சுந்தரர் (மகிழ மரத்தடியிலொரு மண வாக்கு):

சங்கிலியாருக்கு வாக்களிக்க வருகையில், சிவலிங்கத் திருமேனியினின்றும் நீங்கித் தல விருட்சமான மகிழ மரத்தில் எழுந்தருளி இருக்குமாறு சுந்தரர் வேண்ட, அதற்கிசைந்தருளும் சிவபெருமான் சங்கிலியாரிடமும் இந்த இரகசியத்தை அறிவித்து விடுகின்றார். நடந்தவையறியாமல் ஆலயம் புகும் சுந்தரரிடம் சங்கிலியாரின் தோழியர், மகிழுக்கடியிலேயே உறுதியளிக்குமாறு கூற, வேறுவழியின்றி அதற்கு உடன்படும் வன்தொண்டர், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அம்மகிழ மரத்தினை மும்முறை வலம் வந்து, 'இவ்விடம் விட்டு அகலேன்' என்று, குறைவிலாத தவமுடைய சங்கிலியார் காணுமாறு உறுதி கூறுகின்றார்.  

(ஏயர்கோன் கலிக்காமர் புராணம் - திருப்பாடல் 260)
தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காண
மூவாத திருமகிழை முக்காலும் வலம்வந்து
மேவாதிங்கியான்அகலேன் எனநின்று விளம்பினார்
பூவார்தண் புனற்பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.

No comments:

Post a Comment