திருஞானசம்பந்தர் (மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்):

'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' எனும் சீகாழித் திருப்பதிகம் மிகப் பிரசித்தம். இப்பனுவல் மதுரைத் திருத்தலத்தில் பாடப் பெற்றதற்கான சூழலை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்.

(1)
ஞானசமபந்த மூர்த்தி மதுரையில் அறிவிலிகளான சமணர்களின் திறத்தினை முற்றிலும் அழித்தொழித்துத் திருநீற்றின் பெருநெறியினைப் பாண்டிய தேசமெங்கிலும் பரவச் செய்து, அங்கு சிறிது காலம் தங்கியிருந்து சோமசுந்தரப் பரம்பொருளைப் போற்றி வருகின்றார். 

(2)
இந்நிலையில் தந்தையாரான சிவபாத இருதயர் சம்பந்தப் பிள்ளையாரை மிகவும் நினைந்து, 'பாண்டி நாட்டிற்குச் சென்றுள்ள பிள்ளையாரின் நிலைகுறித்து அறிந்து வருவேன்' என்று சீகாழியிலிருந்து மதுரைத் தலத்திற்குப் பயணம் மேற்கொள்கின்றார்.

(3)
ஆலவாய்த் தலத்தைச் சென்றடைந்து, சொக்கநாதப் பரம்பொருளைத் தொழுது, அப்பதி வாழ் அன்பர்களிடம் பிள்ளையாரின் திருமடம் குறித்து கேட்டறிந்து அங்கு செல்கின்றார். 

(4)
திருமடத்திலுள்ள அன்பர்கள் தந்தையாரின் வருகை குறித்து சிவஞானமுண்ட பிள்ளையாரிடம் விண்ணப்பிக்க, 'எப்பொழுது வந்தருளினார்?' என்று வினவியவாறே பிள்ளையார் மடத்தினின்றும் வெளிவருகின்றார். 

(5)
சிவபாத இருதயர் பிள்ளையாரைத் தொழுதவாறே அருகில் செல்ல, சீகாழி அண்ணலும் தந்தையாரை எதிர்தொழுது மகிழ்கின்றார். இப்பிறவியின் தந்தையாரைக் கண்ட கணத்திலேயே, எப்பிறவிக்கும் தந்தையான, தன்னைப் பிறவித் தளையினின்றும் நீக்கியருளிய தோணிபுரப் பரம்பொருளின் திருவடிகளை நினைகின்றார்,  
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 879):
சிவபாத இருதயர் தாம் முன்தொழுது சென்றணையத்
தவமான நெறியணையும் தாதையார் எதிர்தொழுவார்
அவர் சார்வு கண்டருளித் திருத்தோணி அமர்ந்தருளிப்
பவபாசம் அறுத்தவர்தம் பாதங்கள் நினைவுற்றார்

(6)
தந்தையாரின் முன்னே இரு மலர்க்கரங்களையும் கூப்பியவாறு 'அரிய தவத்தையுடைய பெரியீர், ஏதுமறியா மழலைப் பருவத்தில் சிவஞான அமுதளித்து எமை ஆட்கொண்ட தோணிபுர இறைவரும் அம்மையும் எங்கனம் எழுந்தருளி இருக்கின்றனர்?' என்று உளமுருக வினவுகின்றார்,  
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 880):
இருந்தவத்தோர் அவர்முன்னே இணைமலர்க்கை குவித்தருளி
அருந்தவத்தீர் எனைஅறியாப் பருவத்தே எடுத்தாண்ட
பெருந்தகைஎம் பெருமாட்டி உடனிருந்ததே என்று
பொருந்துபுகழ்ப் புகலியின்மேல் திருப்பதிகம் போற்றிசைத்தார்

(7)
சீகாழி இறைவரின் மீதுள்ள அளப்பரிய காதலினால் பெருமகிழ்ச்சி மேலிட, கண்களினின்றும் நீரானது அருவியாய்ப் பெருகியோட, 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' எனும் சீகாழித் திருப்பதிகத்தினை அருளிச் செய்கின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 881):
மண்ணில்நல்ல என்றெடுத்து மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி
உள்நிறைந்த காதலினால் கண்ணருவி பாய்ந்தொழுக
அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள்செய்தார்
தண்ணறும்பூஞ் செங்கமலத் தாரணிந்த தமிழ்விரகர்
-
(திருக்கழுமலம் - ஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாடல் 1)
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃது உறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

No comments:

Post a Comment