சுந்தரர் (திருத்தொண்டர் தொகையினால் அடியவர்களைப் போற்றிப் பணிதல்):

திருவாரூர் ஆலயக் கருவறையில் புற்றிடம் கொண்ட புராதனர் சுந்தரருக்குத் 'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்று அடியெடுத்துக் கொடுத்தருளி, 'அடியவர்களைப் போற்றும் குற்றமற்ற பனுவலொன்றைப் பாடுவாய்' என்றருள் புரிந்து மறைகின்றார்,

(1)
தியாகேசப் பரம்பொருளின் கட்டளையைச் சிரமேற்கொண்டு வன்தொண்டனார் தேவாசிரியன் மண்டபத்திற்குச் செல்கின்றார். தொலைவிலிருந்தே அங்கு கொலு வீற்றிருந்த அடியவர் பெருமக்களைப் பன்முறை வீழ்ந்தெழுந்து தொழுகின்றார். பின்னர் அருகாமையில் சென்று பணிவுடன் வணங்கியவாறே, 'சுந்தரருக்கு சமகாலத்திலும்; அவர் காலத்திற்கு முன்னரும் தோன்றியிருந்த 60 நாயன்மார்களைப் பட்டியலிட்டு, அப்பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் தன்னை அடியவனாகச் சமர்ப்பிக்கும் ஒப்புவமையில்லா திருத்தொண்டர் தொகையினை அருளிச் செய்கின்றார், 

(திருமலைச் சருக்கம் - திருப்பாடல் 347)
தூரத்தே திருக்கூட்டம் பலமுறையால் தொழுதன்பு
சேரத் தாழ்ந்தெழுந்(து) அருகு சென்றெய்தி நின்றழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறடியேன் என்று
ஆர்வத்தால் திருத்தொண்டத்தொகைப் பதிகம் அருள்செய்தார்

(திருத்தொண்டர் தொகை - திருப்பாடல் 1)
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே!!!

(2)
பின்னர் 11ஆம் நூற்றாண்டில் திருநாரையூரில் அவதரித்த நம்பியாண்டார் நம்பிகள், சுந்தரர் அருளிச் செய்துள்ள 60 நாயன்மார்களோடு, சுந்தரனார் மற்றும் அவர்தம் பெற்றோரான (திருத்தொண்டின் திறம் பேணிநின்ற) சடையனார் மற்றும் இசைஞானியார் ஆகியோரையும் அப்பட்டியலில் இணைத்து, நாயன்மார்களை 63ஆக தொகுத்து, 'திருத்தொண்டர் திருவந்தாதி' எனும் பனுவலை அருளிச் செய்கின்றார்.

No comments:

Post a Comment