சுந்தரர் (சேரமான் பெருமாள் நாயனாருடன் ஒரு திருத்தல யாத்திரை - மிக முக்கியக் குறிப்புகள்):

சுந்தரர், சேரமான் நாயனாருடன் திருவாரூரில் நட்பால் கூடி மகிழ்ந்திருக்கும் நாட்களில், திருவருள் கூட்டுவிக்க மதுரை உள்ளிட்ட பாண்டி நாட்டுத் திருக்கோயில்களைத் தரிசிக்க விழைகின்றார். சேரர்கோனும் உடன்வர, ஆரூர் இறைவரிடத்து வணங்கி விடைபெற்று முதலில் திருநாகைக்காரோணம் சென்றிறைஞ்சி, வழிதோறுமுள்ள திருத்தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே திருமறைக்காட்டினைச் சென்றடைகின்றனர். திருவாயிலில் நின்று, திறக்கவும்; அடைப்பிக்கவும் பாடிய அப்பர் அடிகள் மற்றும் சம்பந்த மூர்த்தியையும் நினைந்துருகிக் கண்ணீர் பெருக்குகின்றனர் ('நன்னீர் பொழியும் விழியினராய் நாயன்மாரை நினைந்திறைஞ்சி' என்கின்றார் தெய்வச் சேக்கிழார்). 

ஆலயத்துள் சென்று மறைக்காட்டு மணாளரைப் போற்றிப் பின் அகத்தியான்பள்ளி; கோடிக்குழகர் ஆலயங்களையும் பணிந்து, வழிதோறுமுள்ள சோழநாட்டுப் பதிகளை வணங்கியவாறு மதுரை மாநகரைச் சென்றடைகின்றனர்.   

பாண்டிய மன்னர் நகரினை அணிசெய்து நம்பிகளையும், சேரர் பெருமானையும் எதிர்கொண்டு வரவேற்று மகிழ்கின்றார். பாண்டிய வேந்தரின் மகளாரை மணந்திருந்த சோழ மன்னரும் அச்சமயத்தில் அங்கிருக்க, மூவேந்தருடனும் சுந்தரர் திருஆலவாய்த் திருக்கோயிலுள் சொக்கநாதப் பரம்பொருளை வணங்கிப் பாமாலையால் போற்றி செய்கின்றார் (இத்திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை). சேரமான் நாயனாரும் கண்ணருவி ஆறாய்ப் பாய, 'சோமசுந்தரக் கடவுள், தன் திருக்கரங்களால் 'பாணபத்திரருக்குப் பொன் கொடுக்குமாறு' மடலொன்றினை வரைந்தருளிய' நிகழ்வினை நினைவு கூர்ந்து நெகிழ்ந்து பணிகின்றார். 

பின் சுந்தரரும், சேரர்கோனும் பாண்டிய மன்னரின் அரண்மனையில், சோழ மன்னரும் உடனிருக்க, அங்குள்ள உபசரிப்பினை ஏற்றுச் சிறிது காலம் மகிழ்ந்திருக்கின்றனர். பின்னர் சுந்தரனார் மூவேந்தருடன் திருப்பூவணம் எனும் தலத்தினைப் பணிந்துப் பின் மதுரைக்கு மீள்கின்றார். மற்றொரு முறை யாவருடனும் திருஆப்பனூர்; திருவேடகம் முதலான தலங்களைத் தரிசித்துப் பின் மதுரைக்கு மீண்டும் எழுந்தருளுகின்றார். பின்னர் 3ஆம் முறையாய் வேந்தர் மூவருடனும் திருப்பரங்குன்றத்தினை அடைந்து தொழுகின்றார். இவ்விடத்திலிருந்து பாண்டிய; சோழ மன்னர்கள் விடைபெற்றுச் செல்ல, வன்தொண்டர் சேரர்கோனுடன் மேலும் தல யாத்திரையைத் தொடர்கின்றார். 

மேலும் பற்பல தலங்களைத் தரிசித்தவாறே திருக்குற்றாலம்; திருநெல்வேலியைப் பணிந்தேத்திப் பின் இராமேஸ்வரத்தினை அடைந்து தொழுகின்றனர் (இம்மூன்று தலத் திருப்பதிகங்களும் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை). பின்னர் நம்பிகள் இங்கிருந்த வண்ணமே இலங்கையிலுள்ள திருக்கேதீஸ்வரத்தினை அகக் கண்களால் தரிசித்துத் திருப்பதிகத்தினால் போற்றுகின்றார். 

இதன் தொடர்ச்சியாய்த் திருச்சுழியலில் தரிசித்துப் போற்றி அங்கு தங்கியிருக்கையில், சிவமூர்த்தி சுந்தரனார் கனவில், காளை வடிவில், திருக்கரங்களில் பொற்செண்டும், திருமுடியில் சுழியமும் உடைய பண்பினராய், இதுவரை எவரொருவரும் தரிசித்திராத அரிய திருக்கோலத்துடன் எழுந்தருளி வந்து, 'யாம் இருப்பது கானப்பேர்' என்றருள் புரிகின்றார். வன்தொண்டரும் நெகிழ்ந்து, இறையவர் அருள் புரிந்த இத்தன்மையினை சேரமான் நாயனாருக்கும் எடுத்துரைத்து அனைவருடனும் காளையார் கோயில் சென்று தமிழ்மாலை சாற்றித் தொழுகின்றார். 

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 112):
அங்கணரைப் பணிந்துறையும் ஆரூரர்க்கு அவ்வூரில்
கங்குலிடைக் கனவின்கண் காளையாம் திருவடிவால்
செங்கையினில் பொற்செண்டுந் திருமுடியில் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேடம் என்புருக முன்காட்டி

பின் திருப்புனவாயிலில் பாமாலையால் தொழுது, பாதாளீஸ்வரம் மற்றும் அதன் மருங்கிலுள்ள பல தலங்களையும் தொழுதவாறே மலைநாட்டு வேந்தருடன் திருவாரூருக்கு மீள்கின்றார். நேரே ஆரூர் திருக்கோயில் சென்று, பூங்கோயிற் பரம்பொருளைப் பெருகும் காதலோடு தரிசித்து வணங்கி, பல நாட்கள் பிரிந்திருந்த தாபம் தீருமாறு, நெடு நேரம் வழிபட்டுத் திருப்பதிகத்தினால் போற்றி செய்கின்றார், 

(சுந்தரர் தேவாரம் - திருவாரூர்: திருப்பாடல் 1)
இறைகளோடிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு
பறை கிழித்தனைய போர்வை பற்றியான் நோக்கினேற்குத்
திறைகொணர்ந்தீண்டித் தேவர் செம்பொனும் மணியும் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே  

பின்னர் நம்பிகள் சேரர்கோனுடன் பரவையார் திருமாளிகளிக்குச் செல்ல, பரவையார் திருத்தொண்டர் இருவரையும் இனிய மொழிகளால் வரவேற்றுப் பணிந்து, அற்புதத் தன்மையோடு கூடிய திருவமுது செய்வித்து, அடியவர் பூசையாகிய மாகேஸ்வர வழிபாட்டினைப் புரிந்து மகிழ்கின்றார்.

No comments:

Post a Comment