சுந்தரர் (வழித்துணையாய் வந்த விடையவர்):

சுந்தரர் திருமுதுகுன்றம் நோக்கிச் செல்லும் வழியில், கூடலையாற்றூர் தலத்தினைச் சேராதவராய் அதன் எல்லையைக் கடந்து மேலும் முன்னேறிச் செல்ல முனைகையில், ஆற்றூர் இறைவர் வேதியரின் திருவடிவு தாங்கி வன்தொண்டர் காணுமாறு எழுந்தருளி வருகின்றார். மறையவரை வணங்கி முதுகுன்றம் செல்லும் மார்க்கத்தினை வினவும் சுந்தரரிடம் இறையனார், 'கூடலையாற்றூருக்குச் செல்லும் வழி இதுவே' என்று பிறிதொரு மார்க்கத்தினைக் காண்பித்துப் பின் தாமே வழித்துணையாய் முன்னே செல்லத் துவங்குகின்றார்.       

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 101):
செப்பரும் பதியில் சேரார் திருமுதுகுன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் செல்லும் ஒருவழி உமையாளோடும்
மெய்ப் பரம்பொருளாய் உள்ளார் வேதியராகி நின்றார்
முப்புரி நூலும் தாங்கி நம்பியாரூரர் முன்பு

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 102):
நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார்
இன்றியாம் முதுகுன்றெய்த வழி எமக்கியம்பும் என்னக்
குன்ற வில்லாளியாரும் கூடலையாற்றூர் ஏறச்
சென்றது இவ்வழிதானென்று செல்வழித் துணையாய்ச் செல்ல.

மறுமொழியேதும் புகலாமல், மந்திரத்திற்குக் கட்டுப்பட்டாற் போன்று, கூப்பிய கரங்களோடு நான்மறை நாயகரைத் தொடரும் தம்பிரான் தோழர், சிறிது நேரத்தில் முன்னாகச் சென்றிருந்த அந்தணரைக் காணாது திகைப்புறுகின்றார், வழித்துணையாய் வந்தருளியது ஆற்றூர் மேவும் ஆதி மூர்த்தியே என்றுணர்ந்து உளம் நெகிழ்ந்து, 'அடிகள் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே' எனும் திருப்பதிகத்தினால் போற்றிப் பரவுகின்றார். 
-
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 103):
கண்டவர் கைகள் கூப்பித் தொழுதுபின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழுவென்றேத்தி
அண்டர்தம் பெருமான் போந்த அதிசயம் அறியேனென்று
கொண்டெழு விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார்

No comments:

Post a Comment