலா நண்புடன் அமர்ந்தார்.

திருஞானசம்பந்தர் (உபநயன நிகழ்வும், முதல் நமசிவாயப் பதிகமும்):

ஞான சம்பந்த மூர்த்திக்கு உபநயனப் பருவம் எய்துகின்றது. அந்தணர்கள் கூடி, வைதீக முறைப்படி சடங்குகளைப் புரிந்து, சைவச் செல்வரின் முன்பு நின்று "மறை நான்கினையும் தந்தோம்' என்று வேத மந்திரங்களை ஓதுகின்றனர். சிவஞானமுண்ட வள்ளல் மான் தோலுடன் கூடிய முப்புரி நூலினைத் தரித்துப் பின் எண்ணிறந்த வேத மந்திரங்களை மடை திறந்த வெள்ளம் போன்று தாமாகவே ஓதுகின்றார். அதுகேட்டு பெரிதும் வியக்கும் அந்தணர்கள் 'சிவபெருமானின் பரிபூரணத் திருவருளைப் பெற்று, வேத நெறி தழைத்தோங்கவும்; சைவத் துறை விளங்கவும் வந்துதித்த அவதார மூர்த்தி இவரே' என்று சித்தம் தெளிந்து ஞானசம்பந்தரின் பிறவிப் பிணி போக்கும் திருவடி மலர்களைப் பணிகின்றனர்.

நான்மறைகளான ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களில் தங்களுக்கிருந்த ஐயப்பாடுகளை சம்பந்தப் பிள்ளையாரிடம் கேட்டுத் தெளிவுறுகின்றனர். அத்தருணத்தில் சீகாழி வேந்தர் 'மந்திரங்கள் யாவினுக்கும் ஆதிமூலமாகத் திகழ்வது ஸ்ரீபஞ்சாட்சரம் எனும் திருஐந்தெழுத்து மந்திரமே' என்று அந்தணர்களுக்கு உபதேசித்து, அற்புதத் தன்மை வாய்ந்த முதல் நமசிவாயத் திருப்பதிகத்தினைப் பாடி அருள் புரிகின்றார்.

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே!!!

திருஞானசம்பந்தர் (நாவுக்கரசு சுவாமிகளுடன் நெஞ்சினை நெகிழ்விக்கும் அற்புதமான முதல் சந்திப்பு):

ஞானசம்பந்த மூர்த்தியும், நாவுக்கரசு சுவாமிகளும் மும்முறை  வெவ்வேறு சமயங்களில் சந்தித்துக் கொண்டதாகப் பெரிய புராணம் பதிவு செய்கின்றது. அவற்றுள் முதல் சந்திப்பினைச் சேக்கிழார் பெருமான்,  திருநாவுக்கரசு சுவாமிகள் பகுதியில் ஒரு பரிமாணத்திலும், திருஞானசம்பந்தர் பகுதியில் மற்றொரு பரிமாணத்திலும் அற்புத அற்புதமான திருப்பாடல்களால் பதிவு செய்துப் போற்றுகின்றார். அவற்றுள் அப்பர் அடிகள் புராணப் பகுதியில் விவரிக்கப் பெறும் திருப்பாடல்களை இப்பதிவினில் சிந்தித்து மகிழ்வோம்.

நாவுக்கரசு சுவாமிகள் தில்லையில் வழிபாடு புரிந்து வரும் காலத்தில், சீர்காழியில், சிவபெருமானின் திருவருளால் அம்பிகையிடம் சிவஞானப் பாலினை அருந்தி, அற்புதமான திருப்பதிகங்களைப் பாடிவரும் திருஞானசம்பந்தரைப் பற்றிக் கேள்வியுறுகின்றார், அதிசயமும் காதலும் மேலிடச் சீர்காழி அண்ணலின் பிஞ்சுப் பொற்பாதங்களைப் பணிவதற்குப் பெருவிருப்பம் கொள்கின்றார். 

அடியவர்களும் உடன் வர, சிதம்பரத்திலிருந்துப் புறப்பட்டுச் சீர்காழித் தலத்தினை வந்தடைகின்றார். திருவதிகை இறைவரால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற நாவுக்கரசு சுவாமிகள் சீர்காழிக்கு வருகை புரிவதனை அறியும் சம்பந்த மூர்த்தியும் பெரிதும் மகிழ்ந்து சுவாமிகளை எதிர்கொண்டழைக்க விரைகின்றார்.

சீர்காழி எல்லையில் இரு புறமும் தொண்டர் கூட்டம் சந்தித்துக் கலக்க, நாவுக்கரசு சுவாமிகள் பெருங் காதலுடன், அழுது இப்புவியினை உய்வித்த சீர்காழி வேந்தரின் திருவடி மலர்களை வணங்கி மகிழ, சுவாமிகளைத் தாங்கிப் பிடித்து எதிர் வணங்கும் சம்பந்தப் பெருமான் 'அப்பரே' என்று அமிழ்தினும் இனியதொரு  திருநாமத்தால் அழைக்கின்றார். திருத்தொண்டின் அரசரும் 'அடியேன்' என்று பணிகின்றார். இவ்வற்புத சங்கமத்தினைத் தரிசித்துப் பெரிதும் மகிழும் தொண்டர் திருக்கூட்டத்தினர் எழுப்பும் 'ஹர ஹர' எனும் சிவகோஷம் விண்ணினை எட்டி எதிரொலிக்கின்றது. 

(பெரிய புராணம்: திருநாவுக்கரசு நாயனார் புராணம்: திருப்பாடல் 182):
தொழுதணைவுற்று ஆண்ட அரசு அன்புருகத் தொண்டர் குழாத்திடையே சென்று 
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றி 
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி விடையின்மேல் வருவார் தம்மை 
அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே எனஅவரும் அடியேன் என்றார்.

'சிவஞானப் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கும் பேறு பெற்றேன்' என்று அப்பர் அடிகள் பேருவகை எய்த, நாவுக்கரசு சுவாமிகளை வணங்கப் பெற்றமைக்குச் சம்பந்தச் செல்வரும் பேரானந்தம் கொள்ள, இருபெரும் குருநாதர்களும் உள்ளத்தால் ஒன்றுபட்டுக் கலந்துப் பின் சீர்காழி மேவும் திருத்தோணியப்பரைத் தரிசித்துப் பாமாலைகளால் போற்றுகின்றனர். 

(பெரிய புராணம்: திருநாவுக்கரசு நாயனார் புராணம்: திருப்பாடல் 184):
பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேன்என்று அரசு உவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமைவணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளநிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மையோடும்
வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.

திருஞானசம்பந்தர் (திருப்பாச்சிலாச்சிராமத்தில் நோய் தீர்த்த அற்புத நிகழ்வு):

திருச்சி மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது திருப்பாச்சிலாச்சிராமம் (தற்கால வழக்கில் திருவாசி). பிறைமதிப் பரம்பொருள் மாற்றுரை வரதீஸ்வரர் எனும் திருநாமத்தில் இங்கு எழுந்தருளி இருக்கின்றார். இத்தலத்தில் கொல்லி மழவன் எனும் தனவந்தன் வாழ்ந்து வருகின்றான், வழி வழியாய் முக்கண் முதல்வரை வணங்கும் மரபினனான இம்மழவனின் புதல்வி முயலகன் எனும் நோயினால் அவதியுற்று, யாதொரு மருத்துவ முறையும் பயனளிக்காத  நிலையில் அசைவற்றிருந்து வருகின்றாள்.

இறுதி முயற்சியாய்ப் புதல்வியைச் சிவாலயத்தில், இறையவரின் திருமுன்பு கிடத்தி 'ஆலமுண்டருளும் ஆதிப்பரம்பொருளே! இவளைக் காப்பது நின் கடன்' என்று அழுது தொழுது நின்றிருக்கும் நிலையில், 'சீர்காழி வேந்தர் வருகின்றார்! ஞானப்பாலுண்ட வள்ளல் வருகின்றார்!' என்று வெளிப் பிரகாரத்திலிருந்து எழும் மங்கலச் சொற்களைச் செவி மடுக்கின்றான். உடன் புதல்வியின் சிந்தனையை விடுத்து, நகரினை அலங்கரிக்கவும்; திருவிளக்கேற்றவும்; பூரண கும்பம் அமைக்கவும் ஆணையிட்டுச் சம்பந்தப் பிள்ளையாரை எதிர்கொண்டு பணிய விரைகின்றான்.

சைவச் செல்வரின் சிவிகையினைக் கண்ணுற்ற கணத்திலேயே அகம் குழைந்துக் கண்ணீர் பெருக்கிக்  காதலுடன் மண்ணில் வீழ்ந்து பணிகின்றான், சம்பந்த மூர்த்தி 'எழுக' என்று அருள் புரிகின்றார். நெகிழ்வுடன் எழுந்து உச்சி கூப்பிய கையினனாய் ஞானத் தமிழ் வேந்தரை ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றான். 

(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 315):
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்றானந்தம் பெருகு காதல்
வெள்ளநீர் கண்பொழியத் திருமுத்தின் சிவிகையின்முன் வீழ்ந்தபோது
வள்ளலார் எழுகவென மலர்வித்த திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ள மகிழ்ந்துடன்சென்று குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான்.

ஆளுடைப் பிள்ளையார் ஆலயத்தினை வலமாக வந்துக் கருவறையை நெருங்கிய நிலையில், மயங்கிய நிலையிலுள்ள கன்னியினைக் கண்ணுற்று, மழவனிடமிருந்து அது குறித்த விவரமும் கேட்டறிகின்றார். உளம் கனிந்து, இறையவரின் திருமுன்பு சென்று 'ஒளி பொருந்திய சிவந்த செஞ்சடையில் பிறைமதி சூடியருளும் ஆதியே, மணிநீல கண்டத்தினனாய் ஆச்சரியமாய் பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியுள்ள முக்கண்ணுடைப் பெருமானே, இம்மங்கையினை இவ்விதம் வாடச் செய்வது தான் உமது திருவுள்ளமோ? இவளின் நிலையினை மாற்றி அருள்வாய் ஐயனே!' என்று திருப்பதிகத்தினால் பணிந்தேத்துகின்றார். 

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடம்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர் கோலமெலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ இவர்மாண்பே!!!

உமையொரு பாகனாரின் திருவருளால் அம்மங்கை நல்லாள் நோய் நீங்கி நலமெலாம் பெற்றெழுகின்றாள். அகமிக மகிழும் மழவன் தன் தவப் புதல்வியுடன், சீர்காழிச் செல்வரின் பிறவிப் பிணி போக்கும் திருவடிகளை நன்றிப் பெருக்குடன் பன்முறை பணிந்துப் போற்றுகின்றான். சிவஞானம் உண்ட சம்பந்தச் செல்வரோ கருவறையில் அருவுருவமாய் விளங்கியருளும் மாற்றுரை வரதீஸ்வரப் பரம்பொருளைப் போற்றி செய்துப் பணிகின்றார், அடியவர்கள் 'ஹர ஹர' எனும் சிவகோஷம் எழுப்பி மகிழ்கின்றனர். 

திருஞானசம்பந்தர் (திருமருகலில் மாண்ட வணிகனை மீண்டெழச் செய்த அற்புத நிகழ்வு):

திருஞானசம்பந்தர் தொண்டர் குழாத்துடன், திருச்செங்காட்டங்குடியிலிருந்துப் புறப்பட்டுத் திருமருகல் எனும் தலத்தினைச் சென்றடைகின்றார்.  அங்கு எழுந்தருளியுள்ள இரத்தினகிரீஸ்வரப் பரம்பொருளை முப்போதும் போற்றியவாறு சிறிது காலம் அப்பதியிலேயே தங்கியிருக்கின்றார். 

இந்நிலையில் ஒரு சமயம் வணிகனொருவன் தான் மணம் புரியவிருக்கும் காரிகை ஒருத்தியுடன் மருகல் வழியாக பயணிக்கின்றான், அந்திப் பொழுதான படியால் ஆலயத்திற்கருகிலுள்ள மடமொன்றினுள் இருவரும் தங்குகின்றனர். பின்னிரவு வேளையில் அரவமொன்று வணிகனைத் தீண்டி விட அக்காரிகை செய்வதறியாது கதியற்றுப் புலம்புகின்றாள். அவளது கூக்குரல் கேட்டு அவ்விடம் வந்தோர் பல்வேறு மருத்தவ முறைகளையும் மந்திரங்களையும் முயல்கின்றனர், அதிகாலைப் பொழுது வரையிலும் விடம் இறங்காத நிலையில் வணிகனின் உயிர் பிரிகின்றது. வணிகனை நோக்கிச் சிறிது நேரம் புலம்பி அரற்றியிருந்த அம்மங்கையோ பின்னர் கூர்த்த மதியினளாய்த் திருக்கோயிலிருந்த திசை நோக்கித் துதிக்கின்றாள்.

(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 476):
அடியாராம் இமையவர்தம் கூட்டம் உய்ய
    அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே, செங்கண்
நெடியானும் நான்முகனும் காணாக் கோல
    நீல விட அரவணிந்த நிமலா, வெந்து
பொடியான காமன்உயிர் இரதி வேண்டப்
    புரிந்தளித்த புண்ணியனே, பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
    கவின் மருகல் பெருமானே! காவாய் என்றும் 

இக்கட்டான இச்சூழலிலும், இறைவரைக் குறைகூறி நிந்திக்காமல் சிவபெருமானின் அருட் செயல்களைப் பட்டியலிட்டுப் போற்றிப் பின் தன்நிலையினை முறையிட்டுக் கதறும் இப்பாவையின் திடபக்தி போற்றுதற்குரியது. 

அதிகாலையில் வழிபடும் பொருட்டு அவ்விடத்து வருகை புரியும் சம்பந்தச் செல்வர் 'அம்மா! நீ அஞ்ச வேண்டாம்! உன் துன்பம் என்னவென்று கூறுவாய்?' என்று பரிவோடு வினவுகின்றார். அப்பெண்ணின் நல்லாள் சீர்காழிச் செல்வரின் திருவடிகளில் வீழ்ந்துப் பணிந்து 'ஐயனே! உறவு வழியில் மருமகனான இவருக்கு என்னைத் தருவதாக வாக்களித்துப் பின் பொருளாசையால் பிறிதொருவருக்கு மணமுடிக்க முயன்ற என் பெற்றோரின் அறமற்ற செயலால் இவரே புகலென்றுப் புறப்பட்டேன். இச்சமயம் இவரும் அரவு தீண்டி மாண்டதால் கதியற்று அபலையாய் நிற்கின்றேன்! எனது சுற்றத்தினர் போன்று ஆறுதல் மொழியுரைத்து என் துயரெலாம் நீங்குமாறு அருள் செய்தீர்' என்று நெகிழ்ந்து கூறுகின்றாள்.

கருணைக் கடலான சம்பந்தப் பிள்ளையார் உளம் கனிந்து, மருகல் மேவும் பரம்பொருளே! இப்பெண், 'செஞ்சடை இறைவனே; விடையேறும் முதல்வனே, நீயே எனக்குப் புகல்' என்று அச்சத்துடன் அழுது அரற்றி மயங்கி வீழ்கின்றாள், 'இனியும் இப்பேதையினை வருந்தச் செய்வது தகுமோ ஐயனே? அருள் புரிவாய்!' என்று திருப்பதிகத்தினால் விண்ணப்பித்துத் தொழுகின்றார். மருகல் மேவும் மணிகண்டரின் திருவருளால் வணிகன் உயிர் பெற்று எழுகின்றான், அக்காரிகை அகமிக உருகி நன்றிப் பெருக்குடன் சீர்காழிச் செல்வரின் பொன்போலும் திருவடிகளை வீழ்ந்து வணங்குகின்றாள். சம்பந்த மூர்த்தி அவ்விருவருக்கும் ஆலயத்திலேயே திருமணம் செய்வித்து அருள் புரிகின்றார்.

சடையா எனுமால் சரண் நீயெனுமால்
விடையா எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே.

திருஞானசம்பந்தர் (திருவீழிமிழலையில் பெற்ற சீர்காழிக் காட்சி):

ஞானசம்பந்த மூர்த்தியும், நாவுக்கரசு சுவாமிகளும் தல யாத்திரையாகச் செல்லும் வழியில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையை அடைகின்றனர். இரு வேறு திருமடங்களில் அடியவர் குழாத்துடன் சிறிது காலம் தங்கியிருந்து வீழிமிழலை இறைவரை முப்போதும் பாமாலைகளால் போற்றி வருகின்றனர். இந்நிலையில் சீர்காழி வாழ் அந்தணர்கள் வீழிமிழலைக்குச் சென்று சிவஞானச் செல்வரைத் தொழுது 'தாம் சீர்காழிக்கு மீண்டும் எழுந்தருளி வந்து சிறிது காலம் தங்கியிருக்கும் பேற்றினை எங்களுக்கு அருள வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றனர். சீர்காழி வேந்தரும் அவர்கள் அன்பிற்கு மகிழ்ந்து 'நாளை வீழிநாதரின் அருளைப் பெற்று உம்முடன் வருவோம்' என்று அருள் புரிகின்றார்.  

அன்றிரவு சம்பந்தப் பிள்ளையாரின் கனவினில் சீர்காழி இறைவர் தோன்றி 'நாளை வீழிமிழலை ஆலயத்திலேயே தோணிபுரமான சீர்காழியில் நாம் எழுந்தருளியுள்ள திருக்கோலக் காட்சியினைக் காட்டுவோம்' என்று அறிவித்துப் பேரருள் புரிகின்றார். உடன் கண் விழிக்கும் சைவச் செல்வர் அதிசயமுற்றுத் திருவருள் திறத்தினை வியந்து போற்றி, அருகிலுள்ள அடியவர்களுக்கும் இறைவரின் அருட் குறிப்பினைத் தெரிவித்து மகிழ்கின்றார்.   

வைகறைப் பொழுதில் நியமம் முடித்து அடியவர்களுடன் ஆலயத்திற்கு உச்சி கூப்பிய கையினராய் விரைகின்றார். ஆலய விமானத்திற்கு அருகில் கோடி சூர்ய பிரகாசமாய் சீர்காழி இறையவர் அம்பிகையுடன் தோணி மீது எழுந்தருளித் திருக்காட்சி அளித்து அருள் புரிகின்றார். சிவஞானம் உண்ட காழி வேந்தர் உள்ளம் உருகிக் கண்ணீர் பெருக்கி 'முக்கண் முதல்வனே! ஆதிப் பரம்பொருளே, புகலி மேவிய புண்ணியனே, எமை ஆட்கொண்ட கருணைக் கடலே, அடியேனின் பொருட்டு வீழிமிழலையில் தோன்றினாயோ?' என்று திருப்பதிகத்தினால் போற்றுகின்றார், 
-
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம்இறையே இமையாத முக்கண்ஈச என்நேச இதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே!!!

பின்னர் சீர்காழி மறையவர்களிடம் இறைவரின் திருவுள்ளக் குறிப்பினைத் தெரிவித்து 'நீங்கள் புகலிக்குத் திரும்பிச் செல்லுங்கள்' என்று கட்டளையிட்டு அருள் புரிகின்றார். அந்தணர்களும் அதனை ஏற்றுத் திருவடி தொழுது, வையம் வாழ வந்துதித்த கவுணியர் குலத் தோன்றலைப் பிரிய மனமில்லாதவராய் ஒருவாறு திருமபிச் செல்கின்றனர்.

திருஞானசம்பந்தர் (சமணர்களுடன் அனல் வாத நிகழ்வு):

பாண்டிய மன்னனின் வெப்பு நோயினைப் போக்க இயலாது கொடும் சமணர்கள் தோல்வியினைத் தழுவ, ஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தினால் அந்நோயினை அகற்றி வெல்கின்றார். பின் அறிவிலிகளான அச்சமணர்கள் 'இனி இரு சாராரும் தத்தம் சமய உண்மையினை நெருப்பிலிடுவோம், தீயினின்று மீளும் சமயத்தைச் சார்ந்தோரே வென்றவராவர்' என்று அச்சத்தினை மறைத்தவாறு கூறுகின்றனர். வேந்தனும் இசைய, அவையின் முன் ஓரிடத்தில் தீயினை அமைக்கின்றனர். 

சீர்காழி அண்ணல் திருவருளைச் சிந்தித்தவாறுத் திருமுறைச் சரட்டிலிருந்து பதிகச் சுவடியொன்றினை எடுக்க, அது 'போகமார்த்த பூண்முலையாள்' என்று துவங்கும் திருநள்ளாற்றுத் திருப்பதிகமாக அமைகின்றது. அது கண்டு மகிழ்ந்து, 'எனை ஆளுடைய சிவபரம்பொருளின் திருநாமமே என்றென்றும் நிலைபெற்று நிற்கும் மெய்ப்பொருள்' என்று காட்டுமாறு 'இச்சுவடி தீயில் வேகாது இருக்கட்டும்' என்று உறுதி கூறி, நள்ளாற்றுப் பெருமானைப் போற்றும் 'தளிரிள வளரொளி' எனும் புதியதொரு திருப்பதிகத்தையும் பாடிப் பின் அச்சுவடியினை யாவரும் காணுமாறு வெந்தழலில் இடுகின்றார். 
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 784):
நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்றெடுத்தும்
என்னை ஆளுடை ஈசன்தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப்பொருளாம் எனக் காட்டிட வன்னி
தன்னிலாகெனத் தளிரிள வளரொளி பாடி.
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 785):
செய்ய தாமரை அகஇதழினும் மிகச் சிவந்த
கையிலேட்டினைக் கைதவன் பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரைஅவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்துமுன் இட்டார்.
*
அம்பிகையை இடபாகத்து உடைய முக்கண் முதல்வரை முதற்பொருளாக உடைய அச்சுவடி தீயில் ஒருசிறிதும் சிதைவுறாமல் முன்னினும் மேம்பட்ட பொலிவுடன் பசுமையாய் விளங்கி இருக்கின்றது. 
*
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 786):
இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டுலாம் குழல் வனமுலை மலைமகள் பாகத்து 
அட்டமூர்த்தியைப் பொருளென உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியதன்றே

சமணர்கள் நிச்சயமற்ற தன்மையில் 'எது நேருமோ' என்றஞ்சியவாறு 'அத்தி நாத்தி (உண்டு இல்லை)' எனும் பொருளற்ற சமண மந்திரம் பொறித்த தங்கள் ஏட்டினைத் தீயிலிடுகின்றனர், கணநேரத்தில் ஏடுகள் யாவும் வெந்து சாம்பலாகின்றன. குறிப்பிட்ட நாழிகை அளவு கடந்ததும், சிவஞானச் செல்வர் திருமுறைச் சுவடிகளை தீயினின்றும் எடுத்து யாவரும் காணுமாறு காண்பித்து அருள் புரிகின்றார் (ஞாலம் நின் புகழே மிகவேண்டும் தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே)!!!

திருஞானசம்பந்தர் (வைகையாற்றில் சமணர்களுடன் புனல் வாதம்):

பாண்டிய மன்னனின் வெப்பு நோயை நீக்குதல் மற்றும் அனல் வாதம் ஆகிய இரு நிகழ்வுகளிலும் ஞானசம்பந்தப் பெருமானிடம் தோல்வியுற்ற சமணர்கள் நடுக்கத்தினை வெளிக்காட்டாது இறுதி முயற்சியாய் 'அவரவர் சமய ஏடுகளை ஆற்றினில் இடுவோம், ஆற்றின் போக்கிற்கு எதிரேறிச் செல்லும் சமயத்தைச் சார்ந்தோரே வென்றவராவர்' என்று கொக்கரிக்கின்றனர். சிவஞானச் செல்வரும் அதற்கு இசைந்துச் சிவிகையில் ஆரோகணித்து, வேந்தனும்; குலச்சிறையாரும் மற்றோரும் பின்தொடர, வையையாற்றின் கரையினை அடைகின்றார். 

முதலில் சமணர்கள் 'அத்தி - நாத்தி' (உண்டு; இல்லை) எனும் பொய்ப்பொருளைப் பதிந்திருந்த தங்களது சமய ஏட்டினை ஆற்றினில் இடுகின்றனர். மறுகணமே அவை ஆற்றின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப் படுவது கண்டு வெட்கித் தலைகவிழ்ந்து நிற்கின்றனர்.
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 814):
படுபொருளின்றி நெல்லில் பதடிபோல் உள்ளிலார்மெய்
அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்றெழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையிலேடு
விடுதலும் விரைந்து கொண்டு வேலைமேல் படர்ந்ததன்றே.

சிவஞானமுண்ட சைவச் செல்வர் சிவபெருமானின் திருவருளை நினைந்து 'வாழ்க அந்தணர்' எனும் திருப்பதிகத்தினைப் பாடிப் பின் யாவரும் காணுமாறு அதனைச் சுவடியொன்றில் எழுதித் தன் திருக்கரங்களால் ஆற்றினில் இடுகின்றார். 'வேந்தனும் ஓங்குக' என்று காழி வேந்தரின் திருவாக்கினின்று வெளிப்பட்ட ஆணையினால் பாண்டிய மன்னனின் கூன் அக்கணமே நிமிர்ந்து 'நின்ற சீர் நெடுமாற நாயனாராக' மிளிர்கின்றார்.   
-
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!!

'எவ்விதம் நல்ல தவமுடைய அடியவர்களின் உள்ளம் பிறவியாகிய பெருங்கடலை எதிர்த்துச் செல்லுமோ அது போன்று சம்பந்தப் பிள்ளையார் இட்ட திருமுறைச் சுவடிகள் வேகமாய்ப் பாயும் வையை ஆற்றின் போக்கினை எதிர்த்துக் கிழித்துக் கொண்டு, சிவபெருமானே முழுமுதற்பொருள் என்று யாவரும் அறியுமாறு எதிர்த் திசையில் முன்னேறிச் செல்கின்றது' என்று சேக்கிழார் பெருமான் அற்புதமாய் இந்நிகழ்வினைப் பதிவு செய்துப் போற்றுகின்றார்.

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 846):
திருவுடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு
மருவிய பிறவியாற்றில் மாதவர் மனம் சென்றாற் போல்
பொருபுனல் வைகைஆற்றில் எதிர்ந்துநீர் கிழித்துப் போகும்
இருநிலத்தோர்கட்கு எல்லாம் இதுபொருளென்று காட்டி.

இவ்வற்புத நிகழ்வு கண்டு பெருமகிழ்வு எய்தும் நெடுமாற நாயனாரும், குலச்சிறையாரும் மற்றுள்ளோரும் சம்பந்தச் செல்வரின் திருவடிகளைப் பணிந்துப் போற்றுகின்றனர்.

திருஞானசம்பந்தர் (பாண்டிய மன்னரின் அரண்மனையில் அற்புதமான ஒரு அறிமுகக் காட்சி, ஒரு வீர முழக்கம், மற்றுமொரு நெகிழ்விக்கும் காட்சி):

திருஞானசம்பந்தரின் திருமடங்களுக்குச் சமணர்கள் தீயிட்ட சிவ அபராதச் செயலுக்குத் துணை நின்ற காரணத்தால் பாண்டிய மன்னரைக் கடும் வெப்பு நோய் பற்றுகின்றது. வெம்மையின் தீவிரம் கணத்திற்குக் கணம் அதிகரிக்க, எவரொருவரும் நெருங்க இயலாத தன்மையில் அனலின் வெம்மை பல்கிப் பெருகுகின்றது, மூடர்களான சமணர்கள் மந்திரித்துத் தடவும் மயிற்பீலியும் பிரம்பும் நொடியில் கருகிச் சாம்பலாகின்றன. இந்நிலையில் பாண்டிமா தேவியான மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையாரின் விண்ணப்பத்தினை ஏற்றுச் சம்பந்தச் செல்வர் அரண்மனைக்கு வருகை புரிகின்றார். 

சிவசூரியனாய் அங்குத் தோன்றிய சம்பந்த மூர்த்தியைத் தரிசிக்கும் பாண்டிய மன்னரின் கரங்கள் தாமாக உச்சி கூப்பித் தொழுகின்றன ('கண்ட அப்பொழுதே வேந்தன் கையெடுத்தெய்த' என்பார் தெய்வச் சேக்கிழார்). உயர்ந்த பொன்னாசனத்தில் சீர்காழி வேந்தரை அமர்வித்து 'தம்முடைய ஊர் எது?' என்று பாண்டிய மன்னர் பணிவுடன் வினவ, சம்பந்தப் பிள்ளையாரும் சீர்காழி தலத்தின் 12 திருப்பெயர்களைப் பட்டியலிட்டுப் பின்வரும் பாடலோடு துவங்கும் திருப்பதிகமொன்றைப் பாடுகின்றார்,
-
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவம் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சைவயம் உள்ளிட்டங்கு ஆதியாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலநாம் பரவும் ஊரே

அறிவிலிகளான சமணர்கள் எண்ணற்றோர் சம்பந்தப் பெருமானைச் சூழ்ந்து கொண்டு, உரத்த குரலில் பலவாறும் பிதற்றிக் கதறத் துவங்குகின்றனர். அது கண்டு 'அரனருள் பெற்ற இவர் சிறுவராயிற்றே' என்று தாயினும் சாலப் பரிவுடன் அஞ்சி நிற்கும் அரசியாரிடம் சிவஞானச் செல்வர் 'பாண்டி மாதேவியே, பாலன் என்று நம்மையெண்ணி இரக்கம் கொள்ள வேண்டாம், ஆலவாய் இறைவர் அரனாய் நின்று காப்பதால், பிறர்க்குப் பல துன்பங்களை விளைவிக்கின்ற இழிந்த இச்சமணர்களுக்கு நான் எளியவன் அல்லேன்' என்று சைவச் சிம்மமென முழங்குகின்றார், 
-
மானின் நேர்விழி மாதராய் வழுதிக்கு மாபெருந்தேவி கேள்
பானல் வாயொரு பாலன் ஈங்கிவனென்று நீ பரிவெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திருஆலவாய்அரன்நிற்கவே.

இறுதியாய் சம்பந்தச் செல்வரின் பேரருளால் மன்னரின் வெப்பு நோய் முற்றிலும் நீங்கிய பின்னர், மங்கையற்கரசியாரும் குலச்சிறையாரும் சீகாழிப் பெருமானின் திருவடிகளில் பணிந்துக் கண்ணீர் பெருக்கி 'தங்கள் அருளால் நாங்கள் பெருமை பெற்றோம், உய்வு பெறுமாறு இன்றே பிறந்தோம், மன்னவரும் இனியொருப் பிறப்புமற்ற பெருவாழ்வு எய்தினார்' என்று சிவானந்தம் எய்துகின்றனர், 
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 771):
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாதத் தாமரை சென்னி சேர்த்துப்
பெற்றனம் பெருமைஇன்று பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே உளங்களித்துவகை மிக்கார்.

பாண்டிய மன்னரும் உச்சி கூப்பிய கையினராய் ஆளுடைப் பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்துப் பணிந்து 'அடியவன் உய்ந்தேன்' என்று போற்றுகின்றார்,
-  
(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 772):
மீனவன் தன்மேல் உள்ள வெப்பெலாம் உடனே மாற
ஆன பேரின்பம்எய்தி உச்சிமேல் அங்கை கூப்பி
மானமொன்றில்லார் முன்பு வன்பிணி நீக்க வந்த
ஞானசம்பந்தர் பாதம் நண்ணிநான் உய்ந்தேன் என்றான்.

திருஞானசம்பந்தர் (திருவோத்தூரில் ஆண் பனைகள் பெண் பனைகளான அற்புத நிகழ்வு):

ஞானசம்பந்தர் தல யாத்திரையாகச் செல்லும் வழியில், திருவண்ணாமலை மாவட்டம் - செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள திருவோத்தூர் எனும் தலத்தினை அடைகின்றார். அங்குள்ள அடியவர்கள் வாழைகளை நாட்டியும், தோரணங்களால் அலங்கரித்தும், திருவிளக்குகளை ஏற்றியும், நிறை குடம் ஏந்தியும் சிவஞானச் செல்வரை வரவேற்றுப் பணிகின்றனர். 

சீர்காழிச் செல்வர் ஆலயத்தினை வலமாக வந்து வணங்கிக் காதலுடன் உட்ச்சென்று, ஆச்சரியமான திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ள வேதபுரீஸ்வரப் பரம்பொருளைக் கண்ணீர் பெருக்கித் தொழுதுப் பன்முறை பணிந்தெழுந்துப் பாமாலைகளால் போற்றி செய்கின்றார். பின்னர் அப்பதியிலேயே சில காலம் தங்கியிருந்து மறைகள் போற்றும் முதல்வரை முப்போதும் போற்றித் துதித்து வருகின்றார். 

ஒரு சமயம் அத்தலத்தில் வசித்து வரும் சிவனடியார் ஒருவர் சம்பந்த மூர்த்தியின் திருவடி தொழுது 'பெருமானே! சுவாமிக்கு நிவேதனமாகும் பொருட்டு பனைகள் பலவற்றை ஆர்வத்துடன் வளர்த்து வந்தேன். அவையனைத்தும் ஆண் பனைகளாகிக் காய்க்காது ஒழிந்தன. அது குறித்து இங்குள்ள சமணர்கள் பலகாலும் பரிகசிக்கின்றனர். தாங்களே இந்நிலையை மாற்றி அருள வேண்டும்' என்று மனமிக வருந்தி விண்ணப்பிக்கின்றார். 

அடியவரின் தூய அன்பு கண்டு பரிவெய்தும் சைவச் செல்வர் ஆலயத்துள் புகுந்து, முக்கண் மூர்த்தியின் திருமுன்பு பணிந்துப் 'பூத்தேர்ந்தாயன' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் போற்றித் துதித்து விண்ணப்பிக்கின்றார். திருக்கடைகாப்புப் பாடலில் 'குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' என்று துவங்கிய மறுகணமே, அங்கிருந்த ஆண்பனைகள் யாவும் திருவருளால், நிறைந்த குலைகளையுடைய பெண் பனைகளாக மாற, யாவரும் அதிசயித்துக் காழிப் பிள்ளையாரின் திருவடியினைப் போற்றிப் பணிந்து இன்புறுகின்றனர். 
-
குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே.
*
மேலும் சிவஞானச் செல்வருடைய திருவாக்கின் சம்பந்தத்தால் குலைகளை ஈன்ற அப்பனைகளில் பொருந்தியுள்ள ஆன்மாக்கள் யாவும், எண்ணில் பல கோடிப் பிறவிகளாய் சேர்த்து வந்துள்ள தத்தமது சஞ்சித வினைகள் யாவும் நீங்கப் பெற்று, அப்பிறவியின் ஆயுட்காலம் முடிவுற்றதும், மற்றொரு பிறப்பின்றிச் சிவமுத்திப் பேறு பெற்று மகிழ்ந்தன என்று பதிவு செய்கின்றார் சேக்கிழார் பெருமான். 

(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 983):
பிள்ளையார்தம் திருவாக்கில் பிறத்தலால் அத்தாலம்முன்பு 
உள்ள பாசம் விட்டகலஒழியாப் பிறவிதனை ஒழித்துக்
கொள்ளு நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்
வள்ளலார் மற்றுஅவரருளின் வாய்மை கூறின் வரம்பென்னாம்

பனைகளாக ஓரறிவுப் பிறவியெடுத்திருந்த ஆன்மாக்கள் சம்பந்தப் பெருமானின் திருவாக்கில் ஒருமுறை இடம் பெற்ற காரணத்தினாலேயே சிவமுத்தி பெறுமாயின் சீர்காழி வள்ளலின் அருட்திறத்திற்கு எல்லையுமுண்டோ? என்று அதிசயித்துப் போற்றுகின்றார் சேக்கிழார் பெருமான், ஞானசம்பந்த மூர்த்தியின் திருப்பதிகங்களை அனுதினமும் காதலுடன் ஓதி நாமும் சிவகதி சார்ந்து உய்வு பெறுவோம் (சிவாய நம).

திருஞானசம்பந்தர் (திருமயிலையில் எலும்பைப் பெண்ணாக்கிய அற்புத நிகழ்வு):

திருமயிலையில் வணிக மரபினரான சிவநேசர் என்பார் வாழ்ந்து வருகின்றார். சிவபெருமானிடத்து அடிமைத் திறம் பூண்டிருந்த இவர் குபேரனுக்கு இணையான நிதிவளமும் கொண்டிருந்தார். அரனடியார்க்கு வேண்டுவன அளித்து மகிழ்வார், சீர்காழிச் செல்வர் சிவஞானப் பாலினை உண்ட அற்புதத்தை எண்ணி எண்ணி உருகுவார், காழிப் பிள்ளையாரையே இடையறாது தியானித்து வருவார். 

பன்னெடுங்கால தவப் பயனாய்த் தோன்றும் பெண் மகவிற்குப் பூம்பாவை எனும் பெயரிட்டுச் சிறப்புடன் வளர்த்து வருகின்றார். பூம்பாவைக்கு அப்பொழுது ஏழு வயது, சம்பந்த மூர்த்தி மதுரையில் சமணரை வென்று சைவ சமயத்தினை நிறுவிய திருச்செயலைச் கேள்வியுறும் சிவநேசர் ஆடிப் பாடி மகிழ்கின்றார்; திசை நோக்கித் தொழுது நிலத்தில் வீழ்ந்துப் பணிகின்றார், அச்செய்தியை அறிவித்தோர் யாவருக்கும் பெரும் பொருளினைக் கொடுத்துப் பின் யாவரும் கேட்குமாறு 'சீர்காழிப் பிள்ளையாருக்குப் பூம்பாவை; என் செல்வங்கள் மற்றும் என்னையுமே முழுமையாய்த் தந்து விட்டேன்' என்று அகங்காரம்; மமகாரங்களை அறவே நீக்கியவராய் மிளிர்கின்றார் சிவநேசர்.
-
(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 1053)
சுற்ற நீடிய கிளையெலாம் சூழ்ந்துடன் கேட்பக்
கற்ற மாந்தர்வாழ் காழிநாடு உடையவர்க்கு அடியேன்
பெற்றெடுத்த பூம்பாவையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன் யானென்று மொழிந்தார்.

நந்தவனத்தில் விளையாடும் பூம்பாவை விதிவசத்தால் அரவம் தீண்டி மாண்டு விடுகின்றாள், தாங்கொணாத துயரெய்தும் சிவநேசர் அந்நிலையிலும் 'இவள் சம்பந்தருக்குச் சமர்ப்பிக்கப் பெற்றவள்' என்று ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு, மகளின் எலும்பு; சாம்பல் இவைகளை ஓர் குடத்திலிட்டுப் பாதுகாத்து, ஞானசம்பந்தரின் திருவடிகளையே எந்நேரமும் தியானித்து வருகின்றார்.

சில வருடங்கள் செல்கின்றன, சம்பந்தச் செல்வர் திருவொற்றியூர் தலத்தினைத் தொழுதுப் பின் திருமயிலை நோக்கி எழுந்தருளி வருவதனை அறியும் சிவநேசர் திருமயிலையிலிருந்து ஒற்றியூர் வரையிலும் நடைக்காவணமிட்டுப் பந்தலமைக்கின்றார்; வழியெங்கும் தோரணங்களை நாட்டிப் பூமாலைகளால் மயிலை நகரை தேவலோகம் போன்று அலங்கரித்துப் பின் பிள்ளையாரை எதிர்கொண்டு பணிய மயிலை வாழ் தொண்டர்களுடன் விரைகின்றார். 

நெடுந்தொலைவில் சம்பந்தச் செல்வரின் சிவிகையைக் கண்ணுற்ற கணத்திலேயே அகமிக உருகிக் கண்ணீர் பெருக்கி, நிலத்தில் வீழ்ந்துப் பணிகின்றார். சிவஞானச் செல்வர் சிவிகையினின்றும் இறங்கி சிவநேசரையும் தொண்டர்களையும் வணங்குகின்றார் ('தொழுது எழுந்தருளி' என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு). அங்குள்ளோர் வாயிலாக சிவநேசரின் அடிமைப் பண்பைக் கேள்வியுற்று மகிழ்கின்றார். அனைவருடனும் திருமயிலை ஆலயத்துள் புகுந்து ஆச்சரியமாய் எழுந்தருளியுள்ள கபாலீஸ்வரப் பரம்பொருளைப் போற்றுகின்றார். 

பின் ஆலயத்தினின்றும் வெளி வந்து 'சிவநேசரே! உமது புதல்வியின் எலும்பு நிறைந்த குடத்தினை இவ்விடம் கொணர்வீர்' என்று கூறுகின்றார். சமணர்களும் மற்றோரும் பெருந்திரளெனக் கூடுகின்றனர், பூம்பாவையை உயிர்ப்பிக்கும் குறிப்புடன், யாவரும் காணுமாறு, 'மட்டிட்ட புன்னையம் கானல்' எனும் திருப்பதிகம் பாடுகின்றார். 10ஆம் திருப்பாடலை நிறைவு செய்யும் கணத்தில், மண்ணவரும் விண்ணவரும் வியந்து போற்றுமாறு, அப்பொழுது உள்ள வளர்ச்சியோடும், பேரழகுத் திருத்தோற்றத்துடனும் பூம்பாவை உயிர் பெற்றெழுந்து சம்பந்தச் செல்வரைப் பணிகின்றாள்.  

15 திருப்பாடல்களால் பாதாதி கேசமாய் சிவச் செல்வியாகிய பூம்பாவையின் பேரழகினைத் தெய்வச் சேக்கிழார் வியந்து போற்றுகின்றார், ஞான சம்பந்தப் பெருமானின் பேரருளாலும் சிவபெருமானின் திருவருளாலும் தோன்றிய சிவ ஷ்ருஷ்டி அல்லவா!!

மகளை மணம் புரியுமாறு விண்ணப்பித்த சிவநேசரிடம் 'உமது புதல்வி அரவம் தீண்ட மாண்டாள்! இவள் திருவருளால் எம்மால் தோற்றுவிக்கப் பட்டவள்! ஆதலின் இவள் நமக்குப் புதல்வியாவாள்' என்று அருள் புரிகின்றார் (சிவ சிவ).

திருஞானசம்பந்தர் (திருமண நிகழ்வில் தோன்றிய சிவ ஜோதியும், அவதார நிறைவும்):

அப்பொழுது ஞானசம்பந்த மூர்த்திக்கு 16 வயது நிறைவுறும் சமயம், தந்தையார் சிவபாதரும், சுற்றத்தினரும் சம்பந்தச் செல்வரிடம் 'வேத நெறியின் வழி நிற்றலான இல்லறத்தின் மேன்மையினை உணர்த்தும் பொருட்டுத் தாம் திருமண நிகழ்விற்கு அவசியம் இசைதல் வேண்டும்' என்று ஒருசேர விண்ணப்பிக்க, முதலில் மறுத்துரைத்தாலும் பின் திருவருளை நினைந்தவாறு இசைகின்றார். 

ஆச்சாள்புரம் எனும் திருநல்லூர் பெருமணத்திலுள்ள நம்பாண்டார் நம்பி என்பாரின் தவப்புதல்வியுடன் திருமணம் நிகழ்வதாக நிச்சயிக்கப் பெறுகின்றது. திருநீலநக்க நாயனார் மற்றும் அவரின் திருத்துணைவியார், திருமுருக நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மற்றும் அவரின் திருத்துணைவியார் ஆகியோரும், மற்றோரும் தத்தமது சுற்றத்தினருடன் இவ்வற்புத நிகழ்வினைத் தரிசிக்கக் கூடுகின்றனர். 

குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில் திருநல்லூர் பெருமணத்திலுள்ள சிவலோகத் தியாகர் ஆலயத்திற்கு அருகிலுள்ள திருமடமொன்றில் திருமண வைபவம் சிறப்புற நடந்தேறுகின்றது. திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி சிவவேள்வி வளர்த்துச் சடங்குகளைச் செய்விக்கின்றார், சீர்காழி அரசர் துணைவியாரின் மலர்க்கரம் பற்றி 'இனி இவளுடன் சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வேன்' என்று எண்ணியவாறு வேள்வித் தீயினைச் சிவமாகவே கண்டும் உணர்ந்தும் வலம் வருகின்றார்.

பின் யாவரும் உடன்வர, சிவலோகத் தியாகரின் திருமுன்பு வீழ்ந்துப் பணிகின்றார். தன் திருமண நிகழ்விற்கென அங்கு கூடியுள்ள அனைவரும் வினை நீக்கம் பெறுதலையும், தன் அவதார நோக்கம் நிறைவுறுதலையும் குறிப்பெனக் கொண்டு ''நல்லூர் பெருமணத்தில் மேவும் ஆதிப் பரம்பொருளே, பிறைமதிப் புண்ணியனே, உன் பொன்னார் திருவடிகளை வந்தடையும் தக்கதொரு பருவம் இதுவன்றோ, அருள் புரிவாய் ஐயனே!' என்று பாமாலையால் பணிந்தேத்துகின்றார், 

(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 1245):
காதல்மெய்ப் பதிகம் கல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுற பிறவிப் பாசம் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன்
பாதமெய்ந் நீழல் சேரும் பருவம் ஈதென்று பாட.

கருணைப் பெருங்கடலான முக்கண் முதல்வரும் அசரீரியாய் 'சம்பந்தா! நீயும் உன் மனைவியும் மற்றுமுன் புண்ணிய மணத்தினைத் தரிசித்தார் யாவரும் நமது சிவசோதியில் புகுந்து வருக' என்று பேரருள் புரிகின்றார். 

(பெரிய புராணம்: திருஞானசம்பந்த மூர்த்தி புராணம்: திருப்பாடல் 1246):
தேவர்கள் தேவர் தாமும் திருவருள் புரிந்து நீயும்
பூவையன்னாளும் இங்குன் புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பாற் சோதி இதனுள் வந்தெய்தும் என்று
மூவுலகொளியால் விம்ம முழுச்சுடர்த் தாணுவாகி.

முருக நாயனார், திருநீலநக்கர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிவபாதர், நம்பாண்டார் நம்பி, திருச்சிவிகை சுமந்தோர், முத்துச் சின்னங்கள் ஊதியோர் மற்றும் அங்கு கூடியிருந்த திருத்தொண்டர் யாவரும் தத்தம் இல்லத்தினருடன், சஞ்சித வினைகள் யாவும் நீங்கப் பெற்றுச் சிவசோதியுள் புகுந்துக் கிடைத்தற்கரிய சிவமுத்திப் பேற்றினைப் பெறுகின்றனர்.

இறுதியாய் இவ்வையம் வாழ வந்துதித்த சீர்காழித் தோன்றலான நம் சம்பந்தப் பெருமான் நமசிவாயத் திருப்பதிகம் பாடியருளிப் பின் காதலியாரின் கரம் பற்றிச் சிவசோதியுள் புகுந்து செல்ல, சோதி மறைந்து ஆலயம் முன்பு போலத் தோற்றுகின்றது. 

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே!!!

ஆண்டு தோறும், சிதம்பரம் அருகிலுள்ள திருநல்லூர்ப் பெருமணத்தில் வைகாசி மூலமன்று, சம்பந்த மூர்த்தியின் திருமண உற்சவத்தையும் அதனைத் தொடர்ந்து அதிகாலையில் நடந்தேறும் ஐக்கிய உற்சவத்தினையும் தரிசிப்போர் யாவரும் சம்பந்தச் செல்வரின் திருவடி பலத்தால் சிவமுத்திப் பேறு பெற்று உய்வு பெறுவர் என்பது திண்ணமன்றோ (பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி)!!

திருஞானசம்பந்தர் (பாலை நெய்தலாகப் பாடிய நிகழ்வு):

திருஞானசம்பந்தர் சிவத்தலமொன்றில், அடியவர்களின் வேண்டுகோளினை ஏற்றுப் பாலை நிலப் பகுதியை நெய்தலாக மாறும் வண்ணம் திருப்பதிகமொன்றினைப் பாடினார் என்றொரு திருமுறைக் குறிப்பு உண்டு. 

பெரிய புராணக் காலத்திற்கு முன்னரே 11ஆம் திருமுறை ஆசிரியரான நம்பியாண்டார் நம்பிகள் தம்முடைய 'ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில்' இதனை 'பாலையும் நெய்தலும் பாடவலான்' என்று பதிவு செய்கின்றார். மற்றொருபுறம் சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருக்களிற்றுப்படியாரில் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் 'பாலைநெய்தல் பாடியதும்' என்று இந்நிகழ்விற்குப் பிரமாணம் கூறுகின்றார்.

மேற்குறித்த இரு அருளாளர்களும் நிகழ்வு நடந்தேறிய தலத்தினைக் குறிக்காவிடினும் சைவ மரபில் 'திருநனிபள்ளி' எனும் தலமே அந்நிகழ்விற்குரியது என்பர். எனினும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் இந்நிகழ்வினைப் பதிவு செய்யாது விடுத்தது வியப்புக்குரியதே.

திருஞானசம்பந்தர் (ஈன்ற தாயும் பணிந்துப் போற்றும் சிவஞானக் குழந்தை):

திருஞானசம்பந்தர் திருநெல்வாயில் அரத்துறையில் சிவபெருமானின் பேரருளைப் பெற்றுச் சீர்காழி திரும்பும் அற்புத நிகழ்வினைத் தெய்வச் சேக்கிழார் பின்வருமாறு காட்சிப் படுத்துகின்றார். ஆங்காங்கேயுள்ள மறையோர்கள் யாவரும் காழிப் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கி நிற்க, திருமாளிகையின் வாயிலில் மகளிர் நிறைகுடங்களையும்; தீபங்களையும் ஏந்தி நின்று வரவேற்க, சம்பந்தச் செல்வரை ஈன்ற பகவதியம்மையார் சிவபெருமானின் திருநீற்றினைச் சிவஞானச் செல்வருக்குக் காப்பாகச் சாற்றிப் பின் பணிந்துப் போற்றினார் என்று சேக்கிழார் பெருமான் பதிவு செய்கின்றார் ('இறைவர் திருநீற்றுக் காப்பேந்தி முன்சென்று ஈன்ற தாயார்சாத்தி இறைஞ்சி ஏத்த' எனும் வரிகள் அற்புதமானவை).

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 262):
மறையவர்கள் அடிபோற்றத் தந்தையாரும்
மருங்கணைய மாளிகையில்அணையும் போதில்
நிறைகுடமும் மணிவிளக்கும் முதலாயுள்ள
நீதிமறைக் குலமகளிர் நெருங்கி ஏந்த
இறைவர் திருநீற்றுக் காப்பேந்தி முன்சென்று 
ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சிஏத்த
முறைமை அவர்க்கருள்செய்து மடத்தில் புக்கார்
முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.

உலகியலில் 'தாய்' எக்காலத்திலும் எந்நிலையிலும் போற்றி வணங்கத் தக்கவரே எனினும் இங்கு அம்மையார், சிவபரம்பொருளினால் பரிபூரணமாய் ஆட்கொள்ளப் பெற்ற 'தனித்தலைமைக் குருநாதர்' எனும் அருளியல் நோக்கில், ஞானமுண்ட வள்ளலைப் பணிந்துப் போற்றினாராம். எத்தகு பெருநிலையில் பகவதி அம்மையார் விளங்கியிருக்கின்றார் என்று எண்ணுந்தோறும் உள்ளம் நெகிழுமன்றோ!! திருப்பாடலின் இறுதி வரிகளில் சம்பந்த மூர்த்தி இல்லத்திற்குள் எழுந்தருளிச் சென்றதை 'மடத்தில் புக்கார்' என்று மடத்திற்குள் சென்ற நிலையிலேயே சேக்கிழார் பெருமான் பதிவு செய்திருக்கும் அற்புதத் தன்மையினையும் சிந்தித்து மகிழ்தல் வேண்டும்.

விருது கவி ராஜ சிங்கம்:

'கருவின் உருவாகி வந்து' என்று துவங்கும் பழனித் திருப்புகழில் அருணகிரிப் பெருமான் ஞானசம்பந்த மூர்த்தியை 'விருது கவி ராஜ சிங்கம்' என்று போற்றி மகிழ்கின்றார். 'விருது' எனும் பதம் இங்கு 'வெற்றி' என்று  பொருள் படும் (வெற்றிக் கவி ராஜ சிங்கம்). 

தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

கருவின் உருவாகி வந்து வயதளவிலே வளர்ந்து
     கலைகள் பலவே தெரிந்து ...... மதனாலே

கரியகுழல் மாதர் தங்கள் அடிசுவடு மார் புதைந்து
     கவலை பெரிதாகி நொந்து ...... மிகவாடி

அரகரசிவாய என்று தினமும் நினையாமல் நின்று
     அறுசமய நீதியொன்றும் அறியாமல்

அசனமிடுவார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
     அநுதினமும் நாணமின்றி ...... அழிவேனோ

உரகபட மேல் வளர்ந்த பெரியபெருமாள் அரங்கர்
     உலகளவு மால் மகிழ்ந்த ...... மருகோனே

உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
     உறைபுகலியூரில் அன்று ...... வருவோனே

பரவைமனை மீதிலன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமனருளால் வளர்ந்த ...... குமரேசா

பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீளவென்று
     பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.

ஞானக் குழந்தை - திரைப்படக் காட்சி (திரைக்கதையும் உண்மை வரலாறும்):

1979ஆம் ஆண்டு வெளிவந்த 'ஞானக் குழந்தை' திரைப்படத்தில், சிவபெருமானும் அம்பிகையும் திருஞானசம்பந்தர் முன்பு மாறுவேடத்தில் தோன்றி பொற் தாளத்தினை அளித்துப் பின் அம்பிகையைக் குறித்துப் பாடச் சொல்வதாக இடம்பெற்றிருப்பது திரைக்கதைச் சுவைக்காக உருவாக்கப் பெற்றிருக்கும் கற்பனைக் காட்சியே. அதனைத் தொடர்ந்து 'ஓசை கொடுத்த நாயகியே' எனும் திரைப்பாடலும் அற்புதமாய் அமைக்கப் பெற்றிருக்கும். 

எனினும், திருக்கோலக்கா தலத்திற்கு ஞான சம்பந்தர் வருகை புரிகையில், அம்மையப்பரின் திருவருளால், 'சம்பந்தரின் பிஞ்சுக் கரங்களில் பொற்தாளம் தானாகச் சென்று சேர்ந்தது' என்பதே தெய்வச் சேக்கிழார் வெளிப்படுத்தும் பெரிய புராணக் காட்சி. மூல நூல் விவரிக்கும் உண்மை நிகழ்வினை உள்ளத்தில் இருத்தி, திரைப்படக் காட்சியை 'கற்பனை' எனும் புரிதலோடு அனுபவித்து மகிழ்வதில் தவறில்லை.

திருஞானசம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரமா? (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

அருணகிரிப் பெருமான், எண்ணிறந்த திருப்புகழ் திருப்பாடல்களில், ஞானசம்பந்தர் நிகழ்த்தியுள்ள அற்புதங்களை முருகப் பெருமானின் திருச்செயல்களாகவே போற்றியுள்ளார். விராலிமலைத் திருப்புகழில்,  பாண்டியனின் வெப்பு நோய் போக்கிய நிகழ்வினை 'மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனையே நிமிர்த்த தம்பிரானே' என்று முருகப் பெருமானின் மீது ஏற்றிப் பாடுகின்றார். ஆதலின் ஞானசம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரமா? என்பது குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவோம், 

சாரூபம்; சாமீப்யம்; சாலோகம்; சாயுச்சியம் எனும் நால்வகை முத்திப் பேறுகளுள், முன்னமே முருகக் கடவுளுடைய சாரூப முத்தி பெற்றுத் திருக்கயிலையிலிருந்த முத்தான்மா ஒருவரையே சிவபெருமான் திருஞானசம்பந்தராக இப்புவியில் அவதரிக்கச் செய்கின்றார் என்று பரம குருநாதரான நம் வாரியார் சுவாமிகள் தெளிவுறுத்துகின்றார். இவ்வகை முத்தான்மாக்கள் ஆறுமுகங்கள்; பன்னிரு கரங்களும் கொண்டு அபர சுப்ரமண்யர்களாக விளங்கி வருவர் என்று விவரிக்கும் நம் சுவாமிகள் பின்வரும் பெரிய புராணப் பாடலையும் அகச் சான்றாக முன்வைக்கின்றார்,

(பெரிய புராணம்: திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 55)
பண்டுதிருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார் தொடர்ந்த பிரிவுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற் போல்அழுவார் குறிப்பயலாய்

முதல் இருவரிகளில், 'முன்பு திருவடி மறவாத தன்மையில் விளங்கியிருந்த முத்தான்மா ஒருவரை, திருத்தொண்டின் தன்மையை உலகுக்கு வகுத்துரைக்க, சிவபாத இருதயருக்கு திருக்குமாரராக சிவபெருமான் அவதரிக்கச் செய்கின்றார்' என்று சேக்கிழார் பெருமான் ஆச்சரியமாய் பதிவு செய்துள்ளார்.

மேற்குறித்துள்ள சுவாமிகளின் கருத்துக்களை உள்ளத்து இருத்தி இன்னபிற கோணங்களிலும் இதனை விரிவுபடுத்திச் சிந்திப்போம், பரம்பொருளான சிவமூர்த்திக்கு அடியவர்களுக்கா குறை?, சுவாமியின் கடைக்கண் நோக்குக்காக கடும் தவமியற்றிக் காத்திருக்கும் எண்ணிறந்த சித்தர்; தவமுனிவோர்; தேவர்; கின்னரர்; கணங்கள்; அருளாளர்கள்; ஞானிகள்; திருத்தொண்டர் என்று பலரிருக்க, சிவசுவரூபியான முருகக் கடவுளைத் தன்னைப் பாடுவிக்கும் பொருட்டு அனுப்புவிப்பது என்பது எவ்விதத்திலும் ஏற்புடைய கருத்தாகாது (சிவபெருமானுக்கும் முருகக் கடவுளுக்கும் பேதமில்லை என்பது கந்தபுராண வாக்கு). 

பிறவித் துன்பத்தினின்றும் உய்வு பெறும் நன்னெறியினைக் காட்ட, இப்புவியில் பிறவியெடுத்து, சஞ்சித; பிராரப்த; ஆகாம்ய வினைச் சூழலில் சிக்கி உழன்று, எண்ணிறந்த இடர்களுக்கு இடையில் மெதுமெதுவே சிவஞானப் பாதையில் பயணித்து, சிவபரம்பொருளின் திருவருளால் மும்மலங்களையும் களைந்து சிவமாம் பேறு பெற்றுள்ள முத்தான்மா ஒருவரன்றோ பொருத்தமானவராக இருக்க இயலும்! ஆதலின் சிவஞானப் பெருவெளியில் நின்றாடும் ஆறுமுக தெய்வத்தைக் காட்டிலும் கந்தக் கடவுளின் திருவடி மறவாப் பண்பினரான அடியார்களே நமை உய்விக்க உரித்தானவர் என்பது தெளிவு. 

சம்பந்தப் பிள்ளையார் ஒவ்வொரு சிவாலயத்திலும் பெற்றுள்ள தரிசன அனுபவத்தினைத் தெய்வச் சேக்கிழாரின் பாடல் வரிகள் மூலம் கண்டுணர்ந்தால் சீர்காழி அரசர் நம்மவர் (ஜீவான்மாக்களுள் ஒருவர்) என்பது தெள்ளென விளங்கும். இறைவன் பாடுவிப்பவன், தன்னைத் தானே உருகி உருகி இறைவனே பாடிக் கொள்வதென்பது ஒவ்வாத கருத்து. திருத்தொண்டர் புராணத்தில் இறையவரையும் சேர்ப்பதோ? 

ஆதலின் அருளாளர்கள் உபச்சார மார்க்கமாகவே சம்பந்தரின் செயல்களை முருகப் பெருமானின் மீது ஏற்றிப் போற்றியுள்ளனர் எனும் புரிதல் அவசியம். ஞானசம்பந்தர் நம்முள் ஒருவர் என்று உணர்ந்து அனுபவிப்பதே ரசமான; சுவையான; அற்புதமான அனுபவம், சீர்காழிச் செல்வர் தொண்டர் தலைவர், பதியாகிய சிவபரம்பொருளோடு நம்மை இணைக்கும் தெய்வீகப் பாலமாய் விளங்குபவர் (சிவ சிவ)!!!.