சுந்தரர் (மூவேந்தருடன் மும்முறை மேற்கொண்ட திருத்தல யாத்திரை):

சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாருடன் பல்வேறு திருத்தலங்களைத் தரிசித்துப் பரவியவாறே மதுரை மாநகரைச் சென்றடைகின்றனர். பாண்டிய மன்னர் இரு அருளாளர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு வரவேற்கின்றார். பாண்டிய மன்னரின் மகளாரை மணந்திருந்த சோழ மன்னரும் அச்சமயத்தில் அங்கிருக்க, மூவேந்தருடனும் சுந்தரர் ஆலவாய்த் திருக்கோயிலுள் சொக்கநாதப் பரம்பொருளைத் தரிசித்துப் பணிகின்றார். 

பாண்டிய வேந்தரின் உபசரிப்பினை ஏற்றுச் சில தினங்கள் அவர்தம் அரண்மனையில் தங்கியிருந்துப் பின்னர் மூவேந்தருடனும் சுந்தரனார் திருப்பூவணம் எனும் தலத்தினைத் தரிசித்துப் பின் மதுரைக்கு மீள்கின்றார். பின்னர் 2ஆம் யாத்திரையாக, வேந்தர் மூவருடனும் திருஆப்பனூர்; திருவேடகம் முதலான தலங்களைத் தரிசித்துப் பின் மீண்டும் மதுரைக்கு எழுந்தருளி வருகின்றார். பின்னர் சில தினங்களிலேயே 3ஆம் முறையாக, சேர; சோழ; பாண்டியருடன் திருப்பரங்குன்றம் சென்று தொழுகின்றார்.

'கோத்திட்டையும் கோவலும் கோயில்கொண்டீர்' என்று துவங்கும் திருப்பதிகத்தினால் பணிந்தேத்தி, 'அடிகேள் உமக்காட்செய அஞ்சுதுமே' என்று போற்றுகின்றார். இறுதித் திருப்பாடலில்,  மூவேந்தருடன் இத்தல தரிசனத்தை மேற்கொண்டதற்கான அகச் சான்றினைப் பதிவு செய்கின்றார், 

(சுந்தரர் தேவாரம் - திருப்பரங்குன்றம் - திருப்பாடல் 11)
அடிகேள் உமக்காட்செய அஞ்சுதுமென்றமரர் பெருமானை ஆரூரன்அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர்முன்னே மொழிந்தாறுமோர் நான்குமோர் ஒன்றினையும்
படியாஇவை கற்று வல்லவடியார் பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கும் ஓர் கோவுமாகிக் குலவேந்தராய் விண் முழுதாள்பவரே!!!

சேரமான் பெருமாள் நாயனாரும்; மற்றுமுள்ள இரு தேச வேந்தர்களும், சுந்தரனாரின் இவ்வற்புதப் பனுவலைச் செவியுற்று, 'இறைவற்குத் திருத்தொண்டாற்றும் மேன்மை இத்தன்மையதோ?' என்று திருத்தொண்டின் அருமைப்பாட்டினை உள்ளவாறு உணர்ந்து அஞ்சி வன்தொண்டரின் திருவடி தொழுதுப் போற்றுகின்றனராம், 

(கழறிற்றறிவார் புராணம் - திருப்பாடல் 104)
இறைவர் திருத்தொண்டுபுரி அருமையினை இருநிலத்து
முறைபுரியும் முதல்வேந்தர் மூவர்களும் கேட்டஞ்சி
மறைமுந்நூல் மணிமார்பின் வன்தொண்டர் தமைப்பணிந்தார்
நிறைதவத்தோர் அப்பாலும் நிருத்தர்பதி தொழநினைந்தார்

இங்கிருந்து பாண்டிய; சோழ மன்னர்கள் திருத்தொண்டர் இருவரிடமும் விடைபெற்று மதுரைக்குத் திரும்பிச் செல்ல, நம் சுந்தரனார் தம்முடைய தோழராகிய சேரமான் நாயனாருடன் திருத்தல யாத்திரையை மேலும் தொடர்கின்றார்.

No comments:

Post a Comment