சுந்தரர் (பரவையாரின் சீற்றம் - சுந்தரர் சார்பாகப் பேசச் சென்றவர்களிடம் அம்மையார் மறுத்துரைத்தல்):

(1)
இன்னுயிர்க் கணவனார் ஒற்றியூரில் சங்கிலியாரின் கரம் பற்றிய நிகழ்வினைக் கேள்வியுற்ற நாள்முதலே பரவைப் பிராட்டியார் சொல்லில்அடங்காத துயர்உறுகின்றார். அருமைக் காதலரின் பிரிவுத் துயர் ஒருபுறமும், கடும் சினம் மற்றொரு புறமுமாய் மிகத் தளர்வுற்று வருந்தியிருக்கின்றார். 

(2)
முதற்கண் சுந்தரனார் தம்முடைய பரிசனங்களை (உடனிருந்து தொண்டு புரியும் ஆட்களை) பரவையார் திருமாளிகைக்கு அனுப்புவிக்க, அவர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப் படுகின்றது . அவர்கள் சுந்தரரின்பால் மீண்டு வந்து பரவையாரின் நிலை குறித்து தெரிவித்து வணங்குகின்றனர்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 317)
நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர்
சென்று மொழிவார் திருவொற்றியூரில் நிகழ்ந்த செய்கையெலாம்
ஒன்று மொழியா வகையறிந்தங்(கு) உள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமும் சென்றெய்தப் பெற்றிலோம் என்றிறைஞ்சினார்

(3)
பரவையாரின் சீற்றத்தினால் உளம் மிகக் கலங்கும் தம்பிரான் தோழர் 'இனி இதற்கு என் செய்வேன்' என்று தளர்வுற்று, உலகியல்பு உணர்ந்த அன்பர்கள் சிலரைத் தன் சார்பாகப் பேசிவருமாறு பரவையாரிடம் அனுப்புவிக்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 318)
மற்ற மாற்றம் கேட்(டு) அழிந்த மனத்தராகி வன்தொண்டர்
உற்ற இதனுக்(கு) இனிஎன்னோ செயலென்(று) உயர்வார், உலகியல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக் காதல் பரவையார் கொண்ட
செற்ற நிலைமை அறிந்தவர்க்குத் தீர்வு சொல்லச் செலவிட்டார்

(4)
பரவையாரின் திருமாளிகையினைச் சென்று சேரும் அப்பெரியோர்கள், அம்மையாரிடம் பலப்பல விதங்களில் மனையறம் சார்ந்த நீதிகளை எடுத்துரைத்து, 'எம்பிராட்டிக்கு இம்முறையிலான கோபம் தகுமோ? என்று அவர்தம் சினத்தை மாற்ற முனைகின்றனர்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 319)
நம்பி அருளால் சென்றவரும் நங்கை பரவையார் தமது
பைம்பொன் மணிமாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடலழுந்தும் மின்னேர் இடையார் முன்னெய்தி
எம்பிராட்டிக்(கு) இதுதகுமோ என்று பலவும் எடுத்துரைப்பார்

(5)
பரவையார் அவர்களின் கூற்றுக்கள் அனைத்தையும் மறுத்துரைத்து 'குற்றம் பொருந்திய அவரின் சார்பாக இனியொரு வார்த்தையை மொழிவீராயின் எனது இன்னுயிரைத் துறப்பேன்' என்று வெகுண்டுரைக்க, அவர்கள் யாவரும் அஞ்சி அவ்விடம் விட்டு அகல்கின்றனர்,
 
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 320)
பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர்முன்
மாதர்அவரும் மறுத்துமனம் கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில்உயிர்
போதல்ஒழியாதென உரைத்தார் அவரும் அஞ்சிப் புறம்போந்தார்

No comments:

Post a Comment