வடலூர் வள்ளலார் தம்முடைய திருவருட்பா 4ஆம் திருமுறையில் சுந்தர மூர்த்தி நாயனாரைப் போற்றி 'ஆளுடைய நம்பிகள் அருள்மாலை' எனும் அற்புதத் தொகுப்பினை அருளியுள்ளார். அப்பனுவலிலிருந்து சில திருப்பாடல்களை இப்பதிவினில் சிந்தித்து மகிழ்வோம்,
2ஆம் திருப்பாடலில் ஆற்றிவிட்டுத் குளத்திலெடுத்த அற்புதத்தையும், 3ஆம் திருப்பாடலில் முதலை வாயிலிருந்து மதலையை மீண்டெழச் செய்த சிறப்பினையும், 4ஆம் திருப்பாடலில் திருவதிகையில் சிவபெருமானால் திருவடி சூட்டப் பெற்ற பெறற்கரிய பேற்றினையும் போற்றுகின்றார்.
5ஆம் திருப்பாடலில், வன்தொண்டர் திருவாரூர் இறைவரைப் பிரிந்திருக்க மாட்டாதவராய் ஒற்றியூரிலிருந்து பாடிய, 'பத்திமையும் அடிமையையும்' எனும் திருப்பதிகத்திலுள்ள, 'ஏழிசையாய் இசைப்பயனாய்' எனும் 7ஆம் திருப்பாடலின் அற்புதப் பொருளை எண்ணுந்தோறும் , 'கருவி கரணங்கள் யாவும் ஒருமையுற்றுக் கரைந்துருகுகின்றது' என்று நெகிழ்கின்றார் வள்ளலார்,
(திருவருட்பா - ஆளுடைய நம்பிகள் அருள்மாலை - திருப்பாடல் 5)
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
ஆழ்நினைத்திடில் அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
தூழியல் இன்புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே
6ஆம் திருப்பாடலில், சுந்தரர், ஸ்ரீமகாவிஷ்ணுவும், நான்முகக் கடவுளும், தேவேந்திரனும் சேரமான் பெருமாள் நாயனாரும் காணுமாறு, சிவபெருமான் அனுப்புவித்த 'அயிராவணம்' எனும் வெள்ளை யானையில் ஆரோகணித்துத் திருக்கயிலைக்கு எழுந்தருளிச் சென்ற அற்புதத் திருக்காட்சியைத் தரிசிக்கும் பெரும்பேறு தனக்கு வாய்க்கவில்லையே என்று பெரிதும் ஏங்கிப் பாடுகின்றார்,
(திருவருட்பா - ஆளுடைய நம்பிகள் அருள்மாலை - திருப்பாடல் 6)
வான்காண இந்திரனும் மாலயனும் மாதவரும்
தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.
7, 8 திருப்பாடல்களில், சுந்தரர் தேவாரத் திருப்பதிகங்களின் மேன்மையையும், 9ஆம் திருப்பாடலில் ஆதிப் பரம்பொருளான சிவமூர்த்தியைத் தோழராகப் பெற்ற சீர்மையினையும் போற்றித் துதிக்கின்றார்.
10ஆம் திருப்பாடலில், 'பரவையாருடனான உள்ளப் பிணக்கினை முற்றுவிக்கத் திருவாரூர் இறைவரையே, ஓரிரவு முழுவதும் திருவீதிகளில் தூதாக நடப்பித்த சுந்தரரின் தவச்சிறப்பினைத் தெய்வங்களாலும் அளவிட்டுக் கூறிவிட இயலாது' என்று வியந்து போற்றுகின்றார்,
(திருவருட்பா - ஆளுடைய நம்பிகள் அருள்மாலை - திருப்பாடல் 10)
பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்எனத்
தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே!!!
No comments:
Post a Comment