திருமலைச் சருக்கத்தோடு கூடிய 73 பகுதிகளைக் கொண்ட பெரிய புராணம் சுந்தரரில் துவங்கி சுந்தரரில் முடிவுறுகிறது (முதலில் வெள்ளானைச் சருக்கம்; பின்னர் சுந்தரர் நீங்கலாக 62 நாயான்மார்கள்; 9 தொகையடியார்கள் ஆகியோருக்கு ஓரோர் பகுதி; இறுதியில் நிறைவுப் பகுதியான வெள்ளானைச் சருக்கம்).
திருத்தொண்டர் புராணத்தின் காவிய நாயகர் நம் சுந்தர மூர்த்தி சுவாமிகளே. ஆதலின் வன்தொண்டரின் திருப்பெயர் கொண்ட ஒரு தனிப்பகுதி என்பதில்லாமல், பின்வரும் 7 பிரதானப் பகுதிகளில் தம்பிரான் தோழரின் வரலாற்றினைத் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றுகின்றார்.
(திருமலைச் சருக்கம்):
நம்பியாரூரர் அவதார நோக்கத்தில் துவங்கி, திருமண நிகழ்வில் தடுத்தாட்கொள்ளப் பெறுதல்; திருவதிகையில் திருவடி தீட்சை, சிதம்பர தரிசனம்; சீர்காழி எல்லையில் சிவ தரிசனம்; திருவாரூரில் தம்பிரான் தோழராதல்; பரவையாருடனான திருமணம் ஆகிய நிகழ்வுகளில் பயணித்துப் பின்னர் தேவாசிரியன் மண்டபத்தில் திருத்தொண்டர் தொகையினை அருளிச் செய்யும் நிகழ்வு வரையில் இப்பகுதி விவரிக்கின்றது.
(விறன்மிண்ட நாயனார் புராணம்):
விறன்மிண்டனார் சுந்தரரின் மீது முனிவு கொள்ளுதல்; பின்னர் வன்தொண்டர் அருளிச் செய்த திருத்தொண்டர் தொகையினைச் செவிமடுத்து அகமிகக் குளிர்ந்து வன்தொண்டரை வாழ்த்துதல்' முதலிய அரிய நிகழ்வுகள் (11 திருப்பாடல்களைக் கொண்ட) இப்புராணத்தில் மட்டுமே பேசப் பெறுகின்றது.
(சோமாசி மாற நாயனார் புராணம்)
சோமாசி மாற நாயனார் சுந்தரருடன் பெருநட்பு பேணிய அரியதொரு குறிப்பு (6 திருப்பாடல்களைக் கொண்ட) இப்பகுதியில் மட்டுமே பேசப் பெறுகின்றது.
(ஏயர்கோன் கலிக்காமர் புராணம்):
குண்டையூரிலுள்ள நெல்மலைகளைச் சிவகணங்கள் திருவாரூரில் சேர்ப்பிக்கும் நிகழ்வில் துவங்கி, புகலூரில் பொன் பெறுதல்; முதுகுன்ற ஆற்றிலிட்டுத் திருவாரூர் குளத்தில் பொன்னை எடுத்தல்; இருவேறு தலங்களில் இறைவரால் பசி நீங்கப் பெறுதல்; ஒற்றியூரில் சங்கிலியாருடன் திருமணம்; கண் பார்வை மறைதல்; காஞ்சி மற்றும் திருவாரூரில் இழந்த கண் பார்வையைப் பெற்று மகிழ்தல்; பரவையாரிடம் சிவபெருமான் தூது; கலிக்காம நாயனார் முனிவு கொண்டு பின்னர் நட்பு பாராட்டுதல்; கலிக்காமருடன் திருப்புன்கூர் தல தரிசனம் முதலிய பிரதான நிகழ்வுகள் இப்பகுதியில் பேசப்பெறுகின்றன.
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்):
சேரமான் பெருமாள் நாயனார் அறிமுகப் படலத்தில் துவங்கி, சேரனாருக்கு இறைவர் சுந்தரரை அறிவித்தல்; சேரர்கோன் சுந்தரரோடு நட்பு பாராட்டுதல்; சுந்தரரோடு திருத்தல யாத்திரை; வன்தொண்டர் சேரனாருடன் அஞ்சைக்களம் செல்லுதல்; அஞ்சைக்கள தரிசனம்; திருவாரூருக்கு மீள வருதல்; திருமுருகன்பூண்டியில் வேடர் பரி நிகழ்வு முதலிய பிரதான நிகழ்வுகளை இப்பகுதி விவரிக்கின்றது.
(பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்)
சுந்தரரின் சமகாலத்து நாயனார். 'வன்தொண்டரை அகக் கண்களால் மட்டுமே தரிசித்து அவரைத்தம் ஞானகுருவெனக் கொண்டு போற்றி, தம்பிரான் தோழருக்கு ஒரு நாள் முன்னரே திருக்கயிலை ஏகிய' அற்புத நிகழ்வு இப்புராணத்தில் மட்டுமே பேசப் பெறுகின்றது.
(வெள்ளானைச் சருக்கம்):
சுந்தரர் 2ஆம் அஞ்சைக்கள யாத்திரையில் துவங்கி, முதலை வாயியினின்றும் மாண்ட பிள்ளையை மீண்டெழச் செய்தல்; சேரர்கோன் அரண்மையில் தங்கியிருத்தல்; அவதார நிறைவிற்காக இறைவரிடம் விண்ணப்பித்தல்; வெள்ளை யானையில் திருக்கயிலை யாத்திரை; சேரர்கோனுடன் திருக்கயிலைப் பதம் பெற்று மகிழ்தல்; ஆகிய பிரதான நிகழ்வுகள் இப்பகுதியில் விவரிக்கப் பெறுகின்றன.