சுந்தரர் (வித்தகம் பேச வேண்டாம் பணிசெய்ய வேண்டும்):

திருமண நிகழவில் ஓலை காட்டி ஆட்கொள்ள, முதிய வேதியராய் எழுந்தருளி வந்த சிவபரம்பொருளிடம் நம் சுந்தரனார் பற்பல வாதங்களை முன்வைத்து வாதிட்டு, 'மறையவர் பித்தரோ?' என்று வெகுண்டுரைக்கின்றார், 

(1)

வேதியராய் வந்த விமலரோ 'நீ பித்தன்; பேயன் என்று யாது கூறி இகழ்ந்தாலும் அதனைக் கருத்தில் கொள்ளேன். எவ்வகையாலும் எம்மை நீ அறிந்துணரவில்லை, ஆதலின் உன் வித்தகப் பேச்சினை விடுப்பாய். எமக்குத் தொண்டு புரிவதொன்றே இனி நீ செய்யத் தக்கது' என்றருளிச் செய்கின்றார். 
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 187)
பித்தனுமாகப் பின்னும் பேயனுமாக நீயின்று
எத்தனை தீங்கு சொன்னாய் யாது மற்றவற்றால் நாணேன்
அத்தனைக்(கு) என்னை ஒன்றும் அறிந்திலையாகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணிசெய வேண்டும் என்றார். 

('இறைவர் அறிவித்தாலன்றி ஆன்மாக்கள் யாதொன்றையும் அறிந்துணர இயலாது' என்பதும் 'திருத்தொண்டின் மூலமே சிவமாகிய பரம்பொருளின் திருவருளைப் பெற இயலும்' என்பதும் இத்திருப்பாடலில் பொதிந்துள்ள அரிய நுட்பங்கள்) 

(2)

(வெண்ணெய்நல்லூர் இறைவர் கொணர்ந்திருந்த அடிமை சாசன ஓலையில் இடம்பெற்றிருந்த அற்புத வாசகங்கள்)
-
(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 205)
அருமறை நாவல் ஆதிசைவன் ஆரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்(கு) யானும் என்பால்
வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்தற்(கு) ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கிவை என்எழுத்து.

No comments:

Post a Comment