சுந்தரர் (திருநீடூர் தரிசனம்)

சுந்தரர், திருவலம்புரம்; திருச்சாய்க்காடு; திருவெண்காடு; திருநனிபள்ளி; திருநின்றியூர் முதலிய திருத்தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே திருநீடூரின் எல்லை வழியே பயணித்துச் செல்கின்றார். அப்பதியினுள் புகாமல் மேலும் முன்னறிச் செல்லும் நிலையில், திருவருளால் தமக்குக் கூடியிருந்த ஒப்புவமையிலா மெய்யுணர்வினால் நீடூர் தலத்தினைத் தாமாக நினைக்கப் பெறுகின்றார். மீளவும் திரும்பிச் சென்று 'நீடூர்ப் பரமனைப் பணியா விடலாமே' எனும் திருப்பதிகத்தினைப் பாடியவாறே அங்குள்ள சிவாலயம்  நோக்கிச் செல்கின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - திருப்பாடல் 151):
அப்பதியில் அன்பருடன் அமர்ந்தகல்வார் அகலிடத்தில்
செப்பரிய புகழ்நீடூர் பணியாது செல்பொழுதில்
ஒப்பரிய உணர்வினால் நினைந்தருளித் தொழலுறுவார்
மெய்ப்பொருள் வண்தமிழ்மாலை விளம்பியே மீண்டணைந்தார்.

ஆலயத்துள் புகுந்து நீடூர் மேவும் நின்மலனின் திருச்சன்னிதியினை அடைந்து, திருமுன்னர் வீழ்ந்தெழுந்து, உடலெங்கும் புளகமுற, உச்சி கூப்பிய கையினராய்க் கண்ணருவி பாய நெகிழ்ந்து தொழுகின்றார். இப்பெருநிலையில் மீதமுள்ள திருப்பதிகப் பாடல்களையும் பாடி நிறைவு செய்து போற்றுகின்றார். 

(ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - திருப்பாடல் 152):
மடலாரும் புனல்நீடூர் மருவினர்தாள் வணங்காது
விடலாமே எனும் காதல் விருப்புறும் அத்திருப்பதிகம்
அடலார் சூலப்படையார் தமைப்பாடி அடிவணங்கி
உடலாரும் மயிர்ப்புளகம் மிகப் பணிந்தங்குறைகின்றார்

(சுந்தரர் தேவாரம் - திருநீடூர்)
ஊர்வதோர்விடை ஒன்றுடையானை ஒண்ணுதல்தனிக் கண்ணுதலானைக்
காரதார் கறை மிடற்றானைக் கருதலார் புரம் மூன்றெரித்தானை
நீரில் வாளை வரால் குதி கொள்ளும் நிறைபுனல் கழனிச் செல்வ நீடூர்ப்
பாருளார் பரவித்தொழ நின்ற பரமனைப் பணியா விடலாமே

No comments:

Post a Comment