சுந்தரர் (சோமாசி மாற நாயனாரின் சிவ வேள்வியில் சிவபெருமான் தோன்றினாரா?):

சோமாசி மாற நாயனார் திருவாரூரில் சுந்தரரிடம் 'அம்பர் மாகாளத் திருத்தலத்தில் அடியவன் புரியவிருக்கும் சிவவேள்விக்குத் தியாகேச மூர்த்தி உமையன்னையோடு எழுந்தருளி வருதற்கு, தம்பிரான் தோழராகிய தாம், எளியேனின் மீது கருணை கொண்டு, பொன்னார்த் திருவடிக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்' என்று வணங்கி வேண்டியதாகக் குறிப்பொன்று உண்டு. இந்நிகழ்வு பெரிய புராணத்தில் குறிக்கப் பெறவில்லை, போதுமான தரவுகள் இல்லாதிருந்த காரணத்தால் சேக்கிழார் பெருமான் இதனைப் பதிவு செய்யாமல் விடுத்திருக்கக் கூடும். எனினும் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் அருளியுள்ள திருஅம்பர் புராணத்தின் 'மாற நாயனார் வழிபடு படலம்' எனும் பகுதி இந்நிகழ்வினை விரித்துப் பேசுகின்றது. 

இனி நிகழ்விற்குள் செல்வோம், குறிப்பிட்ட தினத்தன்று, சுந்தரரின் விண்ணப்பித்தினை ஏற்று, சிவ வேள்வி நடந்தேறும் வளாகத்தில் தியாகேசப் பரம்பொருள், அழுக்குடையோடும்; கள்ளுண்ட நாற்றத்துடனும்; மாமிசத்தினைச் சுமந்தவாறு வேடுவ இனத்தவரின் வடிவில் எழுந்தருளி வருகின்றார். உடன் அம்பிகையும் வேடுவச்சியின் வடிவு தாங்கி வருகின்றாள். அறத்துக்குச் சிறிதும் பொருந்தாத கள்; மாமிசம் இவைகளோடுத்  தொடர்புற்று வரும் இவ்விருவரையும் கண்டு அங்குள்ள வேதியர் திகைத்து விலகுகின்றனர் (கள்ளுண்ணாமை; புலால் உண்ணாமை ஆகிய அறங்கள் குறித்துத் திருமந்திரம்; திருக்குறள் ஆகியவை விரித்துப் பேசுகின்றன).   

'நால்வேதங்களை நான்கு நாய்களாகக் கொண்டு இறைவர் வருகை புரிந்தார்' என்றொரு செய்தி நிலவி வந்தாலும், தலபுராண ஆசிரியர் அவ்வாறு குறிக்கவில்லை (எனினும் அவ்விதம் தோன்றியிருக்கலாம் என்று யூகிக்க இடமுண்டு). சோமாசி மாற நாயனார் சுந்தரருக்கு அருகில் சென்று, 'இவ்விதமான தோற்றத்துடன் எழுந்தருளி வந்திருப்பது நமையாளும் இறைவர் என்றே தோன்றுகின்றது, தம்முடைய கூற்று என்னவோ?' என்று பணிந்து விண்ணப்பிக்கின்றார். சுந்தரரும் திருவருட் செயலை உணர்ந்து மகிழ்ந்து, வேடுவர் வடிவிலிருந்த இறைவரிடம் சென்று உரையாடுவதாகத் தலபுராணம் விவரிக்கின்றது.    

விநாயக மூர்த்தியே சோமாசி மாற நாயனாரிடம் 'வருகை புரிந்திருப்பது இறைவரே' என்று அறிவுறுத்துவதாக மற்றொரு செய்தியொன்றும் உண்டு, எனினும் இக்குறிப்பும் தலபுராணத்தில் இடம்பெறவில்லை. விநாயகப் பெருமான் அனைவராலும் விரும்பப்படும், எளிதில் அணுகி வழிபடக் கூடிய, எளி வரும் தெய்வமாக விளங்குவதாலோ என்னவோ பலவேறு தலபுராணச் செய்திகளில் விக்னேஸ்வர மூர்த்தியைத் தொடர்பு படுத்தி விடுகின்றனர். 

நிகழ்வின் இறுதியில் சோமாசி மாற நாயனார் வேடுவர் வடிவிலிருந்த சிவமூர்த்தியிடம், 'இவ்வடிவு நீங்கி சுயஉருவுடன் திருக்காட்சி தந்தருள வேண்டும்' என்று விண்ணப்பிக்க, தனிப்பெரும் தெய்வமான தியாகேசப் பரம்பொருள் அம்பிகையோடு கூடிய அற்புதத் திருக்கோலம் காட்டியருளிப் பின் திருவுருவம் மறைந்ததாக தலபுராணம் விவரிக்கின்றது. 

ஆண்டுதோறும் வைகாசி ஆயில்யத்தில், 'இத்தல புராணச் செய்தியினை அடிப்டையாகக் கொண்டு, அம்பர் மாகாளத் திருத்தலத்தில் உற்சவமொன்று நிகழ்ந்தேறி வருகின்றது' என்பது மற்றொரு சுவையான குறிப்பு.

No comments:

Post a Comment