சுந்தரர் (காவிரி விலகி வழிவிடத் திருவையாறு தரிசனம்):

சுந்தரர் திருவாரூரில் சேரமான் நாயனாருடன் நட்பால் கூடி மகிழ்ந்திருக்கும் நாட்களில், வன்தொண்டரை மலைநாட்டிலுள்ள கொடுங்களூருக்குத் தம்முடன் வருகை வருமாறு அனுதினமும் தொழுது விண்ணப்பித்து வருகின்றார் சேரனார் ('இரவும் பகலும் தொழுதிரக்க' என்பார் சேக்கிழார் பெருமான்). ஆரூர் இறைவரை நெடுநாட்கள் பிரிந்திருக்க நேருமே என்று சுந்தரனார் தயங்கியிருக்கக் கூடும், இறுதியாக அதற்குடன்படும் நம்பிகள் பரவையாரின் இசைவையும் பெற்றுச் செல்கின்றாராம் ('நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்தருள' - நெகிழ்விக்கும் திருப்பாடல் வரியிது). பூங்கோயிலுள் இறைவரைப் பணிந்து அருள் பெற்றுப் புறப்படுகின்றனர்.  

காவிரித் தென்கரையிலுள்ள திருக்கண்டியூரைத் தொழுதவாறே செல்ல, கரைக்கு மறுபுறம் 'திருவையாறு' தோன்றக் காண்கின்றனர். நம்பிகள், உடலும் உள்ளமும் உருக உச்சி கூப்பிய கையினராய்த் அத்திசை நோக்கித் தொழுது, ஆற்றினைக் கடந்து ஐயாறுறைப் பரம்பொருளைத் தரிசித்துப் பணிய விழைகின்றார் ('சுந்தரர் முன்னமே ஒருமுறை கண்டியூர்; ஐயாறு இரு தலங்களையுமே தரிசித்துப் பரவியுள்ளார்' என்று 'ஏயர்கோன் புராணத்தின் 71ஆம் திருப்பாடல் பதிவு செய்கின்றது). சேரர்கோனும் நம்பிகளிடம் 'ஐயாறு சென்று தரிசிக்க உள்ளம் உருகுகின்றது' என்று விண்ணப்பிக்கின்றார். 

கரையின் இருபுறமும் காவிரி பெருவேகத்துடன் பெருக்கெடுக்க, ஓடங்களிலும் செல்ல இயலாத நிலை. சுந்தரனார் ஐயாறு இறைவரைத் தரிசிக்கும் தவிப்புடன், 'பரவும் பரிசொன்று' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் போற்றி, 'ஐயாறுடைய அடிகளோ' என்று உரிமையன்பினால் காதலோடு அழைத்துப் பணிகின்றார்.   

(சுந்தரர் தேவாரம் - திருவையாறு - திருப்பாடல் 1)
பரவும் பரிசொன்றறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கம் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகேளோ
ஐயாறு முதல்வர் தம்பிரான் தோழரின் அழைப்பிற்கு மறுமொழி அருளுமாற் போல் 'ஓலம்' என்று அனைவர்க்கும் கேட்குமாறு மொழிந்தருள, அக்கணமே விண்ணளவு பெருக்கெடுத்து வரும் காவிரியின் மேற்புறம் அந்நிலையிலேயே உறைந்து பளிங்கென நிற்க, கீழ்ப்பக்க நீர் வடியும் நிலையில் விளங்க, இடையில் குளிர்ந்த மணற்பரப்பினாலான வழியொன்று தோன்றுகின்றது. இதனை நம்பிகளுக்கு அருகிருந்து தரிசிக்கப் பெறும் திருத்தொண்டர்கள் அதிசயமுற்று, கண்ணருவி பாய, மயிர்க்கூச்செறிந்து உச்சி கூப்பிய கையினராய்த் தொழுது நிற்கின்றனர்.    

(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 136):
விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பாற் பளிக்கு வெற்பென்ன
நண்ணி நிற்கக் கீழ்பால்நீர் வடிந்த நடுவு நல்லவழி
பண்ணிக் குளிர்ந்த மணற்பரப்பக் கண்ட தொண்டர் பயில்மாரி
கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார்

சேரமான் நாயனாரும் நெகிழ்வுற்று நம்பிகளின் திருப்பாதங்களைப் பணிய, சுந்தரரும் எதிர்வணங்கி, 'இறைவர் உம் பொருட்டன்றோ இவ்விதம் அருளியுள்ளார்' என்று சேரர்கோனிடம் மகிழ்ந்துரைத்து, அனைவருடனும் அவ்வழியில் சென்று ஐயாறுறைத் தலைவரைப் பணிகின்றார். 

இரு அருளாளர்களும், எவ்வளவு வழிபட்டும் நிறைவு காணாதவர்களாய் மென்மேலும் போற்றித் திருவருள் வெள்ளத்தில் திளைத்திருந்துப் பின் ஒருவாறு மனத்தினைத் தேற்றி, இறைவரிடம் விடைபெற்றுக் காவிரியின் மறுகரைக்கு மீள்கின்றனர். ஆற்று நீரும் முன்பிருந்தாற் போன்றே பெருகியோடத் துவங்க, அனைவரும் விம்மிதமுற்றுத் திருவருள் திறத்தினைப் போற்றிப் பணிகின்றனர்.

No comments:

Post a Comment