திருஞானசம்பந்தர்:
அவதாரத் தலம் சீர்காழி, 3ஆம் வயதின் துவக்கத்தில் சீகாழி ஆலயத் திருக்குளத்தருகில் தோணிபுரீஸ்வரப் பரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்று, திருநிலைநாயகி அம்மையினால் சிவஞானப் பால் ஊட்டப் பெற்ற தனிப்பெரும் குருநாதர். காலம் 7ஆம் நூற்றாண்டு, அவதாரக் காலம் 16 ஆண்டுகள்.
ஆதிமூர்த்தியான சிவபெருமானையும், உமையன்னையையும் அம்மையப்பராகப் போற்றி வழிபடும் சத்புத்திர மார்க்கத்தின் நெறி பேணிய அருளாளர். திருநாவுக்கரசு சுவாமிகளின் சமகாலத்தவர். முதல் மூன்று சைவத் திருமுறைகளின் ஞானாசிரியர். முத்தித் தலம் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆச்சாள்புரம் எனும் திருநல்லூர் பெருமணம், திருக்கயிலைப் பெருவாழ்வு பெற்றுய்ந்த திருநட்சத்திரம் வைகாசி மூலம்.
திருநாவுக்கரசர் (அப்பர்):
அவதாரத் தலம் கடலூர் மாவட்டம் - பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவாமூர் (திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாய்மூருக்கும் இத்தலத்திற்கும் சிறிது பெயர் ஒற்றுமை இருப்பினும், இரண்டும் வெவ்வேறு தலங்கள்). சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் திருவதிகை. காலம் 7ஆம் நூற்றாண்டு, ஞான சம்பந்த மூர்த்தியின் சமகாலத்து அருளாளர். அவதாரக் காலம் 81 ஆண்டுகள்.பன்னிரு சைவத் திருமுறைகளுள் 4, 5, 6 திருமுறைகளின் ஞானாசிரியர். தனிப்பெரும் தெய்வமான சிவபரம்பொருளைத் தலைவராகவும், தன்னைத் தொண்டராகவும் கொண்டு வழிபடும் தாச மார்க்கத்தின் வழிநின்ற அருளாளர். சமயக் குரவர் நால்வருள் ஒருவராகப் போற்றப் பெறும் தனிப்பெரும் குருநாதர். இயற்பெயர் மருள் நீக்கியார், திருவதிகை இறைவர் சூட்டியருளிய திருப்பெயர் திருநாவுக்கரசர், ஞான சம்பந்த வள்ளல் பெருமதிப்புடன் அழைத்து மகிழ்ந்த திருப்பெயர் 'அப்பர்'. திருக்கயிலைப் பதம் எய்திய திருநட்சத்திரம் சித்திரை சதயம், முத்தித் தலம் திருப்புகலூர்.
சுந்தரர்:
மேருமலையினும் மேம்பட்ட தவமுடைய புண்ணிய சீலர், கற்ப கோடி வருடங்களுக்கு முன்னமே பிறவியாகிய பெருங்கடலைத் திருவருளின் துணை கொண்டு கடந்து, கயிலை மாமலையில் சிவபரம்பொருளுக்கு அணுக்கத் தொண்டராய் நிலைபெற்றிருந்த உத்தமத் தொண்டர். நம் பொருட்டு மண்ணுலகிற்கு இறைவரால் அனுப்புவிக்கப் பெற்ற வரம்பிலா சீர்மை பொருந்தியவர்.
அவதாரத் தலம் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருநாவலூர். தனிப்பெரும் தெய்வமான சிவமூர்த்தியால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் திருவெண்ணெய்நல்லூர்.
காலம் 7ஆம் நூற்றாண்டின் இறுதியும் 8ஆம் நூற்றாண்டின் துவக்கமும். அம்பிகை பாகனாரிடம் மீளா அடிமைத்திறம் பூண்டு, தோழமை உணர்வொடு பக்தி புரிந்து வழிபடும் தனித்துவமான 'சக மார்கத்தின்' நெறி நின்ற தகைமையாளர். திருத்தொண்டர் புராணமெனும் பெரிய புராணத்தின் பாட்டுடைத் தலைவர்.
தம்பிரான் தோழருக்குத் தேவியர் இருவர் (பரவையார்; சங்கிலி நாச்சியார்), கோட்புலி நாயனாரின் புதல்வியரைத் தம்முடைய குழந்தைகளாகவே ஏற்றருளிய தன்மையினால் நம் நம்பிகளுக்குப் புதல்வியரும் இருவர் (சிங்கடி; வனப்பகை).
திருவாரூர் மேவும் மறைமுதல்வர் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் என வன்தொண்டருக்குத் தோழரும் இருவர்.
அடியவர் பெருமக்களைத் தொகுத்துப் போற்றும் திருத்தொண்டத் தொகையினை அருளிச் செய்த பெருஞ்சிறப்பினால், சிவமூர்த்தியின் அருளாணையால், இந்திரன்; பிரமன்; பாற்கடல் வாசரான ஸ்ரீமகாவிஷ்ணு மற்றுமுள்ள விண்ணவர்கள் யாவரும் எதிர்கொண்டு வரவேற்றுப் போற்றும் தன்மையில், (இறைவர்; உமையன்னை; விநாயகப் பெருமான்; கந்தக் கடவுள் ஆகியோர் மட்டுமே ஆரோகணித்தருளும்) ஈராயிரம் தந்தங்களைக் கொண்ட அயிராவணம் எனும் வெள்ளை யானையில் ஆரோகணித்துத் திருக்கயிலை சென்று சேர்ந்த பெருமகனார்.
பன்னிரு சைவத் திருமுறைகளுள் 7ஆம் திருமுறையின் ஞானாசிரியர். அவதாரக் காலம் 18 ஆண்டுகள், முத்தித் தலம் (கேரள தேசத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள) திருஅஞ்சைக்களம் (தற்கால வழக்கில் திருவஞ்சிக்குளம்). திருக்கயிலைப் பதம் பெற்ற திருநட்சத்திரம் ஆடி சுவாதி.
மாணிக்கவாசகர்:
அவதாரத் தலம் மதுரை மாவட்டத்திலுள்ள திருவாதவூர். சிவபரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறை. தேவார மூவரின் காலத்திற்கு மிகமுற்பட்ட 3ஆம் நூற்றாண்டு காலத்தவர். 8ஆம் திருமுறையான திருவாசகம் மற்றும் திருக்கோவையாரின் ஞானாசிரியர். இயற்பெயர் வாதவூரர் என்று கூறுவர், திருப்பெருந்துறை இறைவர் சூட்டியருளிய திருப்பெயர் 'மாணிக்கவாசகர்'. அவதாரக் காலம் 32 ஆண்டுகள். முத்தித் தலம் தில்லை சிதம்பரம். சிவமுத்தி பெற்றுய்ந்த திருநட்சத்திரம் ஆனி மகம்.