திருஞானசம்பந்தர் (பூந்துருத்தி எல்லையில் நாவுக்கரசு சுவாமிகளுடன் நெகிழ்விக்கும் 3ஆவது சந்திப்பு):

(1)
ஞானசம்பந்த மூர்த்தி நாவுக்கரசு சுவாமிகள் பூந்துருத்தியில் எழுந்தருளி இருப்பதைக் கேட்டறிந்து, அப்ப மூர்த்தியைத் தரிசிக்க பெருவிருப்பம் கொள்கின்றார் ('ஆண்ட அரசினைக் காணும் ஒப்பரிய பெருவிருப்பு மிக்கோங்க' என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு). தொண்டர்கள் புடைசூழ, இறைவர் அருளிய சிவிகையில் ஆரோகணித்துத் திருக்கடையூரிலிருந்து பூந்துருத்திக்கு எழுந்தருளிச் செல்கின்றார்.     

(2)
ஆளுடைப் பிள்ளையார் பூந்துருத்திக்கு அருகாமையில் வருவதனைக் கேள்வியுறும் அப்பர் பெருமானார் 'அடியவனை ஆளாக உடைய சீகாழிப் பிள்ளையாரை எதிர்கொண்டு வணங்குவது முற்பிறவிகளின் நல்வினையால் எய்தியுள்ள பெரும் பேறன்றோ' என்று அகமும் முகமும் மலர்கின்றார், 
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 931):
அந்தணர் சூளாமணியார் பூந்துருத்திக்கு அணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டருளி
நந்தமை ஆளுடையவரை நாம்எதிர்சென்று இறைஞ்சுவது
முந்தைவினைப் பயனென்று முகமலர அகமலர்வார்

(3)
விரைந்து தல எல்லைக்குச் சென்று, சம்பந்தப் பிள்ளையார் எழுந்தருளி வரும் திருக்கூட்டத்தின் முன்பாக நிலமிசை வீழ்ந்து பணிந்து, பிள்ளையாரின் பாலுள்ள அன்பினால் நெகிழ்ந்துருகியவாறு அக்கூட்டத்துள் சென்று கலக்கின்றார் ('உள்ளம் உருக்கியெழு மனம்பொங்கத் தொண்டர் குழாத்துடன் அணைந்தார்' என்பது தெய்வச் சேக்கிழார் வாக்கு).

(4)
சிவஞானமுண்ட பிள்ளையாரின் சிவிகையைத் தாமும் தாங்கியவாறு உடன் செல்கின்றார். சம்பந்தப் பிள்ளையாரின் உள்ளத்தில் அக்கணமே திருவருட் குறிப்பினால் பெருஉணர்ச்சியொன்று தோன்றுகின்றது,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 934):
வந்தணைந்த வாகீசர் வண்புகலி வாழ்வேந்தர்
சந்தமணித் திருமுத்தின் சிவிகையினைத் தாங்கியே
சிந்தைகளிப் புறவருவார் திருஞான சம்பந்தர்
புந்தியினில் வேறொன்று நிகழ்ந்திடமுன் புகல்கின்றார்

(5)
'அப்பர் இப்பொழுது எங்கு உள்ளார்' என்று சீகாழி அண்ணல் வினவியருள, திருத்தொண்டின் வேந்தரான சுவாமிகள், 'ஒப்பரிய தவம் செய்தேன், ஆதலின் உம்முடைய திருவடிகளைத் தாங்கிவரும் பேற்றினைப் பெற்று உம்முடனே வருகின்றேன்' என்று அருளிச் செய்கின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 935):
அப்பர்தாம் எங்குற்றார் இப்பொழுது என்றருள் செய்யச்
செப்பரிய புகழ்த் திருநாவுக்கரசர் செப்புவார்
ஒப்பரிய தவம்செய்தேன் ஆதலினால் உம்அடிகள்
இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான் என்றார்

(6)
தாண்டக வேந்தரின் அருள்மொழிகளைச் செவியுறும் பிள்ளையார் பெரிதும் அஞ்சி அக்கணமே சிவிகையினின்றும் நீங்கி, 'அப்பரே, எதன் பொருட்டு இவ்விதமாய்ச் செய்தருளினீர்?' என்று பதைப்புற்றுச் சுவாமிகளைப் பணிகின்றார். நாவசரசுப் பெருந்தகையாரும், 'சிவஞானம் உண்ட பிள்ளையாருக்கு இச்செயலை விடவும் செய்யத் தக்கதொரு தொண்டு உள்ளதோ?' என்று எதிர் வணங்கி நெகிழ்கின்றார்,
-
(திருஞானசம்பந்தர் புராணம்: திருப்பாடல் 936):
அவ்வார்த்தை கேட்டஞ்சி அவனியின்மேல் இழிந்தருளி
இவ்வாறு செய்தருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும்
செவ்வாறு மொழிநாவர் திருஞானசம்பந்தர்க்கு 
எவ்வாறு செயத்தகுவது என்றெதிரே இறைஞ்சினார்

No comments:

Post a Comment