சுந்தரர் (இருமுறை மேற்கொண்ட காஞ்சிபுர யாத்திரை):

சுந்தரர் இருமுறை பஞ்ச பூதத் தலமான காஞ்சி மாநகருக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளார். 'ஒற்றியூரில் சங்கிலியருடன் திருமண நிகழ்வு நடந்தேறுவதற்கு முன்னர் ஒரு முறையும், இரு கண் பார்வையும் இழந்திருந்த சமயத்தில் மற்றொரு முறையும் காஞ்சிப் பதிக்கு வருகை புரிந்துள்ளார்' என்று பெரிய புராணம் பதிவு செய்கின்றது. 

முதல் யாத்திரை சமயத்தில் அம்பிகை தழுவக் குழைந்த ஏகாம்பரேஸ்வரப் பரம்பொருளைத் தரிசித்துப் பின் காமாட்சி அன்னையைத் தரிசிக்கும் தம்பிரான் தோழர், இருகண் பார்வையும் மறைப்பிக்கப் பெற்றிருந்த 2ஆம் யாத்திரையில் அன்னை காமாட்சியை முதலில் தரிசித்து, 'இறைவரிடம் தன் பொருட்டு பரிந்துரை செய்யுமாறு' விண்ணப்பித்துப் பணிந்த பின்னரே திருக்கச்சி ஏகம்பம் சென்று முக்கண் முதல்வரைப் பணிகின்றார். 

இரு முறையும் காஞ்சி வாழ் திருத்தொண்டர்கள் தம்பிரான் தோழரைச் சிறப்பான முறையில் எதிர்கொண்டு வரவேற்று வணங்கி மகிழ்கின்றனர். முதல் யாத்திரை சமயத்தில், கச்சி மேற்றளி; ஓணகாந்தன்தளி; அனேகதங்காவதம்; பனங்காட்டூர்; திருமால்பேறு முதலிய தலங்களையும் தரிசித்துப் பரவியதாகத் தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார். 

(சுந்தரர் தேவாரம் - கச்சி ஏகம்பம் - திருப்பாடல் 1)
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலம் தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார்அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே

No comments:

Post a Comment