சுந்தரர் (நம்பியாண்டார் நம்பிகள் அருளியுள்ள திருத்தொண்டர் திருவந்தாதி):

சுந்தர மூர்த்தி நாயனார், 8ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், தம்முடைய திருத்தொண்டர் தொகையின் 11 திருப்பாடல்களில், தனியடியார்களான 60 நாயன்மார்களையும்; 9 தொகையடியார்களையும் தனித்தனியே ஓரிரு வரிகளில் குறிப்பிட்டுப் போற்றுகின்றார். இறுதித் திருப்பாடலில் திருப்பதிக ஆசிரியரான தன்னை அறிவிக்கையில், தமையீன்ற சடையனார் மற்றும் இசைஞானியாரையும் குறிக்கின்றார். 

பின்னர் 11ஆம் நூற்றாண்டின் துவக்க காலகட்டத்தில், திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையாரின் பேரருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள், சுந்தரரின் திருத்தொண்டர் தொகையினை ஆதாரமாகக் கொண்டு, நாயன்மார்கள் வரிசையில் சுந்தரர்; சுந்தரரின் தந்தையாரான சடையனார் மற்றும் தாயாரான இசைஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, 63 நாயன்மார்களுக்குமாய்ச் சேர்த்துத் 'திருத்தொண்டர் திருஅந்தாதி' எனும் அற்புதத் தொகுப்பினை அருளிச் செய்கின்றார். 

தம்பிரான் தோழரான சுந்தரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு கோர்க்கப் பெற்றுள்ள  இப்பனுவலில், சுந்தரனாரின் வரலாற்றிற்கெனப் பனுவலினூடே ஆங்காங்கே 11 திருப்பாடல்களும், 4 நாயன்மார்களின் வரலாற்றிற்கென இரண்டிரண்டு திருப்பாடல்களும், மற்றுமுள்ள 58 நாயன்மார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் இவர்களின் வரலாற்றிற்கென ஓரோர் திருப்பாடலும், இவைகளோடு இறைவணக்கம்; பொதுப்பாடலொன்றோடு; நூற்பயனும் சேர்த்து மொத்தம் 90 திருப்பாடல்கள் இடம்பெறுகின்றன. 

(திருத்தொண்டர் திருவந்தாதி - திருப்பாடல் 63):
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்குயிர்அன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவி அவிநாசியை, வேடர்சுற்றம்
படுத்தான் திருமுருகன் பூண்டியினில் பராபரத் தேன்
மடுத்தான் அவனென்பர் வன்தொண்டனாகின்ற மாதவனே

இறுதியாய் 12ஆம் நூற்றாண்டில் தோன்றும் தெய்வச் சேக்கிழார், திருத்தொண்டர் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இரு பனுவல்களையும் மூலமாகக் கொண்டு, 63 நாயன்மார்களின் முழுமையான வரலாற்றினை 4253 திருப்பாடல்களில் விரித்துரைத்து அத்தொகுப்பிற்குத் 'திருத்தொண்டர் புராணம்' எனும் திருப்பெயரிட்டுப் போற்றுகின்றார். 

திருத்தொண்டர் தொகைக்கும், பெரிய புராணத்திற்கும் சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிந்துள்ளது குறிப்பிடத் தக்கது, மேலும் நாயன்மார்களின் சுருக்கமான வரலாற்றுக் குறிப்புகளை, திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் அறிவிக்க, அம்மூர்த்தியின் பேரருளால் நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருஅந்தாதிப் பனுவலை இயற்றியுள்ளார் என்பதும் ஒரு சுவையான குறிப்பு.

No comments:

Post a Comment