சுந்தரர் (வலக்கண் பார்வையின்றி திருவாரூர் ஆலயத்திற்கு வருகை புரிதல்):

(1)
சுந்தரர், காஞ்சியில் இடக்கண் பார்வை பெற்ற பின்னர் நடுநாட்டுத் தலமான திருஆமாத்தூர்; சோழ நாட்டுத் தலங்களான திருவரத்துறை; திருஆவடுதுறை; திருத்துருத்தி முதலிய தலங்களைத் தரிசித்துப் போற்றியவாறே திருவாரூரை வந்தடைகின்றார். 

(2)
அப்பொழுது மாலைப் பொழுது, முதலில் கீழவீதியிலுள்ள 'பரவையுண் மண்டளி' எனும் ஆலயத்திற்குச் சென்று, 'தூவாயர்' எனும் திருநாமமுடைய வேத முதல்வரைப் பாமாலையால் போற்றி செய்து, 'கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே (7ஆம் திருப்பாடல்)' என்று விண்ணப்பித்துத் தொழுகின்றார், 

(சுந்தரர் தேவாரம் - பறவையுண் மண்டளி - திருப்பாடல் 1)
தூவாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள்
காவாயா; கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்(கு)
ஆவாஎன் பரவையுண் மண்டளி அம்மானே!!!

(3)
பின்னர் 'அர்த்த ஜாம வழிபாட்டுக் காலத்தில் புற்றிடம்கொண்ட புராதனரின் திருவருள் மிகுதியாகவும் விசேடமாகவும் வெளிப்படும்' எனும் நுட்பமறிந்து, அச்சமயம் வரை காத்திருந்து, தொண்டர்கள் சிலரும் உடன்வர ஆரூர் ஆலயத்திற்குச் செல்கின்றார் ('இடைதெரிந்து மாறில்திரு அத்தயாமத்து இறைஞ்ச வந்தணைந்தார்' என்கின்றார் தெய்வச் சேக்கிழார்),

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 304)
ஆறணியும் சடையாரைத் தொழுதுபுறம் போந்தங்கண்
வேறிருந்து திருத்தொண்டர் விரவுவாருடன் கூடி
ஏறுயர்த்தார் திருமூலட்டானத்துள் இடைதெரிந்து
மாறில்திரு அத்தயாமத்(து) இறைஞ்ச வந்தணைந்தார்

(4)
திருக்கோயிலுள் ஆரூர் வாழ் அன்பர்கள் எதிர்கொள்ள, வன்தொண்டனார் 'ஆரூர் இறைவரிடத்து கொண்டிருந்த உரிமையன்பினை முன்பு போல் பெற்றிலேனே' என்று பெரிதும் வருந்தி, 'குருகு பாய' எனும் திருப்பதிகத்தினால், 'அடியேனின் காதலையும், திருவடி மறவாப் பண்பினையும் எவரேனும் திருமூலட்டானப் பரம்பொருளுக்கு உணர்த்த வல்லீர்களோ?' என்று வினவும் தொனியில் பாடுகின்றார், 

(சுந்தரர் தேவாரம் - திருவாரூர் - திருப்பாடல் 1)
குருகு பாயக் கொழும் கரும்புகள் நெரிந்தசா(று)
அருகு பாயும் வயல் அந்தண் ஆரூரரைப்
பருகுமாறும் பணிந்தேத்துமாறும் நினைந்(து)
உருகுமாறும் இவை உணர்த்த வல்லீர்களே

No comments:

Post a Comment