திருநாவுக்கரசர் (நல்லூரில் கிடைக்கப் பெற்ற திருவடி தீட்சை)

(1)
நாவுக்கரசு சுவாமிகள் தல யாத்திரையாகச் செல்லும் வழியில், தஞ்சாவூர் மாவட்டம் - பட்டீஸ்வரத்திற்கு அருகிலுள்ள திருச்சத்திமுற்றத்தினைச் சென்றடைகின்றார். ஆலயக் கருவறையில் எழுந்தருளியுள்ள சிவக்கொழுந்தீஸ்வரப் பரம்பொருளைத் தொழுது, 'என் இன்னுயிர் நீங்குமுன்னர் சிவஞானமேயான உனது திருவடி மலர்களை அடியவனின் சென்னிமிசை பொறித்து அருள்புரிவாய் ஐயனே' என்று உளமுருகி விண்ணப்பித்துப் பணிகின்றார், 
-
(திருச்சத்திமுத்த தேவாரம் - திருப்பாடல் 1)
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன்முன்
பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை போகவிடில்
மூவா முழுப்பழி மூடும் கண்டாய் முழங்கும் தழற்கைத்
தேவா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே.

(2)
இத்தலத் திருப்பதிகத்தின் 6ஆம் திருப்பாடலில், தன் நெஞ்சின் மீதும் திருவடி சூட்டுமாறு இறைவரிடம் வேண்டுகின்றார்,
-
(திருச்சத்திமுத்த தேவாரம் - திருப்பாடல் 6)
வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாள்எந்தன் நெஞ்சத்(து) எழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற்(கு) அருளுதி என்பதிங்(கு) ஆரறிவார்
செம்மை தரு சத்திமுற்றத்(து) உறையும் சிவக்கொழுந்தே.

(3)
சத்திமுற்றத்துறை முதல்வரும் 'நல்லூருக்கு வருக' என்று அசரீரியாய் அறிவித்து அருள் புரிகின்றார், 
-
(பெரிய புராணம் - திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 194)
நாதன் தானும் நல்லூரில் வாவா என்றே அருள்செய்ய

(4)
ஆளுடைய அரசுகளும் அகமிக மகிழ்ந்து அங்கிருந்துப் புறப்பட்டு நல்லூரைச் சென்றடைகின்றார். ஆலமுண்டருளும் ஆதிமூர்த்தி இத்தலத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர்; பஞ்சவர்ணேஸ்வரர் எனும் திருநாமங்களோடு எழுந்தருளி இருக்கின்றார். சுவாமிகள் இறைவரின் திருமுன்பு சென்று தொழுது நிற்கையில், நல்லூர் முதல்வர் 'உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்' என்று என்றருளி, அடிகளின் சென்னிமிசை தன் திருவடி மலர்களைச் சூட்டிப் பேரருள் புரிகின்றார். 

திருநாவின் தனியரசர் இறைவரின் இவ்வருட் செயலால் அகமெலாம் குழைந்துருகி; கண்ணீர் பெருக்கி; நிலமிசை வீழ்ந்தெழுந்து, திருவருள் வெள்ளத்தில் அமிழ்ந்து தன்னிறைவு பெற்றவராய் நல்லூருறை முதற்பொருளைப் போற்றி செய்கின்றார்,
-
(நல்லூர் தேவாரம் - திருப்பாடல் 1)
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே!!!

(5)
பின்னாளில் பல்வேறு தல யாத்திரை சமயங்களில், சுவாமிகள் இந்நிகழ்வினை நினைவு கூர்ந்து; நன்றி பாராட்டிப் போற்றியுள்ளார், 

('ஓசைஒலியெலாம் ஆனாய் நீயே' - திருவையாறு தேவாரம்: திருப்பாடல் 2)
அடியான்என் அடியென்மேல் வைத்தாய் நீயே

('காலனை வீழச் செற்ற' - திருநெய்த்தான தேவாரம்: திருப்பாடல் 1)
காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென்
மேலவா இருக்கப் பெற்றேன்

('நீறேறு திருமேனி உடையான் கண்டாய்' - திருமழபாடி தேவாரம்: திருப்பாடல் 5)
மலர்ந்தார் திருவடிஎன் தலைமேல் வைத்த
    மழபாடி மன்னு மணாளன் தானே

('இடர்கெடுமாறு எண்ணுதியேல்' - திருவாரூர் தேவாரம்: திருப்பாடல் 10)
நலங்கொளடி என்தலைமேல் வைத்தாய் என்றும்

No comments:

Post a Comment