திருநாவுக்கரசர் (திங்களூர் வருகை)

தஞ்சாவூர் மாவட்டத்தில், நவகிரக சிவத் தலங்களுள் சந்திரனுக்குரிய அம்சமாக, சந்திர தேவன் சிவபரம்பொருளை வழிபட்டுப் பேறுபெற்ற திங்களூர் எனும் திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. சிவமூர்த்தி கைலாசநாதராகவும், உமையன்னை பெரியநாயகியாகவும் எழுந்தருளியுள்ள இப்புண்ணிய ஷேத்திரத்தில் அப்பூதி அடிகள் எனும் திருத்தொண்டர் வாழ்ந்து வருகின்றார். 

சிவபிரானிடத்து அடிமைத்திறம் பூண்டிருந்த இப்பெருமகனார் நாவுக்கரசு சுவாமிகளின் மீதும் அதீத பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தார். சுவாமிகளின் அருட்செயல்களை நினைந்துருகுவார், அவர்தம் திருப்பெயரினைக் காதலுடன் ஓதி மகிழ்வார். சுவாமிகளின் திருவடிகளையும் திருப்பெயரையுமே பற்றுக்கோடாகக் கொண்டொழுகி, தம்முடைய புதல்வர்கள்; வீட்டிலுள்ள அளத்தல் கருவிகள்; இல்லப் பிராணிகள் மற்றும் காட்சிப் பொருள் யாவினுக்கும் சுவாமிகளின் திருப்பெயரைச் சூட்டிச் சிவானந்தம் எய்துவார். 

நேரில் தரிசிக்கப் பெறாவிடினும், சுவாமிகளுடைய திருத்தொண்டின் மாண்பையும்; இறைவரால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற மேன்மையையும் கேள்வியுற்று, அவர்தம் திருப்பெயரைக் கொண்டு திருமடம்; தண்ணீர் பந்தல் முதலிய நிலைத்த அறச் செயல்கள் பலவும் அத்திங்களூர்ப் பதியில் புரிந்து வருவார்.  

இந்நிலையில் நாவுக்கரசு சுவாமிகள் திருப்பழனம் எனும் திருத்தலத்தினைத் தரிசித்துப் பரவியவாறே திங்களூரின் எல்லையினை வந்தடைகின்றார். அப்பதியில் இறைவர் முன்னர் தமைஅழைத்தருளிய திருப்பெயரில் பல்வேறு திருப்பணிகள் நடந்தேறி வருவதைக் கண்ணுற்று பெருவியப்பு கொள்கின்றார். வழியில் குளுமை பொருந்திய தண்ணீர் பந்தலொன்றையும் அதனுள் அமுதமாம் தன்மையில் தண்ணீரும் இருப்பது கண்டு அவ்விடத்திற்குச் செல்கின்றார். 

அங்குள்ள அன்பர்களிடம் 'இப்பந்தலை இப்பெயரிட்டு இங்கு அமைத்தவர் யார்?' என்று சுவாமிகள் வினவ, பண்பிற் சிறந்த அவர்களும் 'ஆளுடைய அரசுகளின் திருப்பெயரால் இப்பந்தல் மட்டுமல்லாது, இவ்வூரிலுள்ள சாலை; திருக்குளம்; சோலைகள் என்று இவையாவையும் அமைத்தவர் சொலற்கரிய பெருமை பொருந்திய அப்பூதி அடிகளாவார். இவ்வூரைச் சேர்ந்தவரான அவர் இப்பொழுது தான் தம்முடைய இல்லம் சென்று சேர்வதைக் கண்டோம், அவருடைய மனை இங்கிருந்து மிக அருகிலேயே அமைந்துள்ளது' என்று தன்மையோடு பகர்கின்றனர்,

(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 7)
இப்பந்தர் இப்பெயரிட்(டு) இங்கமைத்தார் யார்என்றார்க்(கு)
அப்பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசெனும் பெயரால்
செப்பரும்சீர் அப்பூதி அடிகளார் செய்தமைத்தார்
தப்பின்றி எங்குமுள சாலைகுளம் காஎன்றார்

(பெரிய புராணம் - அப்பூதி அடிகள் புராணம் - திருப்பாடல் 8 )
என்றுரைக்க அரசு கேட்(டு) இதற்கென்னோ கருத்தென்று
நின்றவரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத்
துன்றியநூல் மார்பரும் இத்தொல்பதியார் மனையின்கண்
சென்றனர் இப்பொழு(து) அதுவும் சேய்த்தன்று நணித்தென்றார்

No comments:

Post a Comment