பித்தா பிறைசூடி


பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே.

நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய்த் திரிந்து எய்த்தேன் பெறலாகா அருள்பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
ஆயா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே.

மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னைப்
பொன்னே மணிதானே வயிரம்மே பொருதுந்தி
மின்னார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அன்னே உனக்காளாய்இனி அல்லேன் எனலாமே.

முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்நீ
செடியார் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அடிகேள் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

பாதம் பணிவார்கள்பெறு பண்டம்அது பணியாய் 
ஆதன் பொருளானேன் அறிவில்லேன் அருளாளா
தாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
ஆதீஉனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

தண்ணார் மதிசூடீ தழல் போலும் திருமேனீ
எண்ணார் புரமூன்றும் எரிஉண்ண நகைசெய்தாய்
மண்ணார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அண்ணா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்
வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்
தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

ஏற்றார் புரம்மூன்றும் எரிஉண்ணச் சிலைதொட்டாய்
தேற்றாதன சொல்லித் திரிவேனோ செக்கர் வான்நீர்
ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
ஆற்றாய் உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே.

மழுவாள் வலன்ஏந்தீ மறையோதீ மங்கை பங்கா
தொழுவார்அவர் துயராயின தீர்த்தல் உன்தொழிலே
செழுவார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அழகா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே.

காரூர் புனலெய்திக் கரைகல்லித் திரைக் கையால்
பாரூர் புகழெய்தித் திகழ் பன்மாமணி உந்திச்
சீரூர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன் எனலாமே.

சுந்தரரை ஓலை காட்டி ஆட்கொண்ட திருவெண்ணெய்நல்லூர் வழக்காடு மன்றம்:

திருவெண்ணெய்நல்லூர் ஆலய கோபுர வாயிலிலிருந்து சிறிது தொலைவிலேயே ஆச்சரியமான இந்த மண்டபம் அமைந்துள்ளது.


நெற்றி விழியானும் நிகரில்லானும்:

சுந்தரரின் திருமண நிகழ்வில் சிவபெருமான் முதிய வேதியவர் வடிவில் தோன்றி 'நம்மிருவருக்கும் இடையேயொரு வழக்கொன்று உள்ளது, அதனை முடித்த பின்னர் நீ உன் மண வேள்வியினைச் செய்ய முயலுக' என்று கூறுகின்றார். அதற்கு நம் சுந்தரனாரும் 'அவ்வாறாயின் அவ்வழக்கை முடிக்காமல் யான் மணம் புரியேன்' என்று  மறுமொழி கூறுவதாகத் தெய்வச் சேக்கிழார் பின்வரும் திருப்பாடலை அமைக்கின்றார்,  

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 182)
நெற்றி விழியான் மொழிய நின்ற நிகரில்லான்
உற்றதொர் வழக்குஎனிடை நீஉடையதுண்டேல்
மற்றது முடித்தலது யான் வதுவை செய்யேன்
முற்றஇது சொல்லுகென எல்லை முடிவில்லான்.

மேற்குறித்துள்ள திருப்பாடலின் முதல் வரி அற்புதத் தன்மை வாய்ந்தது, ஆதிப் பரம்பொருளான சிவபெருமானையும்; அப்பெருமான் அடிமை கொள்ள வரும் சுந்தரரையும் ஒரே வரியில் குறிக்க வரும் சேக்கிழார் பெருமான், சிவமூர்த்தியை 'நெற்றி விழியான்' என்று மட்டுமே குறித்துப் பின் சுந்தரனாரையோ 'நின்ற நிகரில்லான்' என்று போற்றுகின்றார். 

பொதுவில் இருவேறு அடியவர்களின் சந்திப்பினைக் குறிக்கையிலோ அல்லது சுந்தரனார் புரிந்துள்ள ஏதேனுமொரு அற்புத நிகழ்வினை விவரிக்கையிலோ இவ்விதம் குறித்திருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே, இங்கோ ஒரு புறத்தில் அண்ட சராசரங்களுக்கெல்லாம் தனிப்பெரும் தெய்வமாய் விளங்கி அருளும் இறையனாரையும் மற்றொரு புறத்தில் அவருடைய அடித்தொண்டரையும் ஒருசேர நிறுத்தி, அடியார்க்கு அடியாராக விளங்கும் நம் சுந்தரனாரை 'நிகரில்லான்' என்று போற்ற வேண்டுமாயின் வன்தொண்டரின் சிறப்பினை வார்த்தைகளால் விவரிக்கவும் இயலுமோ? (இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்)!!

சுந்தரர் திருவடி தீட்சை பெற்ற சித்தவட மடம் (தரிசனக் காட்சிகள்):

கடலூர் மாவட்டத்தில், திருவதிகை வீரட்டானேஸ்வர் திருக்கோயிலிலிருந்து 5 1/2 கி.மீ பயணத் தொலைவில், கோட்டலம்பாக்கம் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது சித்தவட மடம் எனும் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில். சிறிய ஆலய வளாகம், மூலக் கருவறைக்கருகில், சுவாமியை வணங்கும் திருக்கோலத்தில் சுந்தரரின் ஆச்சரியமான உற்சவத் திருமேனியைத் தரிசித்து மகிழலாம். 'திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும் திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்' என்று அப்பர் தேவாரத்தில் குறிக்கப் பெற்றுத் தேவார வைப்புத் தலமாகவும் திகழும் சிறப்புப் பொருந்தியது, சுந்தரனார் இவ்விடத்திலிருந்து தான் திருவதிகை இறைவரைத் திருப்பதிகத்தால் போற்றிப் பரவியுள்ளார் (சிவ சிவ)!!!

சுந்தரரின் அவதாரத் தலம் (திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் - தரிசனக் காட்சிகள்):


விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் மற்றும் திருக்கோயிலூரிலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்திலும், திருவெண்ணெய்நல்லூர்; பண்ருட்டி மற்றும் உளுந்தூர் பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருநாவலூர்.