திருநாவுக்கரசர் (சமணர்கள் கல்லில் பிணைத்துக் கடலில் தள்ளுதல்):

(1)
நாவுக்கரசு சுவாமிகள் சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்றுச் சைவம் பேணிய தன்மையினால், அறிவிலிகளான சமணர்களும்; பல்லவ மன்னனும் சுவாமிகளை மாய்த்து விட பல்வேறு விதங்களில் முயன்று அவையனைத்திலும் தோல்வியையே தழுவுகின்றனர். இறுதியாய் நம் சுவாமிகளைக் கல்லொன்றில் பிணைத்துக் கட்டிக் கடலில் தள்ளுகின்றனர். 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 123)
ஆங்கது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக்கொடு போகிப்
பாங்கொரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்தோர் படகில்
வீங்கொலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான்

(2)
அன்பின் திருவுருவான வாகீசப் பெருந்தகையார் 'எத்தகு நிலை வரினும் எம் தலைவரான சிவபரம்பொருளின் திருவருள் துணை நிற்கும்' எனும் உறுதியுடன், 'சொற்றுணை வேதியன்' எனும் சொலற்கரிய சீர்மை பொருந்திய நமசிவாயத் திருப்பதிகத்தினை அருளிச் செய்கின்றார், 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 125)
அப்பரி(சு) அவ்வினை முற்றி அவர் அகன்றேகிய பின்னர்
ஒப்பரும் ஆழ்கடல் புக்க உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரிசாயினுமாக ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண்தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார்

(3)
முக்கண் முதல்வரின் திருவருளால் அடிகளைப் பிணைத்திருந்த கல் தெப்பமென மிதக்கின்றது. பிணைத்திருந்த கயிறுகளும் தாமாக அறுபட, அக்கல்லின் மீது மெய்த்தொண்டராம் ஆளுடைய அரசுகள் இனிது எழுந்தருளித் தோன்றுகிறார்,

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 128)
அப்பெரும் கல்லும்அங்(கு) அரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலில் செறித்த பாசமும்
தப்பிய(து) அதன்மிசை இருந்த தாவில்சீர்
மெய்ப்பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார்

(4)
கடலரசனான வருணதேவன் முன்செய் தவத்தால் நம் சுவாமிகளைத் தாங்கும் பெரும்பேறு பெற்றுத் திருநாவின் தனியரசரைத் திருப்பாதிரிப்புலியூருக்கு அருகாமையிலுள்ள கரையில் சேர்க்கின்றான்,  

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 131)
வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்(டு) எழுந்தருளுவித்தனன்
பூந் திருப்பாதிரிப்புலியூர்ப் பாங்கரில்

(5)
பாதிரிப்புலியூர்க் கரைக்கு எழுந்தருளி வரும் திருத்தொண்டின் வேந்தரை அப்பகுதியிலுள்ள மெய்த்தொண்டர் குழாத்தினர் பெருமகிழ்வுடன் எதிர்கொண்டு வணங்கிப் போற்றுகின்றனர், அப்பெருமக்கள் எழுப்பும் 'ஹர ஹர' எனும் ஆர்ப்பொலியால் அப்பகுதியே நிறைந்து விளங்குகின்றது, 

(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம்: திருப்பாடல் 132)
அத்திருப்பதியினில் அணைந்த அன்பரை
மெய்த்தவக் குழாமெலாம் மேவி ஆர்த்தெழ
எத்திசையினும் அரவென்னும் ஓசைபோல்
தத்துநீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே

No comments:

Post a Comment