சுந்தரரும் சேரமான் நாயனாரும் மலைநாட்டிற்குச் செல்லும் வழியில், திருவையாறு தலத்தினைத் தரிசிக்க விழைகின்றனர். காவிரியாற்றின் பெருவெள்ளப் பெருக்கினால் கரையைக் கடக்க இயலாத சூழலங்கு உருவாக, சுந்தரர் ஐயாறுறைப் பரம்பொருளைத் தரிசிக்கும் தவிப்புடன், 'பரவும் பரிசொன்றறியேன்' எனும் திருப்பதிகத்தினால் போற்றுகின்றார், 'ஐயாறுடைய அடிகளோ' என்று உளமுருக அழைத்துத் திருவருளின் துணையினை வேண்டி நிற்கின்றார்.
ஐயாறு இறைவரின் திருவருள் நோக்கத்தால், விண்ணளவு பெருக்கெடுத்து வரும் காவிரியாற்றின் மேற்புறம் பளிங்கு போன்று அந்நிலையிலேயே உறைந்து நிற்க, மற்றொரு புறம் ஆற்று நீர் வடிந்த நிலையில் பெருகியோட, இடையில் குளிந்த மணற்பரப்பொன்று உருவாகித் திருத்தொண்டர்களுக்கு நல்வழியினைக் காட்டுகின்றது.
(சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: திருப்பாடல் 136):
விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பாற் பளிக்கு வெற்பென்ன
நண்ணி நிற்கக் கீழ்பால்நீர் வடிந்த நடுவு நல்லவழி
பண்ணிக் குளிர்ந்த மணற்பரப்பக் கண்ட தொண்டர் பயில்மாரி
கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகம் கலக்கக் கை அஞ்சலி குவித்தார்
சுந்தரரும்; சேரமான் நாயனாரும்; உடன் சென்றிருந்த திருத்தொண்டர் யாவரும் வழிபாடு முடித்துத் திரும்பும் வரையிலும் (சுமார் 4 மணி நேரம் என்றொரு கணக்கிற்கு வைத்துக் கொண்டாலும்), அவ்விண்ணுயர் வெள்ளப் பெருக்கு உறைந்த அந்நிலையிலேயே விளங்கி இருந்ததென்று நம் தெய்வச் சேக்கிழார் குறிக்கின்றார். எனில் தம்பிரான் தோழரின் திருவடிச் சிறப்பினையும், இறைவர் வன்தொண்டருக்காக நிகழ்த்தி அருளிய இவ்வற்புதத்தையும் என்னென்று போற்றுவது?
No comments:
Post a Comment