சுந்தரர் (சுந்தரருக்கு முன்பாக திருக்கயிலை சென்று சேர்ந்த பெருமிழலைக் குறும்ப நாயனார்):

சுந்தரருடைய வரலாற்று நிகழ்வுகளைப் பெரிய புராணத்தின் வழிநின்று வரிசைக் கிரமமாக சிந்தித்து வருகின்றோம், அம்முறையில் சுந்தரரின் திருக்கயிலை யாத்திரை நிகழ்விற்கு முன்னர், வன்தொண்டருக்கும் பெருமிழலைக் குறும்ப நாயனாருக்குமான ஆச்சரியமான தொடர்பினை நினைவு கூர்தல் மிகவும் அவசியமாகின்றது. 

குறும்ப நாயனாரின் வரலாற்றினை 11 திருப்பாடல்களில் பதிவு செய்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார். மிழலை நாட்டிலுள்ள பெருமிழலை எனும் பகுதியில் குறுநில மன்னராய்க் கோலோச்சி வருகின்றார் குறும்ப நாயனார் (தற்பொழுது புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள பகுதியையே 'மிழலை நாடு' என்பர்).

குறும்ப நாயனார் பிறைமதிப் பரம்பொருளின் அடியவர்க்கான பணிவிடைகள் யாவினையும் குறிப்பறிந்து காலமறிந்து, அவர்கள் கேளா முன்னமே புரிந்து மகிழ்வார். அனுதினமும் எண்ணிறந்த அடியவர் திருக்கூட்டத்தினருக்குக் குறைவிலாமல் திருவமுது செய்வித்து, அவர்கட்குதவும் பெரும்செல்வங்களைச் சமர்ப்பித்து வணங்குவார். தம்மை எளியராக்கிக் கொண்டு மெய்யடியார்களைப் போற்றும் தகைமையாளர். 

அரனடியார்களுக்குப் பலகாலும் புரிந்து வரும் திருத்தொண்டின் நற்பயனாய், நம் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் திருவடிகளின் மீது அதீத பக்தியும் ஈடுபாடும் இயல்பில் தோன்றுகின்றது. தம்பிரான் தோழரின் மலர்போலும் திருவடிகளை வாயால் வாழ்த்தியும், கரங்களால் தொழுதும், உள்ளத்தில் இடையறாது தியானித்தலுமாகிய நியமத்தில் நின்றொழுகி, 'ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமானின் திருவடிப் பேற்றினை அடைவிக்கும் உத்தமமான நெறி இதுவொன்றே' என்று உறுதி கொள்கின்றார். 

நாளும் சுந்தரரின் திருநாமத்தினைப் போற்றி வரும் சீர்மையினால் அஷ்ட மா சித்திகளும் எளிதில் கைவரப் பெறுவதோடு, திருஐந்தெழுத்தான சிவ பஞ்சாக்ஷர மந்திரம் தம்முடைய உணர்வெலாம் நிறைந்து பெருகும் பெரும் பேற்றினையும் பெற்று மகிழ்கின்றார். 

இந்நிகழ்வுகள் ஒருபுறமிருக்க, கொடுங்களூரில் சேரமான் நாயனாரின் அரண்மனையிலிருக்கும் சுந்தரனார், அன்றைய மறுநாள் தமக்கு திருக்கயிலைப் பதம் எய்த இருப்பதைத் திருவருளால் அறியப் பெறுகின்றார். எந்நேரமும் சுந்தரரை இடையறாது தியானித்து வரும் மேன்மையினால், கொடுங்களூரில் சுந்தரர் திருவுள்ளத்தில் தோன்றிய இந்த எண்ணத்தினை, மிழலை நாட்டிலுள்ள குறும்ப நாயனார் அக்கணத்திலேயே அறியப் பெறுகின்றார். 

'உயிருக்குயிரான நாவலூர் மன்னர் திருக்கயிலை எய்த, கண்ணின் கருமணியை இழந்து வாழ்வார் போல் அவரைப் பிரிந்து இப்புவியில் ஒருக்கணமும் வாழேன், இன்றே சிவபெருமானின் திருவடிகளை யோகத்தால் சேர்வேன்' என்று துணிகின்றார். சுழுமுனை வழியே பிராண வாயுவைச் செலுத்திப் பிரணவ நாதத்துடன் ஆன்மாவை பிரம கபாலத்தின் வழியே வெளிப்படச் செய்து, முக்கண் முதல்வர் எழுந்தருளியுள்ள திருக்கயிலையை, நம்பியாரூரருக்கு முன்பாகச் சென்று சேர்கின்றார். 

சுந்தரரின் திருவடிகளையே குருவடிவெனக் கொண்டு இடையறாது போற்றி வந்த பெற்றியினால், யாதொரு தடையுமின்றி, எண்ணிய கணத்திலேயே திருக்கயிலைப் பதத்தினைச் தந்தருள் புரிகின்றார் கயிலையுறைப் பரம்பொருள். எனில் சுந்தரரின் திருவடிச் சிறப்பையும், குறும்ப நாயனாரின் ஒருமையுற்ற குருபக்தியையும் என்னென்று போற்றுவது!!!

No comments:

Post a Comment