சுந்தரர் (ஊன்றுகோல் வேண்டுதல்):

இரு கண் பார்வையும் இழந்திருந்த சுந்தரருக்குத் திருவெண்பாக்கத்தில் சிவபெருமான் ஊன்றுகோலொன்றினை அருளினார் என்பது அறிந்த செய்தியே. எனினும் வன்தொண்டர் 'முன்னரே தனக்கு ஊன்றுகோலினை அளித்தருளுமாறு வேண்டியிருந்தார்' என்பது இவ்விடத்தில் நினைவு கூர வேண்டியதொரு முக்கியக் குறிப்பு. 

சங்கிலியாருக்கு அளித்திருந்த வாக்கை மீறி ஒற்றியூர் எல்லையைத் தாண்டிய மறுகணமே சுந்தரனாரின் இரு கண் பார்வையும் மறைகின்றது. அந்நிலையில் 'அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்' எனும் திருப்பதிகத்தினால் ஒற்றியூர் இறைவரிடம் பிழை பொறுக்குமாறு மன்றாடுகின்றார், இதன் 4ஆம் திருப்பாடலில் 'ஊன்றுகோல் எனக்காவதொன்றருளாய்' என்று விண்ணப்பிக்கின்றார், 

(சுந்தரர் தேவாரம் - திருவொற்றியூர் - திருப்பாடல் 4)
ஈன்று கொண்டதோர் சுற்றமொன்றன்றால் யாவராகில் என் அன்புடையார்கள்
தோன்ற நின்றருள் செய்தளித்திட்டாற் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்கு வழக்காகில்
ஊன்றுகோல் எனக்காவதொன்றருளாய் ஒற்றியூரெனும் ஊருறைவானே

இந்நிகழ்வின் தொடர்ச்சியாய் 'வட திருமுல்லைவாயில்' தலத்தில் 'அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே' என்று தொழுது வேண்டிப் பின் திருவெண்பாக்கத்தில் சிவமூர்த்தியின் திருவருளால் ஊன்றுகோலினைப் பெறுகின்றார்.

No comments:

Post a Comment