திருஞானசம்பந்தர் (நாவுக்கரசு சுவாமிகளுடனான முதல் சந்திப்பு):

ஞானசம்பந்தப் பெருமானாரும் அப்பர் சுவாமிகளும் மும்முறை (வெவ்வேறு சமயங்களில்) சந்தித்து அளவளாவி மகிழ்ந்துள்ளதாக சேக்கிழார் பெருமானார் பதிவு செய்கின்றார். அவற்றுள் முதல் சந்திப்பு குறித்த சில இனிய குறிப்புகளை இப்பதிவில் நினைவு கூர்ந்து மகிழ்வோம், 

(1)
நாவுக்கரசு சுவாமிகள் சீகாழிப் பிள்ளையாரின் அற்புதங்களைக் கேள்வியுற்று, அவரைத் தரிசித்து வணங்கப் பெரும் காதலோடு சீகாழி நோக்கி எழுந்தருளி வருகின்றார். சுவாமிகளின் வருகையினைக் கேள்வியுறும் சீகாழி வள்ளல் 'முன்செய் தவப்பயனால் சுவாமிகளின் தரிசனமாகிய இப்பேறு கிட்ட உள்ளது' என்று உளத்துள் கருதியவாறு, பெருவிருப்பமொடு சுவாமிகளை எதிர்கொண்டு அழைக்க, தொண்டர் குழாத்தொடு விரைகின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 269)
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்தணைந்தார் எனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடஞ்சூழ் புகலிப் பெருந்தகையாரும்
ஆக்கிய நல்வினைப் பேறென்று அன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெருவிருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில்

(2)
நாவுக்கரசு சுவாமிகளின் திருவேடத்தினைத் தெய்வச் சேக்கிழார் பின்வரும் திருப்பாடலில் அற்புதத் தன்மையில் காட்சிப் படுத்துகின்றார்.

சிந்தையில் (இறைவர் பாலும், அடியவர்களின் பாலும் கொண்டொழுகும்) இடையறா அன்பும், (வயது முதிர்ச்சியின் காரணமாக) திருமேனியில் அசைவும், திருமேனியில் பொருந்தியிருக்கும் கந்தைத் துணியே மிகைபோலும் என்றெண்ண வைக்கும் துறவுக் கோலமும், கைகளில் உழவாரப் படையும், (திருவருளின் திறத்தை எந்நேரமும் நினைந்துருகுவதால்) கண்களில் கண்ணீர் மழையும், திருநீற்றுக் கோலமும் கொண்டு அந்தமில்லாத திருவேடத்தினரான நாவுக்கரசு பெருமானார் எழுந்தருளி வருகின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 270)
சிந்தை இடையறா அன்பும், திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும், கைஉழவாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும், வடிவில் பொலி திருநீறும்
அந்தமிலாத் திருவேடத்து அரசும் எதிர்வந்தணைய

(3)
சுவாமிகளைத் தரிசிக்கும் பிள்ளையார் 'இது நாள் வரையிலும் கருத்தில் வைத்துப் போற்றி வந்த மெய்த்தொண்டரின் திருவேடம் இன்றொரு உருவம் கொன்டது போல் இப்பெரியர் எழுந்தருளி வருகின்றனரே' என்று தொழுதவாறே சுவாமிகளை எதிர்கொள்கின்றார், 

(ஞானசம்பந்தர் புராணம் - திருப்பாடல் 271)
கண்ட கவுணியக் கன்றும் கருத்தில் பரவு மெய்க்காதல்
தொண்டர் திருவேடம் நேரே தோன்றியதென்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்தங்கு அரசும் எதிர் வந்திறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழிஅருள் செய்தார்

(4)
இனி இந்நிகழ்வின் தொடர்ச்சியினை, அப்பர் சுவாமிகள் புராணத்தில் இடம்பெறும் பின்வரும் திருப்பாடலின் வாயிலாக உணர்ந்து மகிழ்வோம்,

சுவாமிகள் தொண்டர்கள் திருக்கூட்டத்தில் விரைந்து முன்னேறிச் சென்று சிவஞானப் பிள்ளையாரின் திருவடிகளை வணங்க, சீகாழி அண்ணலார் தன் மலர்க் கரங்களால் சுவாமிகளை எடுத்துத் தாமும் தொழுது, அதீத மதிப்பும் அன்பும் மேலிட 'அப்பரே' என்று அழைத்தருள, சுவாமிகள் 'அடியேன்' என்று அருளிச் செய்கின்றார், 

(அப்பர் சுவாமிகள் புராணம் - திருப்பாடல் 182)
தொழுதுஅணைவுற்று ஆண்டஅரசு அன்புருகத் தொண்டர் குழாத்திடையே சென்று
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் பணிந்தவர்தம் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்திறைஞ்சி விடையின்மேல் வருவார் தம்மை
அழுதழைத்துக் கொண்டவர்தாம் 'அப்பரே' என, அவரும் அடியேன் என்றார்

No comments:

Post a Comment