சுந்தரரின் வரலாற்றினை, 'ஆலால சுந்தரர் திருக்கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டு புரிந்து வருகின்றார்' எனும் இடத்திலிருந்துத் தம்முடைய பெரிய புராணத்தில் விவரிக்கத் துவங்குகின்றார் தெய்வச் சேக்கிழார். எனில் அதற்கு முன்பான சுந்தரரின் தோற்றம் குறித்தும் அவர் எவ்விதம் அப்பெரும்பேற்றினைப் பெற்றார் என்பது குறித்தும் வினாக்கள் எழுமல்லவா? பரஞ்சோதி முனிவர் அருளியுள்ள திருவிளையாடல் புராணத்திலிருந்து இவற்றிற்கான விடைகளை ஒருவாறு பெற முயல்வோம்,
திருக்கயிலையிலுள்ள மண்டபமொன்றில் எழுந்தருளியிருந்த முக்கண் முதல்வர், தனக்கு நேரெதிரே அமைந்திருந்த கண்ணாடியொன்றில் தமது சுந்தரச் சாயா வடிவத்தைப் பார்த்து 'சுந்தரா வருக' என்று அழைத்து அருள் புரிகின்றார். அதனின்றும் மூன்று கண்களோடும்; நான்கு தோள்களோடும்; பிறை முடியுடனும் சிவ சுவரூபியாய் சுந்தரனார் வெளிப்பட்டு ஆதிப் பரம்பொருளை வணங்கி நிற்கின்றார். இனி சுந்தரரின் தோற்றம் குறித்த இச்செய்தியினைப் பின்வரும் திருவிளையாடல் புராண நிகழ்வில் கண்டுணர்ந்து மகிழ்வோம்,
ஆலவாய் அரசியான அன்னை ஸ்ரீமீனாக்ஷிக்கும் சுந்தரேஸ்வரப் பரம்பொருளுக்கும் நடந்தேறிய திருமண நிகழ்வில், 'நான்மறை நாயகருக்கு அருகாக, திருநீற்றுப் பேழையும் திருமாலையும் சுந்தரர் எடுத்தேந்துகின்றார்' என்று விவரிக்க வரும் பரஞ்சோதி முனிவர், 'ஆடியின் நிழல் போல வந்த சுந்தரன்' என்று பதிவு செய்கின்றார் ('ஆடி' எனும் பதம் கண்ணாடியைக் குறிக்க வந்தது).
(திருவிளையாடல் புராணம்: மதுரைக் காண்டம் - திருமணப் படலம்):
பந்த நான்மறைப் பொருள் திரட்டென வடபாடல் செய்தெதிர் புட்ப
தந்தன் ஏத்த வானுயிர் உணஉருத்தெழு தழல் விடத்து எதிர்நோக்கும்
அந்தம் ஆதியிலான் நிழல் வடிவமாய் ஆடியின் நிழல்போல
வந்த சுந்தரன் சாத்துநீறொடு திருமாலையும் எடுத்தேந்த
'சிவபெருமானின் சாயா வடிவம்' என்று மேலோட்டமாகக் குறிக்கப் பெற்றிருப்பினும், 'வெளிப்பட்ட அத்திருவுருவம் எவராக இருக்கக் கூடும்?' என்பது குறித்துச் சிறிது சிந்திப்போம். சைவப் பெருஞ்சமயம் 'இல்லது தோன்றாது! உள்ளது அழியாது' எனும் சற்காரிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. முன்பு எக்காலத்திலும் இல்லாத எந்தவொரு ஆன்மாவும் நூதனமாகப் புதிதாகத் தோன்றி விட முடியாது எனில் வெளிப்பட்ட சிவசுவரூபம் இறைவனே என்று கொள்ளலாமா எனில் அதுவும் இயலாது. தனிப்பெரும் தெய்வமான சிவபெருமான் என்றுமே தொண்டினை ஏற்றருளும் நிலையிலுள்ள பேராற்றல், ஆன்மாக்களோ அடிமைத் திறம் பூண்டு ஆதிப் பரம்பொருளான முக்கண் முதல்வருக்குத் தொண்டாற்றும் தன்மையில் விளங்குபவை.
சாலோக்கியம்; சாயுச்சியம்; சாமீப்பியம்; சாரூப்பியம் ஆகிய நான்கு முத்தி வகைகளுள் எவ்வகை முத்தியிலும் ஆன்மாக்கள் இறைவனாகி விடுவதில்லை, மாறாக மும்மலமும் நீங்கப் பெற்றுச் சிவானந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தவாறு தனிப்பெரும் தலைவரான சிவமூர்த்திக்குத் தொண்டாற்றி வருவர். இதனை 14 சைவ சாத்திரங்களுள் ஒன்றான திருவுந்தியார் பின்வருமாறு பேசுகின்றது,
'அவன் இவன் ஆனது அவனருளால் அல்லது இவன் அவன் ஆகான் என்று உந்தீபற
என்றும் இவனே என்று உந்தீ பற'
எனில் வெளிப்பட்ட சுந்தரனார் முன்னமே சிவ சாரூப முக்தி பெற்றிருந்த முத்தான்மாக்களில் ஒருவர் என்பது தெளிவு. பிறவாப் பெருநெறி எய்தியுள்ள ஆன்மாக்கள் யாவருமே சிவபெருமானின் சாயா வடிவங்களே எனினும் நம் சுந்தரனாரின் கீர்த்தி அளவிட இயலாதது. நான்முகக் கடவுள் உள்ளிட்ட தேவர்கள் யாவரும் 4ஆம் பிரகாரத்தில் பணிந்துப் போற்றியிருக்க நம் சுந்தரனார் மட்டுமே அம்மையப்பருக்கு அருகாக நின்றிருந்து அணுக்கத் தொண்டாற்றும் பேறு பெற்றவராவார் (சிவ சிவ).

No comments:
Post a Comment