சுந்தரர் (திருக்குருகாவூர் தரிசனம்: பாடுவார் பசி தீர்ப்பாய்):

சுந்தரர், எண்ணிறந்த அடியவர்களும் பரிசனங்களும் உடன்வரத் திருக்குருகாவூர் எனும் தலம் நோக்கிப் பயணித்து வருகின்றார் (இங்குள்ள சிவாலயம் 'வெள்ளடை' என்று போற்றப் பெறுகின்றது). தம்பிரான் தோழர் பசி தாகத்தால் மிகவும் வாட்டமுற்று வருவதனைத் தரிக்கவொண்ணாத வெள்ளடை இறையவர், வேதியரொருவரின் வடிவு தாங்கி, பொதிசோறு; நன்னீரொடு கூடிய குளிர்விக்கும் பந்தலொன்று அமைத்து, வன்தொண்டரின் வருகையினைப் பரிவுடன் எதிர்நோக்கி இருக்கின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 156):
உண்ணீரின் வேட்கையுடன் உறுபசியால் மிகவருந்திப்
பண்ணீர்மை மொழிப் பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க்
கண்ணீடு திருநுதலார் காதலவர் கருத்தறிந்து
தண்ணீரும் பொதிசோறும் கொண்டுவழிச் சார்கின்றார்

தொண்டர்களுடன் அப்பந்தலுள் புகும் நாவலூர் மன்னர் திருநீற்றுத் திருக்கோலம் துலங்க நின்றிருக்கும் சிவ வேதியரைப் பெருகும் ஆர்வத்துடன் நோக்கி 'சிவாயநம' என்று கூறியவாறே அமர்கின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 157):
குருகாவூர் அமர்ந்தருளும் குழகர்வழி பார்த்திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான்தோழர் திருத்தொண்டருடன்
வருவார்அப் பந்தரிடைப் புகுந்து திருமறையவர் பால்
பெருகார்வம் செலஇருந்தார் சிவாயநம எனப்பேசி

வேதியராய் எழுந்தருளியிருந்த வெள்ளடைப் பரம்பொருள் பரவையார் கேள்வரிடம் 'மிகவும் பசித்திருக்கின்றீர், காலம் தாழ்த்தாது இப்பொதி சோற்றினை உண்டு, நறுமணம் பொருந்திய இக்குளிர்ந்த நீரையும் பருகிச் சிறிது இளைப்பாறுவீர்' என்று கூறிப் பேரருள் புரிகின்றார். 

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 158):
ஆலநிழற் கீழிருந்தார் அவர்தம்மை எதிர்நோக்கிச்
சாலமிகப் பசித்தீர் இப்பொதிசோறு தருகின்றேன்
காலம்இனித் தாழாமே கைக்கொண்டிங்கினிதருந்தி
ஏலநறும் குளிர்தண்ணீர் குடித்திளைப்புத் தீரஎன

மறையவரின் விண்ணப்பத்திற்கு இசையும் சுந்தரனார், உடனிருந்தோர் யாவருடனும் சிவப்பிரசாதமான அப்பொதி சோற்றினை அமுது செய்து மகிழ்கின்றார். திருவருளின் இனிமையையொத்த அக்குளிர்ந்த நன்னீரையும் பருகி, உள்ளத்திலெழும் காதலன்பினால் முக்கண் முதல்வரின் திருநாமத்தைப் போற்றி செய்து, அப்பந்தலிலேயே அயர்வு நீங்கச் சிறிது துயில் கொள்ள, உடனிருந்தோரும் கண்ணயர்கின்றனர். 

உறங்கியெழுகையில் பந்தலையும் வேதியரையும் அவ்விடத்தே காணாது திகைக்கும் நம்பிகள், நடந்தேறிய யாவும் திருவருட் செயலே என்றுணர்ந்து நெகிழ்ந்துருகி, 'குருகாவூர் வெள்ளடை நீயன்றே' எனும் திருப்பதிகத்தினால் போற்றிப் பரவுகின்றார், 
-
(சுந்தரர் தேவாரம்: திருக்குருகாவூர் - திருப்பாடல் 3)
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடு நன்கலனாக உண்பலிக்குழல்வானே
காடு நல்லிடமாகக் கடுஇருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே

No comments:

Post a Comment