முருகப் பெருமானின் திருஅவதாரம் இமயத்திலுள்ள சரவணப் பொய்கையில் நிகழ்ந்தேறிய பிறகு, கார்த்திகைப் பெண்களால் சிறிது காலம் வளர்க்கப் பெற்று வருகின்றார். பின்னர் சிவபெருமான் உமாதேவியாரோடு குமாரக் கடவுளைத் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு அப்பொய்கைக்கு நேரில் எழுந்தருளி வருகின்றார். அச்சமயத்தில் உடன் சென்ற எண்ணிறந்தோரைப் பட்டியலிடுகையில், நம் ஆலால சுந்தரரையே கச்சியப்ப சிவாச்சாரியார் முதலாவதாகக் குறிக்கின்றார் (இது ஆலால சுந்தரர் நம்பியாரூரராக திருநாவலூரில் அவதரிப்பதற்கு எண்ணில் கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட புராண கால நிகழ்வு),
பின்வரும் திருப்பாடலில், 'பாற்கடல் கடைந்த சமயத்தில், எல்லையில்லாது எழுந்த ஆலகால விஷத்தினைத் தம்முடைய கரத்தினில் அடக்கிச் சென்று சிவபெருமானிடம் அளித்த ஆலால சுந்தரர் மற்றுமுள்ள உருத்திர கணங்கள் யாவரும் இருமருங்கிலும் சூழ்ந்திருந்து போற்றியவாறு உடன் சென்றனர்' என்று பதிவு செய்கின்றார் கச்சியப்ப சிவாச்சாரியார்,
(உற்பத்தி காண்டம் - சரவணப் படலம் - திருப்பாடல் 7)
அந்தமில் விடத்தினை அடக்கு கையுடைச்
சுந்தரன் ஆதியாம் தொல் கணத்தினோர்
எந்தைதன் உருவு கொண்டிருந்த மேலவர்
வந்திரு மருங்குமாய் வழுத்தி ஈண்டினார்
'முருகப் பெருமானை முதன்முதலில் இறைவர்; இறைவியோடு சென்று நம் சுந்தரர் தரிசித்துள்ளார்' எனும் குறிப்பு எவ்வளவு இனிமையானது (வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி)!!!
No comments:
Post a Comment