சுந்தரர் (திருக்கோலக்காவில் எதிர்க்காட்சி):

(1)
சுந்தரர் திருப்புன்கூர் தலத்தினைத் தரிசித்துப் பரவியவாறு திருக்கோலக்காவைச் சென்றடைகையில், கங்கை சூடும் பரம்பொருள் எதிர்க்காட்சி தந்தருள் புரிகின்றார். பெருகும் காதலோடு ஆதி மூர்த்தியைப் பணிந்திறைஞ்சும் நாவலூர் வேந்தர் 'கோலக்காவினில் கண்டு கொண்டேனே' எனும் பாமாலையால் போற்றி செய்கின்றார்,

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 153):
அங்கண் இனிதமர்ந்தருளால் திருப்புன்கூர் அணைந்திறைஞ்சிக்
கொங்கலரும் மலர்ச்சோலைத் திருக்கோலக்கா அணையக்
கங்கைசடைக் கரந்தவர்தாம் எதிர்காட்சி கொடுத்தருளப்
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றிசைப்பார்.

இது வன்தொண்டனார் கோலக்காவிற்கு 2ஆம் முறையாக மேற்கொள்ளும் யாத்திரையாகும். முதல் முறை, திருவாரூர் செல்லும் வழியில், அழுதுலகை வாழ்வித்த காழிப் பிள்ளையாரின் மீதுள்ள பெருமதிப்பினால்; சீகாழியில் பாதம் பதிக்காமல் வலமாக வணங்கிச் சென்று 'திருக்கோலக்கா' தலத்தினைத் தரிசித்துப் போற்றியுள்ளார். திருமலைச் சருக்கத்தின் 260ஆம் திருப்பாடலில் 'திருக்கோலக்கா வணங்கிச் செந்தமிழ் மாலைகள்பாடி' என்றிதனைப் பதிவு செய்கின்றார் தெய்வச் சேக்கிழார். எனினும் அச்சமயத்தில் தம்பிரான் தோழர் அருளிச் செய்த திருப்பதிகம் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை. 

(2)
இம்முறையும், திருக்கோலக்கா தலத்தினைத் தரிசித்துப் பரவிய பின்னர் முன்னர் போலவே சீகாழியுள் பாதம் பதிக்காமல் வலமாய்ச் சென்று, தல எல்லையிலிருந்து; நிலத்தில் உடல் தோயுமாறு காழிப் பதியை வணங்கிப் பின் சம்பந்தச் செல்வரின் திருவடிகளை உளத்துள் தொழுதவாறே திருக்குருகாவூர் எனும் தலம் நோக்கிப் பயணித்துச் செல்கின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்: திருப்பாடல் 155):
மூவாத முழுமுதலார் முதற்கோலக்கா அகன்று
தாவாத புகழ்ச்சண்பை வலம்கொண்டு தாழ்ந்திறைஞ்சி
நாவார் முத்தமிழ்விரகர் நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரம்செற்றார் குருகாவூர் மேவுவார்

(குறிப்பு: ஞானசம்பந்தப் பெருமானின் பொருட்டு, சீகாழிப் பதியை வலம் வரும் ஒவ்வொருமுறையும் இறைவர் எதிர்க்காட்சி கொடுத்தருள்வர் போலும். முதலாவது புகலி நகர வலத்தில் திருத்தோணிபுர இறைவரும், 2ஆவது காழி வலத்தில் கோலாக்கவுறை முதல்வரும் ஆரூரருக்கு திருக்காட்சி அளித்தருள் புரிந்துள்ளனர்).

No comments:

Post a Comment