சுந்தரர் (நாட்டியத்தான்குடியில் சிவபெருமான் உழவராகக் காட்சியளித்தாரா?)

நாயன்மார்கள் குறித்த நிகழ்வுகளுக்கு பெரிய புராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் மற்றும் திருப்புகழ் ஆகிய தெய்வீகப் பனுவல்களையே முதற்கட்ட பிரமாணமாகக் கொள்ளுதல் வேண்டும். திருமுறைச் சான்றுகளோடு முரண்படாத தல புராண நிகழ்வுகளை இதற்கடுத்த நிலைப் பிரமாணமாக ஏற்கலாம். மேற்குறித்துள்ள முதல் இருநிலைப் பிரமாணங்களோடு முரண்பாடாதிருப்பின், வழிவழியே சமய மரபு சார்ந்து வரும் செவிவழிச் செய்திகளை அதற்கடுத்த நிலைத் தரவுகளாக ஏற்கலாம். இனி சுந்தரரின் திருநாட்டியத்தான்குடி தல வருகையினைப் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் எவ்வாறு பதிவு செய்கின்றார் என்பதனை முதலில் அறிந்து கொள்வோம்,

'ஏயர்கோன் கலிக்காமர்' பகுதியில், திருப்பாடல் 33ல் துவங்கி 42 வரையிலான 10 திருப்பாடல்களில் இந்நிகழ்வு விவரிக்கப் பெறுகின்றது. சுந்தரர் கோட்புலி நாயனாரின் அழைப்பினை ஏற்றுத் திருநாட்டியத்தான்குடி நோக்கிப் பயணித்துச் செல்கின்றார். அச்செய்தியினைக் கேள்வியுறும் கோட்புலி நாயனார், அப்பதியினை நன்முறையில் அலங்கரித்து, நகர எல்லையிலேயே சென்று தம்பிரான் தோழரை எதிர்கொண்டு வணங்கித் தம்முடைய திருமாளிகைக்கு அழைத்துச் செல்கின்றார். 

வன்தொண்டரை மணியாசனத்தில் அமர்வித்துப் பாதபூஜை புரிந்துப் பின் திருவமுது செய்வித்து மகிழ்கின்றார். கோட்புலியாரின் சிங்கடி; வனப்பகை எனும் இரு புதல்வியரையும் தம்முடைய மக்களாக ஏற்று அருள் புரிகின்றார் சுந்தரர். பின்னர் கோட்புலி நாயனாருடன் திருநாட்டியத்தான்குடி ஆலயம் சென்று, மாணிக்கவண்ணர் எனும் திருநாமத்தில் எழுந்தருளியுள்ள சிவமூர்த்தியை 'பூணான் ஆவதோர் அரவம் கண்டு அஞ்சேன்' எனும் திருப்பதிகத்தினால் தொழுதேத்துகின்றார், இறுதித் திருப்பாடலில் கோட்புலி நாயனாரின் திருத்தொண்டினைச் சிறப்பித்து மகிழ்கின்றார்.

இனி சுந்தரரின் வருகை குறித்து இத்தலத்தில் நிலவி வரும் மற்றொரு செய்தியினையும் காண்போம், தலபுராண நூலாக அமையாவிடினும் இத்தலம் குறித்து வழங்கிவரும் பல்வேறு செய்திகளின் தொகுப்பு நமக்கின்று தலபுராணச் செய்திகளாக கிடைக்கப் பெறுகின்றது. 

சுந்தரர் திருநாட்டியத்தான்குடி ஆலயத்திற்குத் தனியே செல்லுகையில், கருவறையில் இறைவரைக் காணாது திகைப்பதாகவும், அங்குள்ள விநாயக மூர்த்தி வழிகாட்ட;  அருகிலுள்ள வயல்வெளியொன்றில் சிவபெருமானும் அம்பிகையும் உழவன்;உழத்தி திருக்கோலத்தில் நடவு செய்து கொண்டிருப்பதைத் தரிசித்துப் பின்வருமாறு பாடுவதாகவும் இச்செய்தி தெரிவிக்கின்றது, 

நட்ட நடாக்குறை நாளைநடலாம்
நாளை நடாக்குறை சேறு தங்கிடவே
நட்டதுபோதும் கரையேறி வாரும்
நாட்டியத்தான்குடி நம்பி

இதனைச் செவியுற்று முக்கண் முதல்வரும்; இறைவியும் திருவுருவம் மறைந்து ஆலயத்தில் மீளவும் எழுந்தருளச் செல்வதாகவும் இச்செய்தி நிறைவு பெறுகின்றது. 

பெரிய புராணம் சுந்தரனார் கோட்புலி நாயனாரோடு தான் சிவாலயம் சென்று தரிசித்ததாகப் பேசுகின்றது, இச்செவிவழிச் செய்தியோ தனியே செல்வதாகச் சித்தரிக்கின்றது. மேலும் நகர எல்லையிலேயே கோட்புலி நாயனார் சுந்தரரை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துச் சென்று விடுவதால், 'சுந்தரர் தனியே சிவாலயம் சென்றார்' எனும் செய்தியைப் பெரிய புராண நிகழ்வோடு ஒப்பு நோக்கிப் பார்க்க இயலாது. எனினும் பிரமாண நூலான பெரிய புராண நிகழ்வுகளை உள்ளத்திருத்தித் தொழுதவாறு, அம்மையப்பரையும் சுந்தரரையும் மேன்மைமிகு உழவுத் தொழிலோடு இணைத்து விவரிக்கும் இந்த செவிவழிச் செய்தியினை அதன் சுவைக்காக அறிந்து கொண்டு மகிழ்வோம். 

ஆண்டுதோறும் ஆடி கேட்டையன்று இச்செய்தியினை அடிப்டையாகக் கொண்டு, 'நடவு நடும் உற்சவமொன்றும் இத்தலத்தில் நிகழ்ந்தேறி வருகின்றது' என்பது மற்றொரு சுவையான குறிப்பு.

No comments:

Post a Comment